தமிழ்மணி

திருவள்ளுவரின் திருவுருவ எழில்!

திருக்கயிலாயப் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீஅமுர்தலிங்கத் தம்பிரானால் அருளிச்செய்யப்பட்டது "திருமயிலைத் தலபுராணம்'.

தங்க.சங்கரபாண்டியன்

திருக்கயிலாயப் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீஅமுர்தலிங்கத் தம்பிரானால் அருளிச்செய்யப்பட்டது "திருமயிலைத் தலபுராணம்'. இந்நூலை 150 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றியுள்ளார். அதை 120 ஆண்டுகளுக்கு முன்பாகப் பதிப்பித்துள்ளார். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மறைந்து கிடந்த இந்நூலை செப்பனிட்டு, "சிவாலயம்' என்ற அமைப்பின் நிர்வாகியான ஜெ.மோகன் என்பவர், மீண்டும் இரண்டாம் பதிப்பாக

(2012) வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்நூலின் பின்னிணைப்பில்தான் திருவள்ளுவர் பிறப்பு, அவர் உருவ எழில், மயிலையில் உள்ள திருவள்ளுவர் ஆலயம், தாய்-தந்தை, மனைவி பற்றிய செய்திகள் காணப்படுகின்றன (இத்தகவல் 1931}இல் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பதிப்பித்த திருக்குறள் பரிமேலழகர் உரை நூலில் இருந்து தரப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது). அதில், வள்ளுவரின் திருவுருவம் பற்றிய அரிய பழம் பாடம் ஒன்று அவரது திருவுருவத்தை அறிய துணைபுரிகிறது. அதில், ""பழம்பாடல் ஒன்று தமிழ் சான்றோனாய்த் தலைமகனாய் விளங்கும் திருவள்ளுவரின் திருவுருவ எழிலைக் கூறுகிறது. அப்பாடலுக்கு "நாயனார் சொரூபஸ்துதி' என்று பெயரிட்டுள்ளனர்'' என்ற குறிப்போடு பாடல் காணப்படுகிறது. அப்பாடல் வருமாறு:

""திருமுடி மிசையார் மயிர்முடி யழகுத்

தீர்க்கபுண் டரநுத லழகும்

திரண்மயி புயந்தை வருஞ்செவி யழகுந்

திகழ்நெடுந் தாடியி னழகும்

அருமுடி செபமா லிகைசின்முத் திரைசே

ரபயநேர் வலக்கையி னழகும்

அமிழ்துறழ் தமிழ்மா மறைமுறை வரத

மமைதரு மிடக்கையி னழகும்

கருமுடி யோகப் பட்டையி னழகும்

கடிகொள்கீட் கோவண வழகும்

கழல்களிற் றிகிரி வளைவரை யழகுங்

கமலநல் லாதனத் தழகும்

தருமுடிய முகிறோய் மயிலையி னிடைமா

தவர்கள்கண் டிறைஞ்சவீற் றிருக்கும்

தழைபுகழ்த் திருவள் ளுவரெனு நாம

சற்குரு சரணமே சரணம்!''

இதன் பொருள்: நாயனார் தலைமயிரை எடுத்துக்கட்டி நெடு முடியாக முடிந்துள்ளார். அழகிய நெற்றியில் திருநீறு விளங்குகிறது. மணியணிந்த நீண்ட செவிகள் தோளில் தவழ்கின்றன. முகத்தில் நீண்ட தாடி விளங்குகிறது. வலது கையில் சின்முத்திரையுடன் ஜெபமாலை விளங்குகிறது. அது உயிருக்கு அபயமளிப்பதாகும். உயிர்களுக்கு வரங்களைத் தந்து வாழ்விக்கும் இடது கரத்தில் அமுதம் நிறைந்த முப்பாலாய் விளங்கும் தமிழ் மறையாம் திருக்குறள் சுவடிகள் விளங்குகின்றன.

யோகப்பட்டையை அணிந்து, நீண்ட உடை தரித்து பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். திருவடிகளில் அறிஞர்கள் அணியும் ஞானத் தண்டையை (கழல்) அணிந்துள்ளார். மணி மாடங்களின் முடியில் மேகங்களை உரசிச் செல்லும் வளப்பம் பொருந்திய மயிலாபுரியில், மாதவர்கள் வந்து கண்டு மகிழ்ந்து போற்ற வீற்றிருக்கும் மிகுந்த புகழை உடைய "திருவள்ளுவர்' என்னும் பெயர் படைத்த மேலான உயர்ந்த குருபிரானின் திருவடிகளைச் சரணம் சரணம் என்று பணிகின்றேன்'' என்பதாகும்.

மேற்குறிப்பிட்ட பாடலிலிருந்து சிவஞானியருக்கே உரிய, ஜடாமுடி, உருத்திராக்கம், சின்முத்திரை, திருநீறு, பத்மாசனம் போன்றவை திருவள்ளுவர் ஒரு சிவஞானி}சிவயோகி என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. திருக்குறள் ஒரு பொதுமறை. சமயச் சார்பற்ற நூல் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், சைவ சமயம் குறித்த, குறிப்பாக சைவ சித்தாந்தம் பற்றிய பல உண்மைகளை திருவள்ளுவர் திருக்குறளில் பொதித்து வைத்துள்ளார். திருக்குறளையும் சைவ சித்தாந்தத்தையும் ஆழ்ந்து கற்றோர் இவ்வுண்மையை நன்கு உணர்வர். திருவள்ளுவரை "நாயனார்' என்று அடைமொழி கொடுத்துக் கூறுவதை இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும்.

""திருக்குறளில் "குரு வணக்கம்' என்று ஒரு பகுதி இல்லை. எனவே, திருவள்ளுவர் ஓதாது உணர்ந்த பெரியவராக இருக்க வேண்டும். திருமுறை ஆசிரியர்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய பெரியவர்கள் இறைவன் திருவருளால் உணர்த்தப் பெற்றுத் தம் கருத்துகளைக் கூறியருளியுள்ளனர். அவர்களைப் போலவே திருவள்ளுவரும் இறைவன் திருவருளால் உந்தப்பட்டு இந்நூலை அருளிச் செய்திருக்க வேண்டும். தெய்வப் புலவர், நாயனார், செந்நாப் புலவர் முதலிய திருப்பெயர்களை உடையவராகத் திருவள்ளுவர் திகழ்வதால் இவ்வுண்மை புலப்படும்.

சைவ சமயப் பெரியோர்களை "நாயனார்' என்னும் சொல்லை அவர்தம் பெயருக்குப் பின் ஒட்டுச் சொல்லாகச் (நன்ச்ச்ண்ஷ் ஹஞ்ஞ்ப்ன்ற்ண்ய்ஹற்ண்ர்ய்) சேர்த்துப் போற்றி வழங்குவது சைவ சமய மரபாகவுள்ளது. அதுபோலவே குறளாசிரியரைத் "திருவள்ளுவ நாயனார்' என்று கூறும் வழக்கு தமிழகத்தில் உள்ளது. எனவே, திருவள்ளுவர் மற்றைப் புலவர்கள் அன்றி, ஓதாது உணர்ந்த சான்றோர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர்'' என்று "திருக்குறளில் சைவ சித்தாந்தம்' என்ற நூலில் (பக்.3,4) பதிவு செய்துள்ளார் "சிந்தாந்த

சரபம்' கு.வைத்தியநாதன். மேலும், சைவர்களின் வேதம் திருக்குறளே என்பதை, திருக்குறளின் உட்கிடை சைவ சித்தாந்தமே (1953), திருக்குறள் துலக்கும் ஒழுக்க நெறி (1971), திருவள்ளுவர் சித்தாந்த சைவர் (1976) ஆகிய நூல்களும் இதனை மெய்ப்பிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT