முகப்பு
தமிழ்மணி

கன்று கால் மாறுதல்

பெரியாழ்வாரின் திருமொழியிலும், ஆண்டாள் பாசுரங்களிலும் அவர்கள் தத்தம் காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நிலவி வந்த சமுதாய வழக்கங்களை "ஊடும் பாவுமாக' இழையோட விட்டுள்ளனர்.

Updated On : 5 பிப்ரவரி, 2017 at 1:14 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:24 PM

பெரியாழ்வாரின் திருமொழியிலும், ஆண்டாள் பாசுரங்களிலும் அவர்கள் தத்தம் காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நிலவி வந்த சமுதாய வழக்கங்களை "ஊடும் பாவுமாக' இழையோட விட்டுள்ளனர். பெரியாழ்வார், தம்முடைய திருமொழியில், "கன்று கால் மாறுமா போலே'(பா.298) என்று ஒரு சமுதாய வழக்கத்தைச் சுட்டியுள்ளார்.
கால் மாறுகையாவது "இடமாற்றம்' ஆகும். இவ்வியக்கத்தகு வழக்கம் பல வழிகளில் நடைபெற்றதாகத் தெரிகிறது. பிறர் கன்றினை (பசு, எருமை) சில நேரங்களில் யாருமறியாமல் களவு செய்தலும் கன்று கால் மாறுதல் எனப்படும். மேய்ச்சலுக்குச் சென்ற தாய் (பால் கறவை மாடு) அறியாதபடி கன்றை, பாலூட்டக் கொடாதபடி, அதற்குத் தெரிந்த இடத்தினின்றும் வேரிடம் மாற்றுவதும் உண்டு. இங்ஙனம் பிரிக்கப்பட்ட கன்று, தாயிடம் பால் குடிக்கும் உணர்வை அறவே மறந்த பின்பு, அதைப் பெருங் கால்நடையோடு சேர்ப்பதும் உண்டு. இச்செயல்களைப் பெரியாழ்வார் தம்முடைய திருமொழயில்,

""ஒன்றுமறி வொன்றில்லாத உருவறைக் கோபாலர்
தங்கள் கன்றுகால் மாறுமா போலே'' (பாசு.298)

என்று குறிக்கிறார். இவ்வளவு சாதுரியம் உடைய ஆய்க்குல மக்கள், எதுவுமே உணராத "அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து' (தி.பா.28) என்று ஆண்டாள் பாசுரமும் இக்கருத்துக்கு அரண் செய்கிறது. ஈண்டு, தென்பாண்டி நாட்டில் இன்றும் பேச்சு வழக்கில் இருக்கும் ஒரு பழமொழியை நினைவுகூரலாம். அப்பழமொழியாவது: "உறங்கினால் மறி "கிடாமறி' என்பதாகும். ஆய்க்குல மக்கள் (யாதவர்-இடையர்) தாம் வளர்க்கும் ஆட்டு மந்தைகளை, வயல் வெளிகளில் அறுவடை முடிந்த பின்பு இரவில் தங்க வைப்பதுண்டு. இதற்குக் "கிடை அமர்த்தல்' என்று பெயர். நிலத்தின் உரிமையாளர் இதற்குப் பணம் கொடுப்பர். ஏனென்றால், இரவில் வயலில் ஆடுகள் இடும் "சாணம்' வயலுக்கு நல்ல இயற்கை உரமாக அமையும். சில நேரங்களில் அருகருகே இரண்டு வயல் வரப்புகளில் "கிடைகள்' அமர்த்தப்படுதல் உண்டு.
ஒரு மந்தையில் இரவில் பெண் ஆடு "பெட்டைக் கன்று' ஈன்றது. அதே இரவில், பக்கத்து மந்தையில் மற்றொரு ஆடு கடாக்கன்று (ஆண் கன்று) ஈன்றது எனக் கொள்வோம். பெண்டைக் கன்று பிறந்த ஆட்டு மந்தைக்காரர் உறங்கிய நேரம் பார்த்து அருகிலுள்ள மந்தைக்காரர் தம் மந்தையில் உள்ள கடாக்கன்றைப் பெட்டைக்குப் பதிலாக மாற்றி விடுவதும் உண்டு. ஏனென்றால், மந்தையில் ஆடுகளின் எண்ணிக்கைக் கூடுவதற்குப் பெட்டைக் கன்று உதவும். மறுநாள் காலையில் தன் மந்தையில் பெட்டைக் கன்று இல்லாமல் அந்த இடத்தில் கடாக்கன்று இருப்பதைக் கண்ட அந்த மந்தைக்காரர் ஊர் பஞ்சாயத்தில் வழக்குத் தொடுத்தால், கிடைக்கும் பதில் என்ன தெரியுமா? "உறங்கினால், மறி கிடாமறிதான்'!
பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில் இப்பழமொழி இன்றும் வழங்குகிறது. விழிப்போடு இல்லாமல் உறங்கிவிட்டால் "கைப்பொருளை இழக்க நேரிடும்' என்பது இப்பழமொழியின் உட்பொருளாகும். பெரியாழ்வார் குறிப்பிடும் "கன்று கால் மாறுதல்' இச்செயலாகவும் இருக்கக்கூடும்.
-முனைவர் சீனிவாச கண்ணன்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.