தொல்காப்பியத்தில், தலைவி பற்றிக் கூறுமிடங்கள் பல உள்ளன. அகத்திணை மாந்தர்களுள் ஒருத்தியாக - முதன்மையானவளாக அவள் குறிக்கப்படுகிறாள். களவிலும் கற்பிலும் அவளுக்கு இன்றியமையாத இடமுண்டு. தொல்காப்பியர் கூறும் தலைவியின் இயல்பு, வயது, ஒழுக்கம் ஆகியவற்றை இனி விரிவாகக் காண்போம்.
தலைவியின் இயல்பு
தொல்காப்பியர் தலைவியின் இயல்புகளாக "குடிப்பிறப்பு, அதற்கேற்ற நல்லொழுக்கம், ஆள்வினைத் தன்மை, பருவம், வடிவம், அழகை வாயிலாகக்கொண்டு நிகழும் அன்பு, உள்ளத்தை ஒருவழிப்படுத்துதல், அருள் உடையவராய் இருத்தல்' முதலிய பத்து குணங்களிலும் தலைவி, தலைவனோடு ஒத்திருப்பாள் என்கிறார். அத்துடன் இயல்பான குணங்களான அச்சம், நாணம், பேதைமை ஆகியவையும் அவளது இயல்பாகும் என்பதையும், வாயில்கள் கூற்றின் வழியாக தலைவியின் மாண்பமைந்த குணங்களையும் புலப்படுத்தியுள்ளார்.
""கற்புங் காமமும் நற்பால் ஒழுக்கமும்,
மெல்லியற் பொறையும், நிறையும், வல்லிதின்
விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்,
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்''(கற்பியல்:11)
ஒழுக்கம்
தலைவி, தலைவனோடு கூடும் களவொழுக்கம் நான்கு வகையாகக் கூறப்பட்டுள்ளது. அவை இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், தோழியற் கூட்டம் என்பன. இது "கைகோள்' என்பதில் இடம்பெறுகிறது. கைகோள் என்பது ஒழுக்கலாறு. இன்ப ஒழுக்கம் பற்றியது.
""காமப் புணர்ச்சியும், இடந்தலைப் படலும்,
பாங்கொடு தழாஅலும், தோழியிற் புணர்வும் என்று
ஆங்க நால் வகையினும் அடைந்த சால்பொடு
மறையென மொழிதல் மறையோர் ஆறே''(தொல்-1442)
இயற்கைப் புணர்ச்சியின்போது தலைவி தன்னுடைய வேட்கையை வெளிப்படக் கூறாது கண்களால், குறிப்பால் உணர்த்துவாள். இதை,
""நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்'' (கள:1042)
என்ற நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
""கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல''(குறள்.1100)
என்ற குறட்பாவுடன் இது ஒப்புநோக்கத்தக்கது. தலைமகன் வேட்கை மிகுதியினால் மெய்யுறு புணர்ச்சியை விரும்பினான் ஆயினும் தலைமகள்பால் தோன்றும் அச்சமும், நாணமும், மடமும் அதற்குத் தடையாய் நிற்கும். அவளது நலத்தினை தலைமகன் பாராட்டி, அத்தடைகளை நீக்கி படிகல் ஆக்குவான். அவ்வளவு எளிதில் மெய்தொட்டுப் பயிறல் சங்க காலத்தில் நிகழாது. அறிவு சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, குடிசார்ந்த சம நிலையில்தான் நிகழும் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.
தலைவியின் வயது
சங்க காலத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் முறையே பதினாலும் பன்னிரண்டும் அகவையாகக் கூறப்பட்டிருத்தலை மெய்ப்பாட்டியலின் "பிறப்பே, குடிமை' (தொல்.1219) என்னும் நூற்பா உரையில் காணலாம். பத்துவகைப் பொருத்தம் கூறுமிடத்தில் அகவை ஒப்புமை வேண்டும் என்பதும் கூறப்பட்டுள்ளது. ""பன்னிரண்டு ஆண்டும் பதினாறாண்டும் பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவம் என்பது வேதத்துள் ஒப்ப முடிந்தமையின் அதுவும் ஒப்பனவே படும்'' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், சிலப்பதிகார தலைவி, தலைவனின் வயதும் இதையே சுட்டுகிறது என்பதையும் ஒப்பு நோக்கலாம்.
இவை தவிர, தலைவியின் வேட்கைக் குறிப்பு (1054), களவுக் காலத்தில் தலைவி கூற்றுகளும் மெய்ப்பாடுகளும் (1057), தலைவி சினந்து பேசும் இடங்கள் (1058), தலைவி தன் கற்பைக் காக்க உறுதிபூண்டு பேசுமிடங்கள் (1059) போன்றவை கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியர் கூற்றிலிருந்து ஒரு தலைவிக்குரிய அனைத்து பண்பு நலன்களையும் நன்கு அறிந்துகொள்ள முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.