முகப்பு
தமிழ்மணி

தமிழ்ச் செல்வங்கள் - மண்: 7

வைப்பகங்களில் எல்லாம் சிறந்த வைப்பகம் மண். மண் செறிவு, பயிர்ச்செறிவு ஆயிற்று. புல்லா பூண்டா, செடியா கொடியா, மரமா மட்டையா, கிழங்கா கீரையா, நெல்லா கரும்பா இன்னவற்றின் வைப்பகம் எது? மண்தானே!

பகிர்:

வைப்பகங்களில் எல்லாம் சிறந்த வைப்பகம் மண். மண் செறிவு, பயிர்ச்செறிவு ஆயிற்று. புல்லா பூண்டா, செடியா கொடியா, மரமா மட்டையா, கிழங்கா கீரையா, நெல்லா கரும்பா இன்னவற்றின் வைப்பகம் எது? மண்தானே!

"வை' என்பது என்ன? "நெல்' புரியவில்லையா, வைக்கோல் புரியுமே! வைத்தூறு புரியுமே! வைப்போர் புரியுமே! ஏன்? "வை' என்னும் பெயர்? வையாம் "நெல்' தன் மணியை (அரிசியை) எப்படிப் பாதுகாத்து வைத்திருக்கிறது? திறவைப் பெட்டி போல் மூடிவைத்திருக்கவில்லையா?

தினை, சாமை, சோளம், கம்பு, கேழ்வரகு முதலிய தவசங்களுக்கு அப்படி வைம்மூடி உண்டா? இல்லை ஆதலால் "வை' எனப்பட்டது. வை+அகம் = வையகம்; வையம்; வைப்புழி என்பவை எல்லாம் வள்ளுவ ஆட்சிகள். கட்டப்பட்ட நிலைத்திணை (நிலத்திணைப் பொருள்களை எண்ண முடியுமா?) விண்மீனை எண்ணினாலும் நீர்மீனை எண்ணினாலும் மண்ணில் மிளிரும் பொருளடங்கலை எண்ண முடியாதே! ஆதலால், அவற்றை யெல்லாம் வைத்துள்ள மண்ணை "வையகம்' என்றனர். நீரையும் அதுதானே வைத்தது. அமைதிவாரியாம் பசிபிக் மாக்கடல் அடியிலும் மண்தானே!

Advertisement

தாங்கல் என்பது என்ன? நீரைத் தேக்கிப் பயன்படுத்த உண்டாய ஏரிதானே! நிலத்தை அகழ்ந்தால் ஊற்றுநீர்; கீழே அகழ்ந்தால் கீணீராம் "கிணறு'; அதனின் ஆழமாக அகழ்ந்தால் அகழியாம் ஆழி! மண்ணை மேலும் அகழ்ந்தால் "மண் எண்ணெய்'! அதன் மேலும் அகழ்ந்தால், நிலக்கரி, "கரிநெய்' (டீசல்) "கன்னெய்' (பெட்ரோல்)! அதன் மேலும் அகழ்ந்தால் "தங்கம்'; பொன்வயல், தங்கச் சுரங்கம். மேலும் அகழ்ந்தால் "வயிரம்'; கடற்பரப்பில் பவழப்பாறை; முத்துக்குளிப்பு, மலையிடைப் பிறக்கும் மணி உண்டாதலால், ""மலையிடைப் பிறவா மணியே என்கோ?'' என இளங்கோவடிகளாரால், கோவலன் வாக்காகக் கண்ணகி பாராட்டப்பட்டார்.

கோப்பெருஞ்சோழன், கண்ணகனார், பொத்தியார், பிசிராந்தையார் பேராப் பெருநிலைப் போதில், ஒருங்கிருக்கக் கண்டோர் ஆகிய கண்ணகனார்,

""பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

மாமலைப் பயந்த காமரு மணியும்

இடைபடச் சேய வாயினும் தொடை புணர்ந்து

அருவிலை நன்கலம் அமைக்கும் காலை

ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்,

சான்றோர் பாலர் ஆப

சாலார் சாலார் பாலரா குபவே''

என்று பாடினார் (புறநானூறு:218).

மண்ணின் மதிப்புமிக்க வளக்கூடலெல்லாம் சான்றோர் கூடலாகி விடவில்லையா? சான்றோர் கூடி ஆய்ந்த சங்கம் இருந்த மதுரை "கூடல்' எனவும், அவையம் "புணர் கூட்டு' எனவும் அமையப்பெற்றது இதனால்தானோ! இன்னொரு வியப்பான கூடல்; எண்ணிப் பார்ப்பவர் எண்ணமெலாம் எட்டமாட்டா நகைச்சுவைக் கூடல்.

ஒரு புலவருக்குச் சிரங்கு வந்துவிட்டது. கையில் காலில் வந்ததோடு நில்லாமல் கழுத்தைச் சுற்றிலும் வந்துவிட்டது. புடைத்தது; நீர் கோத்தது; உடைந்தது;செந்தழும்பு ஆயது; கருந்தழும்பு ஆயது. திருச்செந்தூர் குமரனை நோக்கிப் பாடுகிறார்:

""செந்தில் குமரா! திருமால் மருகா! என்

சிந்தை குடிகொண்ட தேசிகா! - நொந்த இம்

மெய்யிற் சிரங்கை விடியுமட் டும்சொரியக்

கையிரண்டு போதாது காண்''

அறுமுகன், பன்னிருகையன்; அவனிடம் தமக்குள்ள இரண்டு கைபோதாது என்கிறார். தம் கழுத்துப் புண்ணைக் "கண்டசரம்' ஆக்குகிறார்.

""முத்துப் பவழம் முழுவயிரம் மாணிக்கம்

பத்திஒளி வீசு பதக்கமெலாம் - சித்தன்

சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத்

தரங்கண்டு தந்த தனம்''

சிரங்கப்ப மன்னன், கண்டத்து அணிகலம் புலவனாகலால் பூட்டினானாம். ஆயினும்,

""சிரங்கப்ப ராயா சினமாறிக் கொஞ்சம்

இரங்கப்பா ஏழை எனக்கு''

என வேண்டுகோள் வைக்கிறார்! புலவர் யார்? "கவிமணி'! (மலரும் மாலையும்)

}தொடர்வோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments