தமிழ்மணி

குமரன் திருக்குறள்

கோ. உத்திராடம்

வரகவி அ.சுப்ரமண்ய பாரதி இயற்றிய "குமரன் திருக்குறள்" 1934ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டுள்ளது.  இந்நூல் நூறு குறள் வெண்பாக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு குறளும் முருகப்பெருமானின் சிறப்புகள், திருவிளையாடல்கள், வழிபாட்டுமுறை,   துதிப்பாடல்களின் நன்மைகள் எனப் பகுத்துரைக்கப்பட்டுள்ளது. முருகன் திருமாலின் மருமகன், சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடல் ஆகிய நிகழ்வுகளை,

ஊரையொரு காலி லுவந்தளந்த மான்மருகன்
பேரையுரை போகும் பிணி (6)
கீரன் றமிழ்க்குகந்து கேடில்லா வீடுதந்த
தீரன் றிருவருளைத் தேடு (16)
பிட்டுக்கு மண்சுமந்த பெம்மா னருள்குமரன்
குட்டுக்கு வேதன் குறி (64)

என எளிய நடையில் இக்குறளை இயற்றியுள்ளார். மேலும், முருகப்பெருமானின் துதிப் பாடல்களைப் பாடினாலும், கேட்டாலும் எழுதினாலும் நற்பயன் விளையும் என்பதை,

 ஐயமிடு கந்த னநுபூதி பாடுநிதம்
உய்யவழி யுண்டா முனக்கு (9)
செவிக்கழகு கந்தன் திருப்புகழைக் கேட்டல்
கவிக்கழ கன்னான்பு கழ் (32)
திண்மைதருங் கந்தன் திருப்புகழை யோதியதன்
உண்மையுணர் கொள்வா யுயர்வு (42)
நொந்த மனமகிழ நோயுன்னை விட்டொழியக்
கந்தனுக்குப் பாமாலை கட்டு (60)

எனக் குறிப்பிட்டுள்ளார். முருகப்பெருமானை வழிபட்டால் துன்பம் தீரும், வினை அகலும், சோர்வு  போகும், உடல் நிலைக்கும் என்பதை, பண்டாரக் கோலன் பழனிமலை வேலனடி
கண்டாலே தீருங் கலி (62)
மெய்தொட்டு வந்த வினைவிட்டுப் போகநினை
பொய்விட்டுக் கந்தனடிப் போது (80)
மோகமயல் போக்கு முருகனருள் பெற்றவன்றே
யோகநிலை காட்டு முடம்பு (84)

என்கின்ற குறள்கள் மூலம் எடுத்துரைக்கிறார். குமரன் திருக்குறளை இயற்றியதற்கான காரணத்தை வரகவி  அ.சுப்ரமண்ய பாரதி, ""சென்ற வருஷம் அடியேனுக்கு, வாய்திறந்து பேசமுடியாதபடி ஒரு கொடிய நோய் ஏற்பட்டிருந்தது. அச்சமயம் நான் சித்தூர் போயிருந்தேன். அவ்வூரில் குன்றுகளதிகம். அக்குன்றுகளில் ஒன்றிற் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை நாடோறும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டு அவ்வமயம் இந்த நூறு குறளையும் பாடித் துதித்தேன். அந்தக் கொடிய நோய் பருதிமுன் பனிபோல் விலகப் பரம கருணாநிதியாகிய முருகன் திருவருள் புரிந்தான்'' என்று  முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். 

இந்நூலுக்குச் சித்தூர் மஹிலா வித்யாவரம் பூ.ஸ்ரீனிவாஸலு நாயுடு, புழல் திருநாவுக்கரசு முதலியார், ச.சச்சிதானந்தம் பிள்ளை, தி.ரங்காசாரியார் ஆகியோர் சாற்றுக்கவிகள் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT