இறைவாசநல்லூர் புராணம்
தமிழ் இலக்கிய இலக்கணங்களும் கல்வெட்டுகளும் பதிவுசெய்துள்ள எண்ணற்ற நூல்கள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை.
தமிழ் இலக்கிய இலக்கணங்களும் கல்வெட்டுகளும் பதிவுசெய்துள்ள எண்ணற்ற நூல்கள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய "மறைந்துபோன தமிழ் நூல்கள்' என்ற நூலில் இலக்கியம், இலக்கணம், இசை, நாடகம் ஆகிய தலைப்புகளில் 196 நூல்கள் மறைந்தவையாகக் (கிடைக்கப் பெறாதவை) குறிப்பிட்டுள்ளார். இந்நூலைப் படித்தால், நம் முன்னோர்கள் தவறவிட்ட பல அரிய பொக்கிஷங்கள் இன்றுவரை நமக்குக் கிடைக்காமல் இருப்பதை நினைத்து மனம் வருந்தும். அவற்றுள் இறைவாசநல்லூர் புராணமும் ஒன்று.
வரலாற்றறிஞர் தி.வை. சதாசிவபண்டாரத்தார் எழுதிய "இலக்கியமும் கல்வெட்டுக்களும்' என்ற நூலில், கல்வெட்டுகளால் அறியப்பெறும் மூன்று தமிழ் நூல்கள் என்ற கட்டுரையில் ""திருப்பாலைப்பந்தல் உலா, இறைசைப் புராணம், ஓங்குகோயிற் புராணம் ஆகிய நூல்கள் இக்காலத்தில் உள்ளனவா என்பது புலப்படவில்லை'' என்று குறிப்பிடுகிறார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவலூர் வட்டத்தில் அமைந்துள்ள எலவானாசூர் (இறையனரையூர்) கல்வெட்டால் அறியப்படும் "இறைசைப் புராணம்' என்ற இறைவாசநல்லூர் புராணத்தை இயற்றியவர் திருமலை நயினார் சந்திரசேகரப் புலவராவார். இப்புராணம் பாடி அரங்கேற்றியபோது திருக்கோயில் அதிகாரிகள் இப்புலவர்க்கு நிலமும், ஆனந்தத் தாண்டவன் திருவீதியில் வீடுகட்ட மனையும் கொடையாக வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது.
இப்புலவர் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இக்கருத்தையே மு.இராகவையங்கார் "சாசனத் தமிழ்க் கவி சரிதம்' என்று நூலில் பதிவு செய்துள்ளார். இறைவாசநல்லூர் புராணம் மறைந்துபோன தமிழ் நூல்களுள் ஒன்றாகப் பலரும் கருதி வந்துள்ளனர். ஆனால், தமிழன்னையின் அருந்தவப் புதல்வர் டாக்டர் உ.வே.சாமிநாதையர் சேகரித்த பல அரிய சுவடிகளில் இறைவாச நல்லூர் புராணமும் ஒன்று.
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையத்தில் இறைவாச நல்லூர்த் தலபுராணத்தின் கையெழுத்துப் பிரதி பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்புராணத்தை திருமுதுகுன்றம் வீரசைவ சுப்பராய தேசிகர் எழுதிய உரையுடன், வித்துவான் சு.பாலசாரநாதன் என்பவர்தான் முதன்முதலில் பதிப்பித்துத் தமிழ் உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்.
இந்நூல் ஒன்பது சருக்கமும் 376 செய்யுட்களும் கொண்டது. இந்நூலில் 28ஆவது செய்யுள் ""செப்பருமிப் புராணத்தைத் திருமலைநா யகன்றமிழாற் செப்பி னானால்'' என்று குறிப்பிடுகிறது. இதுபோன்ற பல நூல்கள் ஏட்டுச் சுவடிகளாகவும் கையெழுத்துப் பிரதிகளாகவும் சுவடி நூலகங்களில் இருக்கலாம். அவற்றைக் கண்டுபிடித்துப் பதிப்பிப்பது தமிழன்னைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டாகும்.