தமிழ்மணி

வேர்களைத் தேடி...!

ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி''... என்று வாழ்த்துகிற மரபு தமிழர்தம் வாழ்க்கையில் உண்டு. வாழையடி வாழையெனத் தம் வம்சம் தழைக்க வாழ்த்துகிற போதெல்லாம் இத்தொடர் கண்டிப்பாய் இடம் பெறும்.

கிருங்கை சேதுபதி

ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி''... என்று வாழ்த்துகிற மரபு தமிழர்தம் வாழ்க்கையில் உண்டு. வாழையடி வாழையெனத் தம் வம்சம் தழைக்க வாழ்த்துகிற போதெல்லாம் இத்தொடர் கண்டிப்பாய் இடம் பெறும்.

மண்ணுக்கு மேலே தலைகாட்டும் மெல்லிய புல்தொடங்கி, மண் மாதாவுக்கு மகுடம் சூட்டுவது போல் எழுந்த ஆலமரம் வரைக்கும் இடையிலான எல்லாத் தாவர வர்க்கங்களையும் இணைத்துப் பார்க்க, இத்தொடர் இடம் கொடுக்கிறது.

""புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி...'' என்று மாணிக்கவாசகர் பட்டியலிட்டுக்காட்டும் பிறவிப் பெருந்தொடர் நிலை கொள்வதும் "இத்தாவர சங்கமத்துள்'தான்! என்றாலும், தெய்வீகமான வில்வத்தையோ, பழந்தமிழ்நாட்டு மூவேந்தர்கள் அடையாளமாகச் சூட்டிக்கொண்ட வேம்பு, அத்தி, பனை முதலான மரங்களையோ, திருத்துழாய் (துளசி), தூதுவளை முதலிய செடிகளையோ, கொடி வர்க்கங்களையோ குறிப்பிடாமல் "ஆலையும் அறுகையும்' முன்னிறுத்திய இந்த வாழ்த்து வழக்கம் சொல்ல வருகிற விஷயம் - அதன் "வேர்ப்பகுதி'தான்!

ஆணிவேர் இற்று உயிரற்றுப் போனாலும், பக்கவேர்களும், சல்லி வேர்களும் பாதுகாத்துத் தாங்கும் மரவர்க்கத்தின் மாமன்னன் ஆலமரம். மூலவேர் பழுதானாலும், நீள விழுதுகள் நீட்டிச் சில நூற்றாண்டு காலம் வாழும் வல்லமையுடையது. மாமன்னர் புடைசூழத் தங்கி வாழும் அரண்மனை ஒத்தது அது. ஆக, தானும் வாழ்ந்து தன்னிழலில் பிற உயிர்களும் வாழ உதவிடும் தகுதிப்பாடு உடையது. பெருக வாழும் பேராண்மையாளர்கள்

தம் சுற்றம் பேணி, வையத்துள் வாழ்வாங்கு வாழ - ஆலமர வேரும் விழுதுகளும் பாடமாகின்றன!

அடுத்து அறுகு, புல்லிய (சிறிய) வர்க்கம் என்பதால் புல். அதைவிட எப்போதும் பூமித்தாயைப் புல்லி (தழுவி)க்கிடப்பதாலும் இது புல். "புல்லிக்கிடந்தேன் புடைபெயர்ந்தேன்' என்று காமத்துப் பால் தலைவி தன்னுணர்வு விரிக்கும் வள்ளுவ வாக்கையும், "பொருந்துறப் புல்லுக' என்று அனுமனுக்கு இராமர் உரைத்ததாய்ச் சொன்ன கம்ப வாக்கையும் கவனத்தில் கொண்டால் இதன் பெருமை இனிது விளங்கும்.

பேயாய் ஆட்டுவிக்கும் பெரும்புயற் காலங்களில் ஆலமரம்கூட அடியற்று வீழ்ந்துவிடும். ஆனால், எந்தப் பெரும் புயலும் இச்சின்னஞ்சிறு புல்லை ஆட்டிப் பார்த்து, பின் அடிபணிந்து போகும் என்பதுதான் இயற்கை.

அதுமட்டுமல்ல, பன்னெடுங்காலக் கோடை வெப்பத்தில் கண்ணுக்குப் புலனாகாது கரந்து இருக்கும் அறுகு, மழைக்குப்பின் மெல்லத் தலை காட்டுமே, 'விசும்பின் துளிவீழத் தலைகாட்டும் பசும்புல் அழகை' புல்லின் இயல்பென்றோ மண்ணின் மாண்பென்றோ சொல்லாமல் "வான் சிறப்பு' என்று வள்ளுவர் கொண்டாடுகிறாரே, அதுதான் வாழ்க்கைச் சிறப்பும்!

இது "சிறிய சுருக்கத்து' நிலையிலும் செம்மாந்த வாழ்வுக்குப் பொருத்தமாய் முன்னெடுத்துக் கொள்ள வேண்டிய சான்று.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு (963)

என்ற வள்ளுவர் வாக்குக்கு, அறுகும் ஆலும் பக்கம் பக்கமாய் நின்று பாடம் புகட்டும்போது வேர்களின் வீரியம் புரிகிறதல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

SCROLL FOR NEXT