முகப்பு
தமிழ்மணி

ஏன் இந்த முரண்பாடு?

சிவபெருமான் சடையில் பிறைநிலவு இருப்பதற்கு இரண்டு கதைகள் வழங்கி வருகின்றன. முதலாவது சந்திரன் செய்த குற்றத்திற்காக கடவுள் இட்ட சாபம்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:42 PM
பகிர்:

சிவபெருமான் சடையில் பிறைநிலவு இருப்பதற்கு இரண்டு கதைகள் வழங்கி வருகின்றன. முதலாவது சந்திரன் செய்த குற்றத்திற்காக கடவுள் இட்ட சாபம். அதன்படி சந்திரன் கொஞ்கம் கொஞ்சமாகத் தேய்ந்து இறுதியில் அழிய வேண்டும் என்பது; இரண்டாவது சந்திரனை ராகு, கேது என்னும் பாம்புகள் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி உண்டு அழிக்க முயன்றன என்பது.
அழியப் போகும் சந்திரன் தன்னைக் காக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் சரணடைந்தான்; சந்திரனைக் காப்பாற்ற, அவன் அழிவதற்கு மூன்று நாள் முன்னர் சந்திரனை எடுத்துத் தன் சடையில் சூடி அவனைக் காத்தார் என்பது புராணக் கதை.
ஈண்டு ஓர் ஐயம் எழுகிறது. சிவபெருமான் தன் சடையில் சூடிக்கொண்டது தேய்பிறை நிலவு. தேய்பிறையின் இருமுனைகளும் கீழ்நோக்கி இருக்கும். ஆனால், சிவபெருமான் சடையில் இருப்பதாக ஓவியங்களிலும், சிற்பங்களிலும் காணப்படுவது வளர்பிறை. அதன் இருமுனைகளும் மேல்நோக்கி உள்ளன. ஏன் இந்த முரண்பாடு? இதற்கு விளக்கம் என்ன என்பது ஆய்வுக்கு உரியது.
சிவபெருமான் சடையில் உள்ள பிறையைப் பற்றி தமிழ் இலக்கியங்களில் ஆயிரத்திற்கும் குறையாத இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த முரண்பாட்டைப் பற்றி எங்காவது குறிக்கப்பட்டுள்ளதா என்று அறிய இயலவில்லை. ஆனால், காரைக்கால் அம்மையார் பாடல்களில் இந்த முரண்பாடு பற்றிக் குறிப்பிட்டு, அதற்கு வழு அமைதியும் கூறப்பட்டுள்ளது என்பது ஒரு நுட்பமான செய்தி.
சிவனின் சடையில் உள்ள பிறை தேய்பிறைதான். வளர்பிறை அன்று. ஆனால், சிவன் தேய்பிறையை வளர்பிறை போல் (திருப்பி) திருத்தி அவரது விருப்பத்திற்கேற்ப அணிந்து கொண்டுள்ளார் என்ற ஒரு கருத்தை அற்புதத் திருவந்தாதியில் அம்மையார் பதிவு செய்துள்ளார்.

""நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகீற்றோ நீயதனை
ஈர்ந்தளவே கொண்டு இசைய வைத்தாயோ - போந்து
வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ
இளங்குழவித் திங்கள் இது'' (பா.42)

இப்புதிய கருத்தைக் கூறியும் காரைக்கால் அம்மையார் மனம் அமைதி கொள்ளவில்லை. சிவபெருமான் தலையில் இருப்பது வளர்பிறையும் அன்று; தேய்பிறையும் அன்று. முழு நிலவை அறுத்துச் செதுக்கி அவரது விருப்பத்திற்கு ஏற்ப அணிந்துகொண்ட பிறைதான் அது என்னும் கருத்தையும் ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது.

Advertisement

""அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய ஓடி விராவுதலால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தான் போலாவோ
தன்னோடு ஒப்பான் சடை'' (பா.49)

"பிறை' என்னும் சொல் சிவபெருமானுடன் இணையும் பொழுதுதான் வளர்பிறை என்னும் பொருளைத் தருகிறது. பொதுவாகப் பிறை என்பது தேய்பிறையைத்தான் குறிக்கிறது. மகளிரின் நெற்றிக்குப் பிறையை உவமையாகக் கூறி நூற்றுக்கணக்கான பாடல்கள் தமிழ் இலக்கியங்களில் உள்ளன. அவ்வுவமை தேய்பிறைதான் என்பது மகளிரின் நெற்றி மேலே வளைந்து இருபுறமும் குறுகி முனைகள் கீழ்நோக்கி அமைந்துள்ளதில் இருந்து புலனாகும். மகளிரின் நெற்றிக்குத் தேய்பிறைதான் உவமையாகக் கூறப்பட்டது என்பதற்குச் சான்றாக,

""குனிநாண் மதிநுதற் கோகில மேநின் குழலிலெல்லாப்
பணி நாண் மலரும் பறித்தணித்தேன்''

என்னும் அடிகளைக் (தஞ்சைவாணன் கோவை-138) காட்டலாம். "குனிநாண்மதி' என்றால் மேலே வளைந்த நிலவு என்பது பொருள். இந்தக் கருத்துக்கு ""குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ்சிரிப்பும்'' (அப்பர்-4941) என்னும் அப்பர் பாடலடியைச் சான்றாகக் கொள்ளலாம்.
""சிவன் தேய்பிறையை அப்படியே அணிந்தால் அச்சந்திரன் அருகில் இருக்கும் உமாதேவியின் நெற்றியுடன் போட்டியிட்டுத் தோற்று தற்கொலை செய்து கொள்வானோ என்று கருதி வளர்பிறையாகத் திருப்பி அணிந்து கொண்டார்'' என்று தற்குறிப்பேற்ற அணி அமைந்த ஒரு பாடலைப் புலவர்கள் யாரேனும் இயற்றியுள்ளனரா என்பது ஆய்வுக்குரியது.
சிவன் தலையில் வளர்பிறை இருந்தாலும் மக்கள் தேய்பிறையைத்தான் தொழுகிறார்கள் என்பது கீழ்காணும் ஒரு பத்திரிகை செய்தியால் அறியப்படுகிறது. "திருமணமான ஹிந்து மற்றும் சீக்கியச் சமூகத்துப் பெண்கள் தங்கள் கணவரின் உடல் நலத்துக்காவும் நீண்ட ஆயுளுக்காகவும் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பெளர்ணமியில் இருந்து நான்காம் நாள், "கர்வாசெளத்' நோன்பு கடைப்பிடிப்பது வழக்கம்.'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments