தமிழ்ச் செல்வங்கள்: தண்ணீர்
'நீர்', தண்மையால் தானே பிறந்தது! நீர் நிலத்திற்கு வருமுன்னர் அதன் குளிர்காற்று, கட்டியம் கூறித் தன் வரவை அறிவிக்கின்றதே! நான் "தண்ணீர்'
'நீர்', தண்மையால் தானே பிறந்தது! நீர் நிலத்திற்கு வருமுன்னர் அதன் குளிர்காற்று, கட்டியம் கூறித் தன் வரவை அறிவிக்கின்றதே! நான் "தண்ணீர்' என்று. தண்ணீர் பெருகிய பள்ளத்தின், மண்ணில் பதிந்து கிடந்த தாமரை,
அல்லிக் கிழங்குகள் முளைத்துக் கொடியாக நீர் மேலே வந்து பூப்பூத்து எத்தகு பொலிவாகத் திகழ்கின்றது.
கிழங்கு, கொடியாக மேலே வர - பூக்க - இடைநின்றது எது? அது "தண்டு' என்பதுதானே! "தண் + து = தண்டு. தாமரைத் தண்டு, அல்லித் தண்டு, குவளைத் தண்டு, தண்ணிய நீரில் இருந்து கிளர்ந்த தண்டு, நிலத்தில் தண்டாகியதே! அது என்ன?
கீரைத் தண்டு! தண்டுக் கீரை, தண்டங் கீரை, வாழைத் தண்டு என்றாகித் தோன்றவில்லையா? புல்லினத் தண்டு, மரத்தில் ஏறியதே! ஊன்றுகோல் "தண்டு' மரத்தண்டு தானே!
"தொடித் தலை விழுத்தண்டு' என்ற சான்றோர், அப் பெயராலேயே வழங்கப்பட்டதைப் புறநானூற்றில் காண்கிறோமே! மரத்தின் தண்டு, கைத்தடித் தண்டாய், தண்டேந்தியவர்க்கும் தாவிக் கொண்டதே! மரத்தண்டு, "தண்டி'யானதே! இடை நின்ற ணகர ஒற்று அகலத் "தடி'யும் ஆயதே. ""தடி எடுத்தவ னெல்லாம் தண்டல்காரனா?'' - பழமொழி அல்லவா!
தண்டு மாரி, தண்டு விநாயகர், தண்ட பாணி எனத் தண்டு ஏந்திய தெய்வப் பெயர்களாய் மட்டுமா நின்றது? முதுகந் தண்டு, முள்ளந் தண்டு என மக்களுக்கும், மற்றை உயிர்களுக்கும் உண்டாகிவிடவில்லையா?
தண்டு ஒட்டி (தண்டட்டி) என மகளிர் காது "தண்டு' ஆகியதே. தடி மரத்தடியை மட்டுமா குறித்தது? தடி, தடிப்பு, தருமம் என வீக்கமும் நீர்க்கோவையும் ஆகிய நோய்ப் பெயர்கள் ஆகவில்லையா? தண்டு, முதியவர் ஊன்றுகோல் மட்டும்தானா? காவல்காரர் கையில் ஏறியதில்லையா? சிலம்பாட்டக்காரர் கையில் ஏறவில்லையா?
போர் வீரர் கையில் தண்டு புகுந்ததால்தானே "தண்டு' படை எனப்பட்டது. செல்வமிக்கார் தண்டியலில் சென்றனரே! துறவரும் கொண்டனரே! வரி வாங்கச் செல்வோர் கையில் தண்டு உண்டே! வரி தண்டுதல் (வரி வாங்கல்) எனப்பட்டதே! வரி தண்ட வருகின்றனர் என்பதை முன்னே அறிவிக்கத் "தண்டறை' (தண்டோர், தண்டோரா) போடப்பட்டதே! வரி தராமல் மறுத்தால் - தவணை தவறினால் - எதிர்த்துப் பேசினால் - தண்டு விளையாடிய விளையாட்டுத்தானே "தண்டனை!'
தண்டால் அறைந்தது தண்டனை என்றால், தண்டித்தவர் தண்டல்காரர் எனப்பட்டாரே. அவர் தலைவர் தண்டல் நாயகர் என வழங்கினாரே! வரி தண்டல் துறை, பண்டே உண்டே! ஆங்கிலர் ஆட்சியில் தண்டல் நாயகர் (மாவட்ட ஆட்சியர்) பதவி உயர் பதவி அல்லவா!
"தண்டு' குழந்தையர் காலணியாய்த் "தண்டை' ஆயது இல்லையா? அது வெள்ளி, தங்கம் என்னும் பொலங்கள்(உலோகங்கள்) தாமே.
""அரை வடங்கள் கட்டிச் சதங்கை
இடுகு தம்பை பொற் சுட்டி தண்டை''
எனத் திருப்புகழ் கொண்டதே (அருணகிரியார்).
ஆங்கிலர் வந்தார்; "தண்டி'யலில் போனவரும் (சிவிகை, பல்லக்கு) தொடரியில் செல்லத் தொடங்கினர். தொடரிக் காலாம் சக்கரம் எதில் ஓடியது? தண்டவாளத்தில் அல்லவா! தண்டவாளம் உருக்கிடும் பால் ஆயது
அல்லவா!
நிலச் செலவு மட்டுமா செலவு? நீர்ச் செலவு இல்லையா? படகு, ஓடம், பரிசல் என ஆற்றுத் துறைகளின் ஆட்சியில் இருந்தனவே! அதனைச் செலுத்தும் அகல் தடியின் பெயர் என்ன? }தண்டு தானே! படகு இயக்கல் "தண்டு வலித்தல்' அல்லவா!நீர் தந்த தண்டு மீண்டும் நீருக்குள் சென்றது விந்தை அல்லவா! அடுத்து நீர் தந்த "சலசல'ப்புக்குச் செல்வோம்.
Advertisement
-தொடர்வோம்