தமிழ்ச் செல்வங்கள்: நீர்
நீரும் நீரும் கலந்தால் நீராக ஒன்றுமே அன்றித், தனித்தனியே நில்லாது. இரண்டு ஆறுகள் கூடுமிடம் கூடுதுறையாம். பண்டைப் "பூவானி' இற்றைப் "பவானி'யாய்க் "கூடுதுறை'யாய் விளங்குகின்றது.
நீரும் நீரும் கலந்தால் நீராக ஒன்றுமே அன்றித், தனித்தனியே நில்லாது. இரண்டு ஆறுகள் கூடுமிடம் கூடுதுறையாம். பண்டைப் "பூவானி' இற்றைப் "பவானி'யாய்க் "கூடுதுறை'யாய் விளங்குகின்றது. காவிரியும் பூவானியும் கூடுமிடம் அது. முக்கூடல் என்பது என்ன? மூன்று ஆறுகள் கூடுமிடமே! முக்கூடல் பள்ளுக்கு மூலம் அது.
ஐந்து ஆறுகளின் தாயாக விளங்கும் காவிரி, "ஐயாறு' எனவும் பெயர் பெறும். ""தொண்டலால் துணையுமில்லை ஐயன் ஐ யாறனார்க்கே'' என்று பாடிய அப்பரடிகள், ""யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது'' எனப் பாடுகின்றார்! கூடுதுறைகள் மட்டுமா? ஆடுதுறைகள் தாம் எத்தனை? ஆடுதுறை, மயிலாடுதுறை, குரங்காடுதுறை, ஆவடுதுறை என்பவை துறைகள் மட்டுமா? ஊர்ப் பெயர்களும் அல்லவோ! படித்துறைகளை எப்படி எண்ணுவது?
"மண்ணிப் படித்துறை' தமிழ்த்துறை அல்லவோ? "சிந்து பூந்துறை' பெயர் சொக்க வைக்கவில்லையா?
மண்ணை அறுத்துக்கொண்டு போனது, அறு - ஆறு ஆயது! அதன் கரை நடைபாதையும் வண்டிப்பாதையும் ஆனமையால், ஆறு வழியாயது! நல்வழி என நூலும் ஆயது.
நீராறு, அறத்தாறு, ஆகாறு, போகாறு, அழுக்காறு, இழுக்காறு எனக் கருத்துப் பொருளும் ஆயது! ஓராறு இரண்டாகப் பிரிந்து மண்ணை அரங்கி - அரங்கி - (அ) அரித்து அரித்து, ஊடு திட்டாக்கியது, அரங்கப் பேருடைய ஊர்கள் எல்லாமும் அப்படி வந்தனவயல்லவோ! அவை சற்றே பெரிதானால் தீர்வுற்ற பகுதி, "தீர்வு - தீவு' ஆயது! அந்தமான் தீவு, மாலைத் தீவு, இலங்கைத் தீவு முதலியவை அவை.
ஆற்றில் இருந்து கால் பிரிந்து ஏரி, குளம், கண்வாய், ஏந்தல், தாங்கல் என்பவற்றுக்கு வந்தால், கால்வாய்ப் பெயர் பெற்றது. கால்வாயில் இருந்து வந்த நீர், வெளியேற யானைக்கண், மான்கண், புலிக்கண், துடுப்புக்கண், நாழிக்கண் வைத்தலால், அந் நீர்நிலை, "கண்வாய்' எனப்பட்டது. "கண்வாய்' பொருளறி வாராமல் "கம்மாய்' என மக்களால் வழங்கப்பட்டது. கண்வாய்ப்பட்டி "கம்மாப்பட்டி' என வழக்கூன்றியும் உள்ளது.
கண்வாயில் இருந்து நீர் வெளியேறுவது "வாய்க்கால்' எனப்பட்டது. மூன்று நாள் கால்வாயில் வந்த நீர் கொண்டு, மூன்று நான்கு திங்கள் வாய்க்காலில் நீர் சென்று விளைவை உண்டாக்கிவிடும்! கால்வாய் போல் வருவாய் வந்தாலும், வாய்க்கால் போல் செலவிட வேண்டும் என்பதை,
""ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை''
என்றார் பொருளுரை முப்பாலார்! ஆகாறு - கால்வாய்; போகாறு - வாய்க்கால். நிலம் உறிஞ்சிய நீர் உள்ளே நீரோட்டமாகின்றது. வான் வறண்ட போது உதவும் ஊற்று நீர், கீழ்நீராம் (கீணீர்) கிணறு, கேணி என்றாயின. ஊருணி நீர், ஊரணி நீர் இரண்டும் ஒப்புரவுக்கு எடுத்துக்காட்டாயின. ஊர் உணி - குடிநீர்; ஊர் அணி - குளிநீர்; அணி - பக்கம்.
கடலுக்கு "முந்நீர்' என்பது ஒரு பெயர்; பழம் பெயர். தொல்காப்பியத்தில் இடம்பெற்றது. மேல்நீர், ஆற்றுநீர், நிலத்தடிநீர் மூன்றும் உடைமையால் முந்நீர் ஆயது! படைப்பு, காப்பு, அழிப்பு எனச் செய்யும் முந்நீர்மை உடைமையால் முந்நீர் ஆயது! எனக் கூறலும் வழக்கு. நிலத்துக்கு முன்னாகிய நீர் ஆதலால் "முன்னீர்' என்பதும் தகும் என்பாரும் உளர்!
நீரே! நீரே! நீண்டவன் நீ! ஆதலால், நீட்ட நீ, அடங்காய்! உன்னால் பெயர் பெற்ற கல்லுக்குப் போவோம் மேலே! ஆனால், தண்மையியல்பான உன், "தண்' அடை பற்றிக் கண்டு செல்வோம்!
தொடர்வோம்...
Advertisement