முகப்பு
தமிழ்மணி

ஐங்குறுநூறு: பாலைநிலக் காட்சிகள்

ஐங்குறுநூறு ஒவ்வொரு திணைக்கும் நூறு நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்களைக்கொண்ட தொகை நூலாகும்.

Updated On : 16 அக்டோபர் 2016, 2:07 am IST
பகிர்:

ஐங்குறுநூறு ஒவ்வொரு திணைக்கும் நூறு நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்களைக்கொண்ட தொகை நூலாகும். ஐங்குறுநூற்றில் பாலைநிலக் காட்சிகள் பதிவு செய்யப்பட்ட முறைமையை ஓரிரு பாடல்களின் வழி ஆராய்வதன் மூலம் பாலை நிலத்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

ஐங்குறுநூறு - பாலைத்திணை
ஐங்குறுநூற்றுப் பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓதலாந்தையார். இப்பாடல்கள், செலவழுங்குவித்த பத்து, செலவுப்பத்து, இடைச்சுரப் பத்து, தலைவி இரங்குப் பத்து, இளவேனிற் பத்து, வரவுரைத்த பத்து, முன்னிலைப்பத்து, மகட்போக்கிய தாய் இரங்கு பத்து, உடன்போக்கின்கண் இடைச்சுரத்து உரைத்த பத்து, மறுதரவுப்பத்து என்னும் அமைப்பில் உள்ளன. இப் பத்துக்கள் ஒன்றினொன்றிற்குத் தொடர்புடையனவாகவும், தொடர் நிகழ்வுகளின் செய்திகளை மையப்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன.
தலைவன் பிரிந்து செல்லப் போகிறான் என்பதால் அதனைத் தடுக்கும் நோக்கில் அமைந்தவை செலவழுங்குவித்த பத்திலும், தலைவன் பிரிந்து சென்றதை செலவுப் பத்திலும், தலைவன் கூற்றாக வருபவை இடைச்சுரப் பத்திலும், தலைமகள் ஆற்றாமை மிகுதியால் இரங்கிக் கூறுவது தலைவி இரங்குப் பத்திலும், இளவேனிற் காலம் வந்துவிட்டது என்பதால் அதுவே தலைமகன் வரும் காலம் எனும் குறிப்பில் அமைந்தவை இளவேனிற் பத்திலும், தலைமகனது வரவினைத் தலைமகளுக்குத் தெரிவிக்கும் பொருட்டு தோழி கூறும் கூற்றுகள் வரவுரைத்த பத்திலும், தலைமக்கள் தம்மிடையே ஒருவரை ஒருவர் முன்னிலைப்படுத்திப் பாடுபவை முன்னிலைப் பத்திலும், தலைமக்கள் உடன்போக்கு சென்ற பிறகு மகளைப் பிரிந்த தாய் இரங்கிக் கூறுபவை
மகட்போக்கிய தாய் இரங்குப் பத்திலும், உடன்போக்கு சென்ற தலைமக்கள் இடைச்சுரத்தின்கண் கூறுவனவாக அமைந்தவை உடன்போக்கின்கண் இடைச்சுரத்து உரைத்த பத்திலும், உடன்போக்கில் ஈடுபட்டு சென்ற தலைமக்கள் மீண்டும் திரும்பி வருவதற்காக நிகழும் கூற்றுகள் மறுதரவுப் பத்திலும் அமைந்துள்ளன.

பாலைநிலத்தின் தன்மை
பாலை நிலத்தின் தன்மைகளை ஓதலைந்தையார் பலவாறு பதிவு செய்துள்ளார். அவற்றுள்,

Advertisement

Advertisement

""மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிண
அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டு'' (1:1-2)

என்னும் பாடல் வரிகளில், பாலை நிலம் வழியே செல்வோர் அதன் வெப்பத்தைத் தணிப்பதற்காக வெள்ளோத்திர மலரினைத் தலையிலே சூடிச் செல்வர். இந்த மலர்களை உலர்த்திச் சாந்தாக அரைத்துப் பூசிக் கொள்வதும் உண்டு. மிகுந்த வெப்பம் நிறைந்த பகுதியாகப் பாலை நிலம் சித்திரிக்கப்படுகிறது. இதன் மூலம் பாலையின் கொடுமை விளக்கப்படுகிறது.
தோழி தலைவனிடம், தலைவனின் பிரிவைத் தலைவி தாங்க மாட்டாள் என்னும் பொருள்படும்படி, ""நீ செல்லக் கருதிய பாலை நிலத்தின் வழியே செல்வோருக்கு வெள்ளோத்திர மலராவது உண்டு. ஆனால், தலைவி பிரிவுத் துயரினால் மனம் வெம்பும் வெப்பத்தை ஆற்றுவிக்க என்னிடம் மருந்து இல்லை'' என்று கூறி அவன் பிரிவைத் தடுக்கிறாள்.
இன்னொரு பாடலில், "பேய்மகள் இரையை விரும்பி, அவள் ஊர்தியாகிய கழுது என்னும் குற்றேவற் பேய் உணவாகத் தின்னவும், கரிய கண்ணை உடைய காக்கைகளோடு கழுகுகளும், வானத்தே கத்திக்கொண்டு பறக்கவும், சிறிய கண்ணையுடைய யானைகள், அவ்வழியே செல்வோரைக் கொன்று வீழ்த்தித் திரியும் அரிய பாலை நிலம்' என்று பாலையின் கொடுமையைச் சித்திரிக்கிறார். அப்பாடல் வருமாறு:

""அவிர்தொடி கொட்பக் கழுதுபுக வயரக்
கருங்கட் காக்கையொடு கழுகுவிசும் பகவச்
சிறுகண் யானை யாள்வீழ்த்துத் திரிதரு
நீளிடை அருஞ்சுரம்'' (314:1 -4)
இத்தகைய கொடிநெறியை(வழியை) தலைவன் எவ்வாறு கடந்து செல்வான் எனத் தலைவி வருந்துவதாகக் கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது.

""சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்
பைதற வெந்த பாலை வெங்காட்'' (317:1 3058 2)

வறட்சியால் பாழ்பட்டுக் கிடக்கும் அதாவது, மழையின்றி வறட்சியால் புற்கள் கூட முளைக்காத பாலை நிலம் என்று குறிப்பிடுகின்றார். ""தலைவன் கொடிய பாலை வழியே சென்றானாயின் அவனைத் தேடிச்சென்ற என் நெஞ்சமானது, நீண்ட நாள் ஆகியும் திரும்பி வராததற்குக் காரணத்தினை ஆராய்ந்து கூறுவாய் என் தோழியே'' எனத் தலைவி கூறுவதாக இவ்வரிகள் அமைந்துள்ளன.
ஒரு குறிப்பிட்ட நிலப் பின்னணியை மையமாகக்கொண்டு பாடல் அமைக்கும்போது அந்நிலம் சார்ந்த முதற்பொருள், கருப்பொருள்களைக் காட்சிப்படுத்த அவசியம் ஏற்படுகிறது. பாடலில் காட்சிப்படுத்தும் திறத்தைத் திறம்படச் செய்யும் கவிஞர்களே தனித்துவம் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். அவ்வாறு ஓதாலாந்தையார் பாலை நிலம் குறித்துப் பாடல்களை அமைக்கும்பொழுது அதன் உரிப்பொருளான பிரிதலை மையப்படுத்தி, முதற்பொருள், கருப்பொருளினைக் காட்சிப்படுத்தியுள்ளார். இலக்கியப் படைப்பாளரின் "படைப்பாக்க உத்தி'யாகக் காட்சிப்படுத்துதல் திகழ்கிறது எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.