முகப்பு
தமிழ்மணி

தமிழ்ச் செல்வங்கள்: முது முனைவர் இரா. இளங்குமரன்

நீட்டல் அளவையும் உடல் வழி வந்ததுதானா? எளிதில் எண்ணவே புலப்படுமே! அடிதானே, அடி அளவு! அடியில் இருப்பதுதான் அடியாகவும் அளவை ஆயது! அவ்வளவு நீளமா காலடி?

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:54 AM
பகிர்:

அளவு-4
நீட்டல் அளவு
நீட்டல் அளவையும் உடல் வழி வந்ததுதானா? எளிதில் எண்ணவே புலப்படுமே! அடிதானே, அடி அளவு! அடியில் இருப்பதுதான் அடியாகவும் அளவை ஆயது! அவ்வளவு நீளமா காலடி?
சேரன் செங்குட்டுவன் என்ன எடையுடையவனாம்? இளங்கோவடிகள் சொல்கிறார்: ""தன்நிறை அளவு ஐ ஐந்து இரட்டி'' ஐந்தை ஐந்தால் பெருக்கி இரட்டிப்பு ஆக்கிய ஐம்பது துலாமாம். ஆம்! 5000 பலமாம்! 11 அடி உயர எலும்புக்கூடும் அகழ்ந்து எடுத்துள்ளார்களாம்! அவன் காலடி நம்மடி போன்றதா? அடியின் சுருங்கிய அளவு விரலம் (அங்குலம்)!
""அணு எட்டுக் கொண்டு ஒரு துகள் (தூசி)
துகள் எட்டுக் கொண்டது எள்; எள் எட்டுக் கொண்டது ஒரு நெல்; நெல் எட்டுக் கொண்டது, ஒரு பெருமகன் கைப் பெருவிரல். 24 பெருவிரல் கொண்டது ஒரு கோல்'' இது சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் அடியார்க்கு நல்லார் உரை. (3:100)
அடி எடுத்து வைத்தலை "எட்டுப் போடுதல்', "எட்டு வைத்தல்' என்பர். நின்ற இரண்டு கால்களுள் ஒன்றை வைக்கும் அளவில் வைத்து ஊன்றி, அடுத்த காலை எடுத்து ஊன்றுதல் ஓர் எட்டு ஆகும்.
ஒரு படைச்சால் (பர்லாங்கு) நீளத்தை என் காலால் 206 எட்டில் நடந்துள்ளேன்; நான்கு கல் தொலைவுக்கு மேலானால் 207 எட்டு ஆவதைக் கணக்கிட்டுள்ளேன். படைச்சால் என்பது 220 கஐம் எனப்படும்! ஏன் ஓரெட்டுக் கூடியது? நடையில் உண்டாகும் சோர்வு தளர்வு ஆயவற்றால் உண்டாயது அது.
முழம் என்பது அண்மைக் காலம் வரை நடைமுறையில் இருந்த நீட்டல் அளவையே! முழந்தாள் என்பது முழ அளவு கொண்ட கால் பகுதியே. முழத்தில் பாதி கை விரல்களை அகல நீட்டலால் உண்டாகும் சாண் என்பதே!
""தம்பி முயற்சி எப்படி?'' அவனா? ""சாண் ஏற முழம் சறுக்குவான்'' என்பது மக்கள் வழக்கு.
இரண்டு கைகளையும் பக்கமாக நீள நீட்டினால் அவ்வளவு "பாகம்' எனப்படும். துணியை முழத்தாலும், கயிற்றைப் பாகத்தாலும் அளப்பது வழக்கம்.
மாட்டுச் சந்தையாம் தாம்பணிக்கு (தாவணிக்கு)ச் சென்றால் இன்றும் வழங்கப்படும் "பிடி' என்பது. நான்கு விரல்களை மடித்து, பெருவிரலை நிமிர்த்திய அளவு "பிடி' அளவாம்! அதிலும் சிறுபடி, பெரும்படி என முகத்தல் அளவு இருந்தமை போல் சிறுபிடி, பெரும்பிடி என்பவை உண்டு. நான்கு விரல்களை மடக்கிய அளவு சிறுபிடி; பெருவிரலை நிமிர்த்திய அளவு பெரும்பிடி; பிடி அரிசி, பிடி சோறு என முகத்தலளவுக்கும் இருந்தது. கைப்பிடியளவு என்பது அது.
பெண்ணுடற் சிறப்பாகச் சொல்வது, "பிடி இடை' என்பது. பாகமாக நீட்டிய கையை அப்படியே மடித்துச் சேர்த்தால் இரு விரல்களும் சேரும் இடம் மார்பின் சரியான ஊடு இடமாக இருப்பது வியப்பாக இருக்கும்! சிலர் காலால் எட்டுப் போட்டு எத்தனை மூலை முடுக்கு இடத்தையும் இத்தனை குறுக்கம், இத்தனை நூறம் (செண்டு) இத்தனை வளையம் (இலிங்சு) என்பது வியப்பிலும் வியப்பாக இருக்கும். அளவையர் வந்து அளந்தாலும் மாறா நிலையை என் தந்தையார் வழியே கண்ணேரில் கண்டுளேன்! அக்கலை எனக்கு எட்டாக் கலை என்பதை உணர்ந்தும் இருக்கிறேன்.

- தொடர்வோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments