முகப்பு
தமிழ்மணி

கவி பாடலாம் வாங்க - 31

அடிகளின் வகையைப் பற்றி முதல் பாகத்தில் பார்த்தோம். இங்கே அவற்றைச் சுருக்கமாக நினைப்பூட்டிக் கொள்ளலாம்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

3. அடிகள்
 அடிகளின் வகையைப் பற்றி முதல் பாகத்தில் பார்த்தோம். இங்கே அவற்றைச் சுருக்கமாக நினைப்பூட்டிக் கொள்ளலாம்.
 இரண்டு சீர்கள் அமைந்த அடிக்குக்
 குறளடி என்று பெயர்.
 மூன்று சீர்களால் வருவது சிந்தடி.
 நான்கு சீர்களால் வருவது நேரடி.
 ஐந்து சீர்களால் வருவது நெடிலடி.
 ஆறு சீர்களால் வருவது கழி நெடிலடி.
 நேரடிக்கு அளவடி என்றும் ஒரு பெயர் உண்டு.
 குறளடி வரும் இடங்கள்:
 1. இணைக்குறளாசிரியப்பாவில்
 இடையிடையே வரும்.
 2. கலிப்பாவில் அம்போதரங்க உறுப்பில் வரும்.
 3. குறளடி வஞ்சிப்பாவில் வரும்.
 4. வஞ்சித் தாழிசையில் வரும்.
 5. வஞ்சித் துறையில் வரும்.
 சிந்தடி வரும் இடங்கள்:
 1. எல்லா வெண்பாக்களிலும்
 ஈற்றடியாக வரும்.
 2. நேரிசையாசிரியப்பாவின்
 ஈற்றயலடியாக வரும்.
 3. இணைக்குறளாசிரியப்பாவின்
 இடையே வரும்.
 4. கலிப்பாவில் அம்போதரங்க உறுப்பில் வரும்.
 5. சிந்தடி வஞ்சிப்பாவில் வரும்.
 6. வெண்டாழிசையின் இறுதி அடியாக வரும்.
 7. வெண்டுறையில் இடையே வரும்.
 8. ஆசிரியத் துறையின் இடையே வரும்.
 9. கலித்தாழிசையின் இடையே வரும்.
 10. வஞ்சி விருத்தத்தில் வரும்.
 நேரடி வரும் இடங்கள்:
 1. வெண்பாக்களில் ஈற்றடி ஒழிந்த மற்ற
 அடிகள் நேரடியாக வரும்.
 2. நிலைமண்டில ஆசிரியப்பாவில் எல்லா
 அடிகளும் நேரடியாக வரும்.
 3. நேரிசை ஆசிரியப்பா ஈற்றயலடி ஒழிந்த
 அடிகள்.
 4. இணைக்குறளாசிரியப்பாவில்
 பெரும்பாலான அடிகள்.
 5. அடிமறிமண்டில ஆசிரியப்பா அடிகள்.
 6. கலிப்பாவில் தரவு, தாழிசை அடிகள்.
 7. கலிப்பாவில் அம்போதரங்க உறுப்பில்
 சில அடிகள்.
 8. வெண்டாழிசையில் வரும்.
 9. வெண்டுறையில் வரும்.
 10. ஆசிரியத் தாழிசையில் வரும்.
 11. ஆசிரியத் துறையில் வரும்.
 12. கலித்தாழிசையில் வரும்.
 13. கலிவிருத்தத்தின் அடிகள் நேரடிகளே.
 நெடிலடி வரும் இடங்கள்:
 1. இணைக்குறளாசிரியப்பாவில் அருகி வரும்.
 2. குறட்டாழிசையில் வரும்.
 3. வெளி விருத்தத்தில் வரும்.
 4. ஆசிரியத் துறையில் வரும்.
 5. ஆசிரியத் தாழிசையில் வரும்.
 6. கலித்தாழிசையில் வரும்.
 7. கலித்துறையின் அடிகள் நெடிலடிகளே.
 கழிநெடிலடி வரும் இடங்கள்:
 1. கலிப்பாவில் வண்ணக உறுப்பில் வரும்.
 2. குறட்டாழிசையில் வரும்.
 3. வெளிவிருத்தத்தில் வரும்.
 4. வெண்டுறையில் வரும்.
 5. ஆசிரியத் தாழிசையில் வரும்.
 6. ஆசிரியத் துறையில் வரும்.
 7. ஆசிரிய விருத்தம் யாவும் கழிநெடிலடியாய்
 வருவனவே.
 அதிகமான சீர்களை உடைய அடிகளை ஆசிரிய விருத்தத்தில் காணலாம். மிகவும் குறைந்த அடிகளையுடைய பாட்டுக் குறள் வெண்பா; அது இரண்டடிகளை உடையது. அகவற்பா மூன்றடிகளுக்குக் குறைவாக வராது. கலிப்பா நான்கடியிற் குறைந்து வராது. வஞ்சிப்பாவுக்கு மூன்றடியே இழிந்த எல்லை. சிறுபான்மை இரண்டடிகளாலும் வரும்.
 வெண்பாவில் பஃறொடை வெண்பா 12 அடி வரையில் வரும். கலிவெண்பா எத்தனை அடிகளாலும் வரலாம். ஆசிரியப்பாவின் அடிகளுக்கு மேல் எல்லை இல்லை. கலிப்பாவும் வஞ்சிப்பாவும் எத்தனை அடிகளாலும் வரலாம். "உரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமை'' என்று பாட்டுக்களின் மேல் எல்லையைப் பற்றி யாப்பருங்கலக்காரிகை கூறுகிறது.
 (தொடர்ந்து பாடுவோம்)

முழு கட்டுரையைப் படிக்க →