7.12.1917-இல் நாங்குநேரியில் பிறந்த வானமாமலை, நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். அவருக்கு ஆங்கில இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வத்தை வளர்த்தவர் பேரா.அ.சீனிவாசராகவன். கல்லூரி நூலகத்தில், ஆங்கில இலக்கிய நூல்களையும், தமிழ் இலக்கிய நூல்களையும் வாசிக்க வைத்தார். பின்னர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துவிட்டு, சென்னையில் ஆசிரியர் பயிற்சி படிக்க சென்றார். சில காலம், நாங்குநேரி, கோவில்பட்டி, தென்காசி முதலிய ஊர்களில் ஆசிரியப் பணியாற்றினார். பின்னர், பொதுவுடைமை இயக்கத்தின்மேல் கொண்ட பற்றால், நெல்லை வண்ணாரப்பேட்டையில் "ஸ்டூடெண்ட்ஸ் டுடோரியல் இன்ஸ்டிடியூட்' என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார்.
÷இவருக்கு நாட்டுப்புற பாடல்களை சேகரிக்கும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்பது ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி. 1857-இல் நடந்த சிப்பாய் எழுச்சியின் நூற்றாண்டு விழாவை 1957-இல் அன்றைய கம்யூனிஸ்ட் இயக்கம் சிறப்பாகக் கொண்டாட முடிவு எடுத்தபோது, அன்றைய பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி, தோழர் நா.வா.விடம் ""முதல் சுதந்திரப் போரான இந்த சிப்பாய் எழுச்சி பற்றி தமிழ்நாட்டில் ஏதேனும் நாட்டுப்புறப் பாடல்கள் இருக்கிறதா என்பதை சேகரித்துத் தாருங்கள். சமூகத்தில் நடக்கும் எந்தவொரு நிகழ்வையும் சரியான முறையில் புரிந்து கொள்ளவேண்டும் என்றால், முதலில் நாட்டுப்புற மக்கள் தங்கள் வாய்மொழியில் கூறியவற்றை தொகுக்க வேண்டும்'' என்று சொல்லியிருக்கிறார்.
÷அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சில பாடல்களை சேகரித்து, அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து அனுப்பி வைத்திருக்கிறார் நா.வா. அதன் பிறகு, மக்களிடம் போகும்போது, ஏராளமான கதைப்பாடல்கள், பழமொழிகள், நாட்டுப்புறக் கதைகள் இருப்பதை உணர்ந்தார். அக்காலத்தில், நாடோடி இலக்கியக்குழு என்றொரு குழுவை கலை இலக்கியப் பெருமன்றம் உருவாக்கி, அதற்கு நா.வா.வை தலைவராக்கியிருந்தது. அந்தக் குழுவில், எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி, எஸ்.எஸ்.போத்தையா, சிவகிரி கார்க்கி, டி.மங்கை
உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக இருந்து, நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்தனர்.
÷நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிப்பது எளிதான காரியமில்லை. ஒருவர் மட்டுமே சேகரிக்க இயலாது. பலரது ஒத்துழைப்பும் வேண்டும். மேலே சொன்ன தோழர்கள் சேகரித்த நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து சிறு சிறு விளக்கங்களுடன் வெளியிட்டார் நா.வா. தொகுத்தவர் பற்றிய குறிப்பும் நூலில் இடம் பெற்றிருந்தன என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.
எருக்கலங் கட்டை வெட்டு
ஏழு வண்டி பார மேற்றி
மாடு இழுக்கலைன்னு
மாயுறாரே நம்ம சாமி
என்ற இந்தப் பாடலில், உழவனிடம் ஏழு பேர் வேலையை வாங்கும் ஜமீன்தார் பற்றி சொல்லப்படுகிறது. செய்த வேலைக்குக் கூலியை நேரடியாகக் கேட்காமல், சுற்றி வளைத்துக் கேட்கும் உழவனின் இன்னொரு பாடல் இது:
வீடுரெண்டுங் காரவீடு
வேட்டி ரெண்டும் வெள்ளை வேட்டி
இரக்கமுள்ள புண்ணியர்க்கு
பிறக்கிறது ஆண் குழந்தை
சம்பளமும் கட்டுதில்லை
சாதியுள்ள மாணிக்கமே,
எங்க இரக்கம் பார்த்து,
ஏத்த கூலி போடுமய்யா
பொழுது அடைஞ்சிருச்சே
பூமரமும் சாஞ்சிருச்சே
இன்னம் இரங்கலயோ
எசமானே உங்க மனம்
÷மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்கள் நடத்துவது பல்வேறு இலக்கிய அமைப்புகள் செய்யும் வழக்கமான ஒன்று. ஆனால், நா.வா. நெல்லை ஆய்வுக்குழு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அதில் ஆய்வாளர்கள் மாதாமாதம் கட்டுரையை எழுத்து வடிவில் வாசிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பாளையங் கோட்டையில் அவரது வீட்டு மாடியில், தரையில் பாய் விரித்து உட்கார்ந்து பேசும் கூட்டங்களில் பிரபல எழுத்தாளர்கள் பலர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் தூத்துக்குடி நகரிலும், நாகர்கோவிலிலும் நடைபெற ஆரம்பித்தன.
÷ஆய்வுக் கட்டுரைகளை அச்சில் கொண்டு வர விரும்பிய நா.வா., இதற்கென "ஆராய்ச்சி' என்ற பத்திரிகையையும் கொண்டு வந்தார். 1969 ஜூலை மாதம், "ஆராய்ச்சி' முதல் இதழ் வெளிவந்தது. இலக்கியம், வரலாறு, அறிவியல் என அறிவுத்துறையைச் சார்ந்த கட்டுரைகள் மட்டுமின்றி, மரபிலக்கியம், நவீன இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், மானிடவியல் எனப் பல்வேறு கட்டுரைகளையும் ஆராய்ச்சி இதழ் வெளியிட்டது.
÷1979 வரை வெளிவந்த ஆராய்ச்சி காலாண்டிதழ்களின் எண்ணிக்கை 22. கணக்குப்படி 42 வந்திருக்க வேண்டும். சிறு பத்திரிக்கை நடத்துவதில் உள்ள சிரமங்களை இந்த "ஆராய்ச்சி' இதழும் எதிர்கொண்டது. டெல்லியில் இருந்து எழுத்தாளர் தி.ஜானகிராமன் மத்திய அரசின் சில விளம்பரங்களைப் பெற்றுத்தந்து பேருதவி செய்தார். ஆராய்ச்சி இதழ் இப்போது மீண்டும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
÷நா.வா. குறித்து அவருடைய மாணவர் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடும்போது, ""அறிவுலகில் ஆலமரம் போன்ற அறிஞர்கள் உண்டு. ஆனால், தனது நிழலுக்குள் வேறு எந்தத் தாவரத்தையும் வளரவிடாத ஒரு குணம் ஆலமரத்திற்கு உண்டு. என்னைப் பொறுத்தளவில், நா.வா. அவர்கள் அறிவால் ஆலமரமாகவும், பண்பால் வாழை மரமாகவும் விளங்கியவர். தன்னருகில் தன் பக்க கன்றுகளுக்கு இடம் கொடுத்து வளர்க்கும் வாழை மரம் போன்று தாம் உருவாக்கிய நெல்லை ஆய்வுக்குழு, ஆராய்ச்சி ஆகியனவற்றின் வாயிலாக இளம் ஆய்வாளர்களை உருவாக்கினார். அவர்களைப் படிக்கவும், எழுதவும் விவாதிக்கவும் தூண்டினார். அவர்களின் கட்டுரைகளைப் படித்து திருத்தினார்'' என்கிறார்.
÷1980-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், "போபால்' நகரத்திற்கு அருகில் "கோர்பா' என்ற ஊரில் இருந்த தன் மகள் கலாவதி வீட்டிற்குச் சென்றிருந்தபோது, தொலைபேசியில் தன் பெயரனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது மயங்கிக் கீழே சரிந்து விழுந்தார் நா.வா. அப்போதே அவரது உயிர் பிரிந்தது (2.2.1980). உடலை பாதுகாக்கும் வசதி இல்லாத சூழலில், தோழர்களை விட்டுப் பிரிந்த அந்த மாமனிதரின் உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டது.
÷நா.வா. எழுதிய உயிரின் தோற்றம், ஐவர் ராசாக்கள் கதை, முத்துப்பட்டன் கதை, தமிழர் பண்பாடும் தத்துவமும், மார்க்சிய சமூகவியல் கொள்கை உள்ளிட்ட 22 நூல்களும் அரசுடைமையாக்கப்பட்டன. ஓர் இதழாளராக, நாட்டுப்புற ஆய்வாளராக, பண்பாட்டு ஆய்வாளராக அறியப்பட்ட ஆய்வாளர் நா.வா.வுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவர் மறைந்து ஓராண்டுக்குப் பிறகு "இலக்கியக் கலாநிதி' பட்டம் வழங்கி கெüரவித்தது.
÷1917-இல் பிறந்த, நாட்டார் வழக்காற்றியலின் தந்தையாகிய நா.வானமாமலையின் நூற்றாண்டு தொடங்கும் இவ்வேளையில், அவரை தமிழ்ச் சமூகம் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்!
-இரா. நாறும்பூநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.