தமிழ்மணி

ஆம்பல்! ஆம்பல்! ஆம்பல்!

இராம. வேதநாயகம்

பெண்மையின் மென்மையை ஆம்பலோடு ஒப்பிடுவர். ஆண்களைச் செங்கழுநீர் மலருக்கு ஒப்பிடுவர். ஆம்பல் என்பது அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டினையும் கொண்டிருக்கும் ஒரு மலர். ஆம்பல் மலர் இரவில் மலர்ந்து பகலில் கூம்பும். செங்கழுநீர்ப் பூ பகலில் மலர்ந்து இரவில் கூம்பும். ஆம்பலுக்கு "அல்லி' என்ற வேறு பெயருண்டு. செங்கழுநீர்ப் பூவுக்குக் குமுதம், செவ்வாம்பல், செவ்வல்லி முதலிய பெயர்களுண்டு. குறிஞ்சிப் பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 வகையான மலர்களுள் ஆம்பலும் ஒன்று. 

""உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்...'' (கு.பா.)

இளங்கோவடிகள், புகாரின் இயற்கை வளம் கூறும்போது, (மனையறம்படுத்த காதை) எழுநிலை மாடத்து மாளிகையின்கண் இடையில் அமைந்த நான்காம் மாடத்தின்கண், மயன் என்னும் தெய்வத் தச்சன் தன் மனதாற் படைத்து வைத்தாற் போல் மணியாலியன்ற கால்களையுடைய சிறந்த கட்டிலின்கண் இருந்த அளவிலே கழுநீரும் இதழொடியாத பூவாகிய செங்கழுநீர் எனப்படும் ஆம்பல் மலரும் என்று குறிப்பிடுகின்றார்.
எல்லாப் பூக்களும் குறிப்பிட்ட காலகட்டத்தில் வாடும் இயல்புடையனவே. அதைப் போல் ஆம்பல் மலரும் வாடும் நிலையில் இருக்கும்போது, குருவியின் குவிந்த சிறகுகள் போலிருக்கும் என்று மாமலாடனார் என்ற புலவர்,

""ஆம்பல் சாம்பலன்ன
 கூம்பிய சிறகர் மனையுறை...'' (குறுந்- 46)
என்ற வரிகளால் விளக்குகின்றார். சிலம்பில் ஆய்ச்சியர் குரவையில் வருகின்ற மாதரியின் மகளை வர்ணிக்கையில் பரணர் என்னும் புலவர், பரல்கள் இடம்பெற்ற சிலம்பினையும், ஆம்பல் மலரின் அழகிய மாலையையும் அரத்தால் அறுக்கப்பட்ட அழகிய வளைகளால் அழகு பெற்ற முன்கையையும், நகைகள் அணிந்த மூங்கில் போன்ற தோள்களையும் உடைய ஐயை... என்று குறிப்பிடுவதை நோக்குவோம்:

""அரிபெய் சிலம்பின் ஆம்பல்அம் தொடலை
அரம்போழ் அம்வளை பொலிந்த முன்க...''(அகநா.6)

மேலும், ஆம்பல் தண்டு துளையுள்ளதாகவும், திரட்சி பொருந்தியதாயும் இருக்கும் என்று, ""தூம்புடைத் திரள்கால் ஆம்பல்...'' (குறுந்.178) என்றும், கணவன் காலமானால் மனைவி கைம்மை நோன்பை மேற்கொள்ள வேண்டும் என்று, ""அளியதாமே ஆம்பல்...'' (புறம் 248) என்று ஒக்கூர் மாசாத்தியாரும் உரைத்திருப்பதை நினைவுகூர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT