முகப்பு
தமிழ்மணி

உலகம் - 8: தமிழ்ச் செல்வங்கள் - 30

உலகம்' நாம் வாழும் பகுதி அன்றி, வாழாப் பகுதிகளும் உளவே. அவற்றையெல்லாம் எப்படி ஒருசேரச் சுட்டுவது? "வியன் உலகம்', "வியன்பேர் உலகம்' என்றும், (அண்டம்) பேரண்டம் என்றும் சுட்டினர் முந்தையர். "வியன் ஞாலம்' என்றும் குறித்தனர். (வியனுலகத்து / வியனுலகம் - குறள்- 13,19; வியன்ஞாலம் குறள்.1016).

பகிர்:

உலகம்' நாம் வாழும் பகுதி அன்றி, வாழாப் பகுதிகளும் உளவே. அவற்றையெல்லாம் எப்படி ஒருசேரச் சுட்டுவது? "வியன் உலகம்', "வியன்பேர் உலகம்' என்றும், (அண்டம்) பேரண்டம் என்றும் சுட்டினர் முந்தையர். "வியன் ஞாலம்' என்றும் குறித்தனர். (வியனுலகத்து / வியனுலகம் - குறள்- 13,19; வியன்ஞாலம் குறள்.1016).

வியல்-வியன் என்பதன் பொருள் என்ன? அகலம், விரிவு. ""வியல் என் கிளவி அகலப் பொருட்டே'' - தொல்.847. உலகுக்கு "ஞாலம்' என்றும், பேரண்டத்திற்கு வியன்ஞாலம் என்றும் பெயர் ஏற்பட்டது எப்படி? "ஞாலுதல்' என்பது தொங்குதல். தாங்குதல் எதுவும் இன்றித் தொங்கும் இயற்கையால் "ஞாலம்' எனப்பட்டது.

 "மண்டிணி ஞாலம்' என்பது மணிமேகலை. "ஞாலத்தின் மாணப்பெரிது' என்பது திருக்குறள். "ஞான்று கொண்டான்' என்றால் கழுத்தில் கயிற்றையோ துணியையோ மாட்டிக்கொண்டு மரக்கிளையிலோ, மனை முகட்டிலோ "நாண்டு கொண்டான்' என்பது இல்லையா? "ஞான்று' கொள்ளுதல் "நாண்டு' கொள்ளுதல் ஆயது.

Advertisement

உலகுக்குப் "பார்' என்பது ஒரு பெயர். பார் என்பது விரிந்து பரவிய இடத்தினது என்னும் பொருளது. ""பெரிது பெரிது புவனம் பெரிது'' என்பது ஒளவையார் மொழி. பூ, புவி - புவனம் என்பனவும் உலகமே. பூ - விரிவுடையது. புவ்வா (புகுவாய்) வுக்கு வேண்டுவன வெல்லாம் கொண்டது புவி, புவனம் என்பன.

கடல் சூழக் கொண்டிருத்தலால், ""நீராரும் கடலுடுத்த நிலமடந்தை'' என்றார் பேராசிரியர் சுந்தரனார். கடலை ஆடையாக உடுத்த நிலமகள் என்பதைப் "புடவி' என்றனர். புடவை கட்டிய மகள் போன்றது என்பது அதன் பொருள். ""புடவிக்கு அணிதுகிலென வளர் அந்தக் கடல்'' என்றார் அருணகிரியார் (திருப்புகழ்).

"படி' என்பதும் உலகப் பெயரே. படிந்து - தங்கி வாழ்வதற்கு இடமாக இருப்பதால் அப்பெயர் பெற்றது. இனி, கருத்துப் பொருளாக உலகம் என்பதற்கு வேறு பொருளும் உண்டு. ""உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே'' என்பது அது.

""வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான'' (1592)

என்னும் தொல்காப்பியம். உலகம் என்பதற்கு உலக மக்களெல்லாம், உலகத்து உயிர்கள் எல்லாம் என இடவாகு பெயராகச் சொல்வதுண்டு!

குமரிக் கண்டத்துத் தோன்றிய தொன்மாந்தன் உலகெலாம் பரவினான் என்னும் கொள்கை உலகில் வலுத்து வருகிறது. வாழிய நலனே! வாழிய நிலனே!

தொடர்வோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments