தமிழ்நாடு தொன்மொழிகளில் முன்மொழி-எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐவகை அடைவுகள் உடையது இம்மொழி, இன்கவி இலக்கணமாய மொழிபெயர்ப்பைத் தமிழில் தந்தவர் தண்டமிழ் இலக்கணத் தண்டியாவார். இவ்வாசிரியர், புலவர் அம்பிகாபதியின் மகன்; கம்பரின் பெயரன். இதை தண்டியலங்காரச் சிறப்புப் பாயிரத்தாலும், "ஆதரந்தீர் அன்னை போலினியாய்! அம்பிகாபதியே' என்று திரிபங்கி (முப்பேதங்களுடைய பாடல்) பாடியதாலும் அறியலாம். மேலும்,
"என்னேய் சிலமடவார் எய்தற்கு எளியவோ?
பொன்னே!அனபாயன் பொன் நெடுந்தோள் - முன்னே
தனவேய் என்றாளும் சயமடந்தைத் தோளாம்
புனவேய் மிடைந்த பொருப்பு'
என, இவர் குலோத்துங்க சோழனை "முத்தகம்' வைத்துப் பாடியதாலும், "அண்ணல் அனபாயன் வாழி' என வாழ்த்தணிச் செய்யுளில் அனபாயச் சோழனாகிய இரண்டாம் குலோத்துங்கனை வாழ்த்திப் பாடியுள்ளதாலும் இவரது காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு எனத் தெரிகிறது.
தமிழ்நாடு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களால் வழங்கப்பெற்று வந்துள்ளது. சங்க காலத்தில் குமரிநாடு (அஃதாவது, கற்றாழை மண்டிக் கிடந்த நாடு) என்றும், நாவலந்தண் பொழில் (நாவற்காடுகள் நிரம்பிய நாடு) என்றும், அழைக்கப்பெற்று இமயம் முதல் பொருநையாறு பாய்ந்த குமரிவரை விரவி இருந்தது. பின்னாளில், இப்பெருநிலம் பிரித்தாளுகை செய்யப்பட்டு சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு ஆகிய பெயர்களில் மூவேந்தர்களால் ஆளப்பெற்றது. அதிலும் உட்பிரிவுகளாக,
"தென்பாண்டி குட்டங் குடங் கற்கா வேண்பூழி
பன்றியருவா வதன் வடக்கு நன்றாய
சீதமலாடு புனனாடு செந்தமிழ் சேர்
ஏதமில் பன்னிரு நாட் டெண்'
என்ற பன்னிரு நாடுகளையும் உடைத்தது தமிழ்நாடு. இதனால், அந்நாளில் செளந்தர பாண்டியன் என்னும் முருகன் ஆட்சி செய்தான் (செளந்தரம் -அழகு- முருகன்) திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் ஆகிய ஐந்து பிரிவுகளை உடையதாயும் தமிழ்நாடு விளங்கிற்று. இதற்கு "பஞ்ச திராவிடம்' என்று பெயர்.
தண்டியார் கூறும் தமிழ்நாடு ஐந்தாகும். தண்டியலங்கார இலக்கண மொழிபெயர்ப்பு நூலில், சிலேடை அவநுதியாக அவரமைத்த பாடல் வழி இதனை அறியலாம்.
"நறவேந்து கோதை நலம் கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியான் அல்லன் - துறையின்
விலங்காமை நின்று வியன் தமிழ் நாடு ஐந்தின்
குலங்காவில் கொண்டு ஒழுகும் கோ'
தேன் பொருந்திய மலர்களால் ஆகிய மாலையை அணிந்த பெண்ணின் அழகைக் கவர்ந்து கொண்டான் இவ்வரசன். அவ்வழகைக் கொடுக்காது வஞ்சிக்க மாட்டான். நல்லொழுக்க அறநெறியில் நின்று அவன் ஆட்சி செய்யும் பெரிய ஐவகை தமிழ் நாட்டையும் பாதுகாத்து வரும் சோழனாவான் என்பது இதன் பொருள். ஈண்டு கூறப்பெற்றுள்ள தமிழ்நாடு ஐந்தாவது, சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, வைதருப்பநாடு, கெளடநாடு ஆக ஐந்து பெரும் பிரிவாகிய தமிழ்நாட்டைக் குலோத்துங்கன் ஆட்சி செய்துள்ளமை தண்டியாரின் பாடல் வழி அறியலாம் என்பது முடிபாகும்.
"மெய்பெறுமரபின் விரிந்த செய்யுட்கு
வைதருப்பம்மே கெளடம் என்றாங்கு
எய்திய நெறிதாம் இருவகைப் படுமே'
என்று சேர, சோழ, பாண்டிய நாட்டோடு வைதருப்பம், கெளடம் ஆகிய இரு நாடுகளையும் சேர்த்து ஐவகைத் தமிழ்நாடு என்பார் தண்டியார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.