முகப்பு
தமிழ்மணி

"கொல்லன் அழிசி'யும் லியோ டால்ஸ்டாயும்!

கால எந்திரத்தில் ஏறி, ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நாம் செல்கிறோம். மலையின் அடிவாரத்தில் அவளது குடில். நள்ளிரவுத் தாண்டி நாலு நாழிகை ஓடி விட்டது. குரல் கொடுக்கும் கோட்டான், ஆந்தைகூட தூங்கி விட்டதோ என்னவோ! எங்கும் பேரமைதி.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:38 AM
பகிர்:

கால எந்திரத்தில் ஏறி, ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நாம் செல்கிறோம். மலையின் அடிவாரத்தில் அவளது குடில். நள்ளிரவுத் தாண்டி நாலு நாழிகை ஓடி விட்டது. குரல் கொடுக்கும் கோட்டான், ஆந்தைகூட தூங்கி விட்டதோ என்னவோ! எங்கும் பேரமைதி.

பக்கத்துப் பாயில் தாய் தூங்கத் தொடங்கி ஒரு யாமம் போயிருக்கும். அந்த ஊரே தூங்கிவிட்டது. அவள் ஒருத்தியைத் தவிர!

"நேற்றுத்தான் முதன் முதலாய் அவனைப் பார்த்தேன், ஆயிரம் பிறவியின் அறாத தொடர்பு என் உணர்வில் வந்தது. இப்பிறவியின் பயனே அவனை அடைவதுதான் என்று உணர்ந்தேன்! இன்று வருவதாகச் சொல்லிப் போனானே... இன்னும் வரக்காணோமே!

Advertisement

நெய்யை ஊற்றி நெருப்பைக்கூட அணைத்து விடலாம். ஆனால், அவனது நினைவை என் நெஞ்சில் இருந்து அகற்ற முடியாது போலிருக்கிறதே' என்று அவள் மனதுக்குள் புலம்புகிறாள். இந்த எண்ணங்களை எல்லாம்தான் சுவை பழுத்த வார்த்தைகளில் வடித்திருக்கிறார் புலவர் கொல்லன் அழிசி. அத்தலைவியின் நிலையை, தோழி பாடுவது போல புலவர் குறுந்தொகையில் பாடியுள்ளார்.

இந்த ஊரே தூங்கிவிட்டது, ஆனாலும் இந்தப் பாவி தூங்கவில்லை; எமது இல்லத்தின் அருகே அழகிய சிறு குன்று. மயிலின் காலடியைப் போன்ற இலைகளைக்கொண்ட நொச்சி மரம், அக்குன்றின் உச்சியில் அம்மரத்திலிருந்து தரைமீது விழும் நொச்சிப் பூக்கள் எழுப்பும் ஓசை கூட எனக்குத் தெளிவாக கேட்டுக்கொண்டே இருக்கிறது (ஆனாலும் அவன் வரும் காலடி ஓசை கேட்கவில்லையே...) என்கிறாள்.

கொன்ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே...

எம்இல் அயலது ஏழில் உம்பர்;

மயில்அடி இலைய மாக்குரல் நொச்சி

அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த

மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே! (138)

இப்பாடல் எழுதப்பட்டு, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின், லியோ டால்ஸ்டாய், அவரது "அன்னா கரினினா'வில் எழுதியுள்ளதைப் படியுங்கள். ஒரு திருமண நிகழ்ச்சியை விவரிக்கிறார் டால்ஸ்டாய். அதில் உள்ள கடைசி வரிகள்:

"The church became so quiet that the drops of wax were heard falling from the candles...''

""மெழுகு உருகி துளிகள் விழுகின்றன, அதன் ஓசை தெளிவாய் கேட்கிறது'' - என்பதுதான் இவ்வரிகளின் பொருள்.

சங்கத் தமிழ்ப் புலவருக்கும் - லியோ டால்ஸ்டாய்க்கும் கற்பனையில் இருக்கும் அழகிய ஒற்றுமையைக் கவனியுங்கள்!

- இரா. கதிரவன்

நன்றி : ஓவியம் கோபுலு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments