எட்டயபுரம் மகாகவி பாரதி விழா கடந்த ஆண்டைப் போலவே சிறப்பாக இந்த ஆண்டும் நடந்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகமெங்கும் இருந்து தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் என்பதும், கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் வந்திருந்தார்கள் என்பதும், வருங்காலம் குறித்த நம்பிக்கையைத் தருகிறது.
மகாகவி பாரதியார் இல்லத்தில் காப்பாளராக இருக்கும் மகாதேவி சொன்ன செய்திகள் ஆச்சரியப்படுத்தின. நெடுஞ்சாலையில் இல்லாமல், ஊருக்குள் உள்ள சிறியதொரு தெருவில் அமைந்திருக்கும் மகாகவி பாரதியாரின் நினைவில்லத்தில் தினந்தோறும் குறைந்தது 200க்கும் அதிகமானவர்கள் குடும்பத்தினருடன் வந்து தரிசிப்பதாகக் கூறினார். வருகிறவர்கள் தங்கள் குழந்தைகளை பாரதியார் சிலைக்கு முன்னால் நிறுத்திப் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், அவர்களை பாரதியாரின் பாடலைப் பாடச்சொல்லி வணங்கி ஆசிபெறச் செய்வதும் வழக்கம் என்றபோது மனமெல்லாம் மகிழ்ச்சி மாரி பொழிந்தது.
மகாகவி பாரதியார் இல்லத்தில் இரண்டு மூன்று அறைகள் காலியாகக் காட்சியளிக்கின்றன. அங்கே பாரதி குறித்த ஆய்வுகள் நடத்த வசதியாக நல்லதொரு நூலகத்தை ஏன் அமைக்கக்கூடாது? கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்!
தமிழகத்திற்கு செளராஷ்டிரர் சமுதாயம் அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. பாரதியாரின் கவிதையை முதன்முதலில் அச்சு வாகனம் ஏற்றிய பெருமை செளராஷ்டிர சமுதாயத்துக்குத்தான் உண்டு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவர் நடத்திவந்த மதுரையிலிருந்து வெளியான "விவேகபாநு' என்கிற இதழில்தான் பாரதியாரின் "தனிமையிரக்கம்' என்கிற கவிதை முதன்முதலில் வெளிவந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பாரதியாரின் பாடல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. அன்றைய சென்னை ராஜதானியின் சட்டப் பேரவையில் துணிந்து பாரதியாரின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே' பாடலை ராகத்துடன் பாடித் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தவர் செளராஷ்டிர இனத்தவர்களின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்த எல்.கே.துளசிராம். காமராஜரின் மதிய உணவுத் திட்டத்துக்கும், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்துக்கும், முன்னோடியாக அமைந்தது மதுரை செளராஷ்டிரப் பள்ளியில் எல்.கே.துளசிராம் நடைமுறைப்படுத்திய மாணவர்களுக்கான உணவுத் திட்டம்தான் என்பது வரலாற்று உண்மை.
தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை தியாகி என்.எம். ஆர். சுப்புராமனின் பங்களிப்பைக் குறிப்பிடாமல் எழுதிவிட முடியாது. செளராஷ்டிர சமுதாயத்தில் பிறந்த ஆளுமைகள் "யார் எவர்' என்கிற புத்தகம் தொகுக்கப்பட வேண்டும். அவர்களது பங்களிப்பு குறித்துத் தமிழகம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான முயற்சியில் ஒன்றுதான் வி.என். சாமி வெளிக்கொணர்ந்திருக்கும் "சுதந்திரப் போராட்டத்தில் செளராஷ்டிரர்' என்கிற புத்தகம்.
அகவை 90 கடந்த வி.என்.சாமி "தினமணி' நாளிதழின் மதுரைப் பதிப்பில் தலைமை நிருபராகப் பணியாற்றியவர். இந்த வயதிலும்கூட சற்றும் தளராமல் எழுத்துப் பணியைத் தொடர்பவர். விடுதலை வேள்வியில் பங்குபெற்ற செளராஷ்டிர சமுதாயத்தினர் குறித்து மட்டும்தான் இந்தப் புத்தகத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார். கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணில் குடியேறி, தமிழகத்துடன் ஒன்றிவிட்ட தமிழக செளராஷ்டிர இனத்தவர் குறித்த விரிவான வரலாற்றுப் பதிவையும் விரைவிலேயே வி.என்.சாமி வெளிக்கொணர வேண்டும்.
எட்டயபுரம் பாரதி விழாவுக்குச் செல்வதற்கு முன்னால், நாகர்கோவில் மணிக்கட்டிப் பொட்டலுக்குச் சென்று எழுத்தாளர் பொன்னீலனை சந்திக்க விரும்பினேன். அவரது அகவை 80 விழாவில் கலந்து கொள்ள முடியாததால், நேரில் சென்று வாழ்த்த விழைந்தேன்.
அண்ணாச்சியின் வீட்டில் ஒரு பெரிய இலக்கிய அன்பர்களின் கூட்டமே இருந்தது. உமா கண்ணன், பெரியவர் தங்கக்கண், கண்ணன் என்கிற கங்கா, எழுத்தாளர் பொன்னீலனின் உதவியாளர் திவ்யா என்று கலகலப்பாக சிலமணி நேரங்கள் பறந்தன. கவிதைகள் குறித்து, இதழியல் குறித்து, நாட்டு நடப்பு குறித்து நாங்கள் பகிர்ந்துகொண்ட செய்திகள் ஏராளம்.
பொன்னீலன் அண்ணாச்சியின் பிறந்தநாளை முன்னின்று நடத்தியவர் அவரது நிழலாகத் தொடரும் ராம் தங்கம்.
எழுத்தாளர் பொன்னீலன் குறித்த 14 பேரின் பதிவுகளை சேகரித்துத் தொகுத்திருக்கிறார் அவர். "பொன்னீலன் 80' என்கிற அந்தத் தொகுப்பை அவர் என்னிடம் தந்தார். அந்தத் தொகுப்பின் கடைசியில் "என் நண்பர்கள்', "என் வீடு', "என் படைப்புகளும், எனக்குப் பிடித்த படைப்புகளும்' என்று பொன்னீலனின் பதிவை என்.சுவாமிநாதன் தொகுத்திருக்கிறார்.
பொன்னீலன் குறித்துத் தெரிந்து கொள்ள இதைவிடச் சிறந்த தரவு வேறு எதுவும் இருக்க முடியாது. இளவல் ராம் தங்கத்துக்கு நன்றி.
ராம் தங்கத்தால் விழா முன்பே எடுக்கப்பட்டுவிட்டாலும் இன்றுதான் (15.12.2019) பொன்னீலன் அண்ணாச்சி யின் பிறந்தநாள். "தினமணி'யின் சார்பில் அவர் நூறாண்டு காண வாழ்த்துகள்!
ஆண்டுதோறும் எட்டயபுரம் பாரதி விழாவுக்குத் தவறாமல் வருபவர்களில் சிங்கப்பூர் தமிழ் நேசன் முஸ்தபாவும் ஒருவர். எட்டயபுரம் செல்வதற்கு முன்னால் நாகர்கோவிலில் எழுத்தாளர் பொன்னீலனை சந்திக்கப் போகிறோம் என்று கூறியதும், தானும் வருவதாகச் சொன்னார் அவர்.
நானும், நண்பர் அய்யாறுவும் சென்னையிலிருந்து சென்ற அதே கன்னியாகுமரி விரைவு தொடர் வண்டியில் திருச்சியில் இணைந்து கொண்டார் முஸ்தபா. அதிகாலையில் கன்னியாகுமரியில் போய் இறங்கியதும், சூரியோதயம் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது. தொடர் வண்டி நிலையத்திலிருந்து முக்கடல் கூடுமிடத்துக்கு நாங்கள் விரைந்தோம். நிருபர்கள் மீனாட்சிசுந்தரமும், ராமகிருஷ்ணனும் உடன் வந்தனர். நீள்கடலைப் பார்த்தபடி நின்றபோது, குகை. மா.புகழேந்தியின் கவிதை ஒன்றின் வரிகளை (முழு கவிதையும் தலைப்பும் நினைவில் இல்லை) எனது மனது அசைபோட்டது.
கடலைப் பருகிவிட முடியாமல்
தோற்றுக் கொண்டே இருக்கிறது
சூரியன்!
கடலின் வயிற்றுக்கு
சிறு கவளம்
பூமி
கடல் வரை வானம்
கடல் வரை பூமி
கடல் வரை யாவும்!
அடுத்த வாரம் சந்திப்போம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.