ஐங்குறுநூறு
சங்க இலக்கியங்களுள் எட்டுத்தொகை வரிசையில் இடம்பெறும் ஐங்குறுநூறு சற்று மாறுபட்ட இலக்கியம். ஏனெனில், சங்க இலக்கியங்களில் இடம்பெறும் ஐந்திணைகள், தொல்காப்பியர் வகுத்த
சங்க இலக்கியங்களுள் எட்டுத்தொகை வரிசையில் இடம்பெறும் ஐங்குறுநூறு சற்று மாறுபட்ட இலக்கியம். ஏனெனில், சங்க இலக்கியங்களில் இடம்பெறும் ஐந்திணைகள், தொல்காப்பியர் வகுத்த இலக்கிய முறைப்படி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில்தான் இருக்கும். சங்க இலக்கியம் அல்லது சங்க கால மக்கள் வாழ்வு இயற்கையோடு தொடர்புடையது ஆதலால், மலை தொடங்கி, கடல் முடிய நிரவியுள்ள நில அமைப்பின்படி அவை குறிஞ்சி முதலாக முறைப்படுத்தப்பட்டன. ஆனால், ஐங்குறுநூற்றில் மருதம் முதலாகக் கொண்டு தொடங்குகிறது. அவ்வகையில், மருதத் திணையில் அமைந்த நூறு பாடல்களில் முதல் பத்தான வேட்கைப்பத்து காட்டும் நற்சொற்களை (மங்கலச் சொற்கள்) காண்போம்.
"வேட்கை' என்றால் விருப்பம், விழைவு என்றும்; "வேட்டேம்' என்றால் விரும்பினோம் என்றும் தோழி கூற்றாக இப்பத்துப் பாடல்களும் வருவதால், புற ஒழுக்கத்தில் நீண்ட நாள் ஈடுபட்ட தலைவனோடு இன்பம் துய்க்கவியலாத தலைவியின், தோழியின் மனவேட்கையும்
(மனவிருப்பத்தையும்) விளக்குமாறு வேட்கைப்பத்து அமைகிறது.
அன்பின் ஐந்திணைக்குரிய களவு, கற்பு என்னும் இருவகை ஒழுக்கங்களிலும் தலைவனின் பிரிவுக் காலத்தில் தலைவியும் அவள் தோழியரும் எதன் பொருட்டு விருப்பமாக இருந்தார்கள் என்பதனைத் தலைமகளிடம் தோழி கூறுவதாக அமையும் பாடல்களின் சிறப்பை
ஆராயுங்கால்,
"வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
... .... யாணர் ஊரன் வாழ்க (ஐங்-1)
என்கிற முதல் பாடலில், "நான் பரத்தமை ஒழுக்கம் மேற்கொண்ட வேளையில் என்னைப் பற்றி என்ன நினைத்தீர்கள் என்று தலைவன் வினவியபோது பதில் கூறுமுகமாக இப்பாடல் இருப்பினும், வாழி, பொலிக, சிறக்க, வாழ்க என்கிற சொல்லாட்சி ஒரு மனிதனின் குற்றத்தை சுட்டிக்காட்டாமல் வாழ்த்தியே கூறும் கூற்று சிந்திக்கத்தக்கது.
வாழி ஆதன் என்பதனை வாழியாதன் என ஏற்றுக்கொண்டால்,
சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குறிப்பதும் ஆகலாம்.
அப்போது அவனுக்கு உட்பட்ட குறுநிலத் தலைவனாக அவினியைக் கொள்ளலாம். கொங்கு நாட்டு அவினாசி என்னும் ஊர்ப்பெயர் அவினியை நினைவுபடுத்தும். ஆதன் என்றால் சேர மன்னர்களுள் சிலருடைய குடிப்பெயர். அவினி - சேரக்குடியில் பிறந்த மன்னன் என்றும், அவினியென்போன் ஓரம்போகியார் காலத்தில் ஆண்டவன் என்றும் அவனை வாழ்த்த விழைந்த புலவர் அவன் குடி முதல்வனாக செல்வக்கடுங்கோ வாழியாதனையும் வாழ்த்துமுகமாகத் தோழி வாயிலாக வாழ்த்தினார் என்றும் கருதுவர். இவர் அரசவாழ்த்தே முதற்பத்தாக அமைந்திருப்பது இந்நூலுக்குச் சிறப்பென உரையாசிரியர்களும் குறிப்பிட்டிருப்பதை அறிய முடிகிறது. ஒவ்வொரு பாடலிலும் இடம்பெற்றுள்ள மங்கலச் சொற்கள் வருமாறு:
1. நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க
"காடு வெளஞ்சா கஞ்சி குடிக்கலாம்' (வட்டார வழக்கு)
"நீடு வாழ்க!' என்பாக்கு அறிந்து' (குறள் - 1312)
"நடந்தாய் வாழி காவேரி' (சிலம்பு, கானல் 7-39)
"வளனே வாழி காவேரி' (சிலம்பு, கானல் 7-43)
2. விளைக வயலே வருக இரவலர்
"வழிவழிச் சிறக்க
மண்ணு விளைய வேணும்
மக்கள் பஞ்சம் தீர வேணும்' (வ.வ.)
"பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!' (புறம் 6-10)
"சென்மோ, இரவல! சிறக்க நின் உள்ளம்!'
(பெரும்பாண் 45)
3. பால்பல ஊறுக பகடுபல சிறக்க
பூக்கஞல் ஊரன் தன்மனை
வாழ்க்கை பொலிக!
"பட்டி நிறைய வேணும்
பால்பாக்கியம் செழிக்க வேணும்' (வ.வ.)
"வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல்
பெரும்பசுக்கள்' (திருப்பாவை.3)
4. பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
கழனி யூரன் மார்பு
பழன் மாகற்க
"ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' (ஒளவை)
5. பசியில் ஆகுக பிணிசேன் நீங்குக
தண்துறை யூரன் தேர் எம்
முன்கடை நிற்க
"மழை வேண்டு புலத்து மாரி நிற்ப,
நோயொடு பசி இகந்து ஒரீஇ' (பதிற்று 13-27)
"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்'
(குறள், 734;)
6. வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
தண்துறை யூரண் வரைக
எந்தையும் கொடுக்க
"ஊருடன் பகை வேருடன் கெடும்' (ஒளவை)
"பகை நட்பாக் கொண்டு ஒழுகும்' (குறள் - 874)
7. அறநனி சிறக்க அல்லது கெடுக
தண்துறை யூரன் தன்னூர்க்
கொண்டனன் செல்க
"அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்' (குறள்-96)
8. அரசுமுறை செய்க களவில் லாகுக
பூக்கஞல் ஊரன் சூள்இவண்
வாய்ப்ப தாக !
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன்' (குறள்-388)
9. நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
தண்துறை யூரன் கேண்மை அம்பல் ஆகற்க
நல்லவன் நல்லது செய்தால்
"பொல்லாதது போற வழி போகும்' (வ.வ.)
"நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்' (புறம் 195)
10. மாரி வாய்க்க வளநனி சிறக்க
தண்துறை யூரன் தன்னோடு
கொண்டனன் செல்க
"காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்' (வ.வ.)
"மாமழை போற்றுதும்' ( சிலம்பு)
சங்க இலக்கியங்களிலும் பிற இலக்கியங்களிலும் பல்வேறு இடங்களில் மங்கலச் சொற்கள் குறித்துப் புலவர் பெருமக்கள் பரக்கப் பேசினாலும்கூட குறிப்பாக ஐங்குறுநூறு "வேட்கைப்பத்து' பாடல்களில் இடம்பெறும் மங்கலச் சொற்கள் சிந்திக்கத்தக்கனவாக அமைந்துள்ளன.
பொலிக, சிறக்க, வாழ்க, விளைக, வருக, ஊறுக, பகடு சிறக்க, புல்லார்க, பசியில்லாகுக, பிணி நீங்குக, நிற்க, தணிக, நந்துக, கொடுக்க, செல்க, செய்க, இல்லாகுக, வாய்ப்பதாக, நன்று, தீது இல்லாகுக, அம்பல் ஆகற்க, மாரிவாய்க்க.
மேற்கண்ட சொற்களில் பெரும்பான்மை மங்கலச் சொற்களே! ஓரம்போகியாரின் பாடல்கள் "மனிதம்' என்ற சொல்லுக்கு விடை கூறுகிறது. சமூகப் பார்வையில் ஒரு பெரும் புலவனாக, முற்போக்குச் சிந்தனையாளராக தன் உள்ளக் கருத்துகளையும், ஆக்கப்பூர்வமான எண்ணங்களையும் பரக்கப் பதிவு செய்திருக்கும் பாங்கும் எண்ணத்தக்கது.
நாடு வாழ அரசன் வாழ வேண்டும்; அரசன் வாழ குடிமக்கள் வாழ வேண்டும்; குடிமக்கள் வாழ நெல் விளைய வேண்டும்; நெல் விளைய மழை பொழிய வேண்டும்; மழை பொழிய இயற்கை வளம் காக்கப்பட வேண்டும் என விரும்பிய புலவர் வேட்கைப்பத்து பாடியது தலைவன்- தலைவி- தோழிக்கானதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆராய்ச்சிக் கண்கொண்டு பார்க்கும் வேளையில், தலைவனை விரும்பும் தலைவியாகக் காட்டினாலும் இந்தச் சமூகத்தை வளத்தோடு பார்க்கும் தொலைநோக்குச் சிந்தனையாளர் ஓரம்போகியார் என்றால் அது மிகையன்று.
-முனைவர் ப.முருகன்