முகப்பு
தமிழ்மணி

சித்திரை முழு நிலவும் கண்ணகி வழிபாடும்!

கற்புத் தெய்வம் கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கோயில் எடுத்தது அனைவரும் அறிந்த செய்தி. செங்குட்டுவனைத் தவிர வேறு இரு மன்னர்களும் கண்ணகிக்குக் கோயில் எடுத்துள்ளனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:25 PM
பகிர்:

கற்புத் தெய்வம் கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கோயில் எடுத்தது அனைவரும் அறிந்த செய்தி. செங்குட்டுவனைத் தவிர வேறு இரு மன்னர்களும் கண்ணகிக்குக் கோயில் எடுத்துள்ளனர்.

செங்குட்டுவனின் சமகாலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னனும், செங்குட்டுவனின் அம்மான் மகனுமான இராயசுயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பவன் உறையூரில் கண்ணகிக்கு ஒரு கோயில் எடுத்து விழாவணி நடத்தினான்.

பிற்காலச் சோழர்களில் சிறந்து விளங்கிய முதலாம் இராசராசன் தஞ்சாவூரில் கண்ணகிக்கு ஒரு கோயில் அமைத்தான். இராசராசன் இலங்கையின் மீது படையெடுத்து ஐந்தாம் மகிந்தின் என்னும் சிங்கள மன்னனை வென்றான். அவன் மனைவியைச் சிறை செய்து தஞ்சையில் அடைத்து வைத்தான். அந்த அரசி தஞ்சையில் பத்தினித் தெய்வ வழிபாடு இல்லாததால் உண்ணா நோன்பு மேற்கொண்டாள். இராசராசன் மங்களா தேவி மலைக்குச் சென்று ஒரு பிடி மண் எடுத்து வந்து தஞ்சையில் சிங்கள நாச்சியார் வணங்குவதற்காகவே கண்ணகி கோயிலைக் கட்டினான்.

Advertisement

சேர நாட்டில் உள்ள கண்ணகி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திங்கள் முழுநிலவு அன்று விழா நடைபெறுகிறது. கண்ணகியைக் கோயிலில் எழுந்தருளச் செய்த நாள்தான் சித்திரை முழு நிலவு நாள். பெண் தெய்வமான அம்மன் கோயில்களில் பங்குனி, சித்திரை மாதங்களில்தான் விழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. கண்ணகி மதுரையை எரித்ததன் அடையாளமாக தீச்சட்டி எடுத்தல், தீக்குண்டம் மிதித்தல் போன்ற வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகின்றன.

பண்டைக் காலத்தில் கோயில்கள், அரண்மனைகள் கட்டுவதற்கு நிலவழிபாடு மற்றும் எழுந்தருள்விப்பது ஆகிய செயல்களுக்கு ஏற்றதாகப் பங்குனி, சித்திரை திங்கள்கள் கருதப்பட்டன (நெடுநல்வாடை 74-78) என்னும் நெடுநல்வாடைப் பாடலுக்கு நச்சினார்க்கினியர் ""ஒரு பக்கத்தைச் சாராப் போகாத சித்திரைத் திங்களில் நடுவிற் பத்தினின் நின்ற யாதோர் நாளில் பதினைந்தாம் நாழிகையில் அங்குரார்ப்பணம் பண்ணி'' என்று எழுதியுள்ள உரையே தக்க சான்றாகும்.

விக்கிரம சோழன் கல்வெட்டு ஒன்றில் அவன் தில்லையம்பலத்திற்குப் பல திருப்பணிகளைச் செய்து சித்திரைத் திங்களில் இறைவனுக்குக் காணிக்கையாக்கினான் என்ற செய்தி,

"... ..... .....

அளவில் லாதன ஒளிபெற்ற அமைத்து

பத்தாம் ஆண்டில் சித்திரைத் திங்கள்

அத்தம் பெற்ற ஆதி வாரத்து

திருவளர் மதியின் திரியோதசி பக்கத்து

இன்ன பலவும் இனிது சமைத்தருளி!'

என்னும் அடிகளால் அறியப்படுகிறது. இவை மட்டுமன்றி, பொதுவாகவே விழாக்கள் பங்குனி, சித்திரையில் நடந்தன என்னும் செய்தி,

அடைபொருள் கருதுவிர் ஆயின் குடையொடு

கழுமலம் தந்த நற்றேர்ச் செழியன்

பங்குனி விழவின் வஞ்சியொடு

உள்ளி விழவின் உறந்தையும் சிறிதே!

என்ற (இறையனார் அகப்பொருள் சூ.28 மேற்கோள்)

அடிகளால் அறியப்படுகிறது. கம்பர் தாம் இயற்றிய இராமாயணத்தை, பங்குனித் திங்களில் திருவரங்கத்தில் அரங்கேற்றினார் என்னும் செய்தி,

எண்ணிய சகாத்தம் எண்ணுற் றேழின்மேல் சடையன்

நண்ணிய வெண்ணெய் நல்லுர் தன்னிலே கம்பநாடன்

பண்ணிய இராமகாதை பங்குனி அத்தநாளில்

கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கேற்றினானே!

எனும் பாலகண்டத்தில் உள்ள மிகைப்பாடலால் அறியப்படுகிறது. எனவே, கண்ணகி வழிபாடு பங்குனி அல்லது சித்திரைத் திங்களில்தான் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அது கண்ணகி, கோயிலில் எழுந்தருளிய நாளாகும். காலப்போக்கில் அவ்விழா சித்திரை முழு நிலவு நாளில் வந்து அமைந்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments