தமிழ்ச் செல்வங்கள்: குரங்கு
குற்றாலம் பாவநாசம் போனால் "குர்' "குர்' "குர்' "குர்' ஒலி கேளாமல் வரமுடியாது
குற்றாலம் பாவநாசம் போனால் "குர்' "குர்' "குர்' "குர்' ஒலி கேளாமல் வரமுடியாது. கூட்டம் சேர்ந்து விட்டாலோ செவியெல்லாம் பொங்கி வழிவது இவ்வொலிதான். இவ்வொலியைக் கேட்டவன் "குர்க்குர்' என்றான்; "குர்க்கு' என்றான்; குரக்கு என்றான்; குரங்கு என்னவும் சொன்னான்! குரங்கு, தன் ஒலியால் தன் பெயர் பெற்றது.
குரக்கு என்பது குரங்கு ஆனதே அன்றி, குரங்கு, குரக்கு என ஆகவில்லை. ஆகவே, வலிக்கும் வழி வலித்தல் அல்லாமல், மெலிக்கும் வழி மெலித்தலேயாம். ஒலியால் பெயர் பெற்ற குரங்கு, தாவித் தாவி ஓடுவதைப் பார்த்த மெய்யியலாளன், "குரங்கு மனம்' அல்லது "மனக் குரங்கு' என்றான். அதன் கூனுடல் அல்லது வளைந்த உடலைக் கண்டவன், பிறை நிலவைக் "குரங்கன்' என்றான்; குச்சியெடுத்தும் சண்டையிட்டும் பல்லைக் காட்டியும் திரிந்ததைக் கண்டவன் அப்படித் திரிபவனைக் "குரங்குப் பயல்', "குரங்குச் சேட்டை' என்றான்.
தச்சன் ஒருவன் உள்ளத்தில் குரங்கின் வடிவம் பதிந்தது; கட்டை வண்டியில் ஊடு மரம் மண்ணில் ஊன்றாமல் இருக்க வளைந்த கட்டை ஒன்றை எடுத்து இணைத்தான். அதனைக் "குரங்குக் கட்டை' என்றான்.
பனையின் மட்டை தென்னையின் மட்டை ஆயவை, அவற்றை இறுக்கிப் பற்றியிருத்தலைக் கண்டவன், அவற்றுக்குக் "குரங்கு மட்டை' என்று பெயர்
சூட்டினான்.
குரங்கு வளாரைப் பற்றினாலும் சரி, கிளையைப் பற்றினாலும் சரி, வீழ்தைப் பற்றினாலும் சரி, ஏன் பாம்பைப் பற்றினாலும் இறுக்கிப் பற்றும். அதனால், இறுக்கிப் பிடித்தல் "குரங்குப் பிடி' எனப்பட்டது.
ஆலமரத்தில் ஏறியதாம் ஒரு குரங்கு, அடியில் இருந்து கிளைக்கும் ஏறிவிட்டது. கிளையில் வீழ்துகள் தொங்கின. வீழ்து போல் ஒரு பாம்பும் தொங்கியது. அதனை விழுதென்று குரங்கு பிடித்து விட்டது! பாம்பு படமெடுத்தது; அஞ்சிய குரங்கு தொங்கிய வீழ்துகளையெல்லாம் பாம்பாக எண்ணி மேலே தாவித் தாவி உச்சிக்குப் போய்க் கீழே பார்த்தது. அந்தப் பார்வையில் தன் வாலையும் பாம்பாக எண்ணியதாம்! பின்னர்தான், பாம்பன்று தன் வாலே தொங்குவது என அச்சம் விட்டதாம்! பாரதிதாசனார் அழகின் சிரிப்பிலே இப்படியொரு சிரிப்பை அருமையாகக் காட்டுகிறார்.
குரங்கு கவிந்தே இருத்தலால் "கவி' எனப்பட்டது. மனிதச் சாயல் கொண்டு வாலுடன் இருப்பதால், வால் நரம் - வானரம் எனப்பட்டது. ஆண் குரங்கு தனித்தாலும் பெண் குரங்கு தனித்துப் போகாமல் மந்தையாகத் திரிதலால் "மந்தி' எனப்பட்டது. தாய்க் குரங்கு குட்டிக் குரங்குக்குத் தரும் பற்றுதல் பயிற்சியைத் தந்து, அதுவே பற்றிக் கொள்ளப் பயிற்றி விடும் ஆசான் ஆகின்றது!
குரங்கு வரிசையாகச் செல்லும் இடம் "குரங்கணி' எனப்பட்டது. ஆடுதுறை, மயிலாடுதுறை போலக் "குரங்காடு துறை'யும் உண்டு. குரங்கு ஒன்று தன் ஆண் குரங்கு மரக்கிளையில் இருந்து தாவும்போது கிளையைப் பற்ற முடியாமல் பாறையில் விழுந்து அடிபட்டுச் சாதலைக் கண்டு, தன் குட்டியைக் கூட்டத்தில் சேர்த்துவிட்டு வந்து, அதே கிளையில் ஏறிப் பாறையில் வீழ்ந்து சாவதாகக் காட்டுகிறார் சங்கச் சான்றோர் ஒருவர்.
ஓர் ஆண் குரங்கு பெண் குரங்கின் தலையைத் தடவ, முடி கலைய, அதனை நீராகிய பளிங்கில் பார்த்துச் சீர் செய்து கொண்டு கூட்டத்தைச் சேர்ந்த சீர்மையைக் காட்டுகிறார் ஒரு சான்றோர்.
குரங்கு தாவிய தாவு ஒன்றில் ஊடியிருந்த காதலி காதலனைத் தழுவினாள், "மணங் கமழ் பாலில் பழம் விழுந் தெனவே' என்பது குரங்கு சொல்லிய கதை!
ஆறறிவு மாந்தன் குரங்காட்டிப் பிழைக்கும் பிழைப்பும் இன்றும் நிகழத்தான் செய்கிறது. முற்று மோனைக்கு ஒருவன் சொன்னானாம்: ""குறும்புக் குப்பன் குச்சியைக் கொண்டு குரங்கைக் குத்தினான்'' ஏழு மோனையுள் ஆறு மோனை இது! முசு என்பது குரங்குக்கு ஒரு பெயர்; அதனால், முசு முசுக்கை என்பதை, "இரு குரங்குக் கை' எனச் சொல் வினையாடல் ஆடினார் ஒரு புலவர்!
- தொடர்வோம்