பகைமையை ஒழிக்கும் பாலைப்பண்!
பத்துப்பாட்டின்கண் உள்ள "ஆற்றுப்படை' நூல்கள் சொல் நயமும் உவமைகளும் மிக்கவை.
பத்துப்பாட்டின்கண் உள்ள "ஆற்றுப்படை' நூல்கள் சொல் நயமும் உவமைகளும் மிக்கவை. தொல்காப்பியம் அவற்றின் முறைமையை (தொல்.புறத்.25) எடுத்துரைக்கிறது. பொருள்தேடி வந்தோரை மட்டுமன்றி தமிழ்ச்சுவை தேடி வருவோரையும் மகிழ்விக்கும் ஆற்றல்மிக்கவை அவை.
பொருநராற்றுப்படையில், பாலை யாழினால் வாசிக்கப்படும் பண் பகைமை கொள்வோரையும் மாற்றும் இயல்பு கொண்டது என்கிறார் புலவர் முடத்தாமக் கண்ணியார்.
இசைக்கே உரிய பண்பு, ஈர்த்தலும் நிலைமாற்றலும் என்பர். பகையையே மாற்றும் பண் எனின் அஃது பெருவியப்பன்றோ! பாலை யாழின் வடிவத்தை,
Advertisement
"குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்
விளக்கழ லுருவின் விசியுறு பச்சை
எய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்
றைதுமயி ரொழுகிய தோற்றம்' (பொரு.4-7)
எனத் தொடங்கி, அப்பாலை யாழிலிருந்து வெளிவரும் பண்ணானது,
"ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கு மருவுஇன் பாலை'
என்கிறது. வழியில் ஆறலைக் கள்வர் படைகொண்டு தாக்குவதிலிருந்து விடுபடுவதற்காகவும், தான் பொருநன் எனக் காட்டிக் கொள்ளும் பொருட்டும் யாழில் பாலைப்பண் இசைத்துப் பாடிக்கொண்டு பொருநர் கூட்டம் செல்லும் எனப் பாடல் கூறுகிறது.
இதனால், பொருநர் மீது ஆறலைக் கள்வர் அருள் காட்டி, வழிப்பறி செய்வதிலிருந்து மாறுபடுவராம். மேலும், இவர்களது பாலைப்பண் கள்வர்களையும் மருவச் செய்யுமாம். இதனால், கள்வர் பொருநர்க்கு உதவும் நண்பராகிவிடுவராம்.