இளங்கோவடிகளின் துறவாத தமிழுக்கு, இறவாத சிலப்பதிகாரம் இன்றைக்கும் சான்றாகி மிளிர்கிறது. முத்தமிழ்க் காப்பியமாம் சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகளின் நுண்மாண் நுழைபுலச் சிறப்பைச் சிறிது காண்போம்.
முதலாவதாக கோவலன், கண்ணகியை அழைத்துக்கொண்டு சிலம்பை விற்பதற்காக மதுரைக்குப் புறப்படுகின்ற பொழுது, "மதுரை எவ்வளவு தூரம் இருக்கும்?' என்று கண்ணகி கேட்கிறாள். கோவலன் அதன் தூரத்தைக் கூறியதை இளங்கோவடிகள்,
"மதுரை மூதூர் யாதென வினவ,
ஆறைங்காதம்... அகனாட்டும்பர்' (நாடுகாண்-41-42)
எனக் கூறுகின்றார். இதில் ஆறு, ஐந்து காதம் எனப் பொருள்படும். உள்ளபடியே புகாரிலிருந்து மதுரை நகரம் 300 மைல் தூரம் இருக்கும். ஒரு காதம் 30 மைல். ஆறைந்து 30 காதம் என்று கூறியிருப்பது அதன் தொலைவை உள்ளவாறே கூறிவிட்டதாகும். 300 மைல் என்று கூறினால், கண்ணகி பயந்துவிடுவாள் எனக் கருதி ஆறைங்காதம் என்று தேற்றியதாகவும் கருத இடந்தருகிறது. இது அடிகளின் நுண்ணறிவையும், புலமை நயத்தையும் நன்கு எடுத்துக் காட்டுகிறது.
கோழியூர் புகுந்தனர்: புகார்க் காண்டம், நாடுகாண் காதையில் ,
"முறஞ்செவி வாரணம் முன்சம முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர்' (247, 248)
கோவலனும் கண்ணகியும் உறையூர் நகரில் புகுந்த காட்சி இது. "ஊரெனப்படுவது உறையூர்' என்பர். இவ்வுறையூரின் சிறப்பையும் வரலாற்றையும் அடிகள் நுண்ணிதின் வருணிக்கின்றார். தன் குஞ்சுக்குக் கேடு நேர்ந்துவிடுமோ என்றஞ்சி, கோழி பறந்து சென்று யானையைக் கொத்தியது என்பது உறையூரின் வரலாறு. இதனால், உறையூருக்குக் "கோழியூர்' என்றும், "கோழிநகர்' என்றும் பெயர்கள் உள்ளன.
இவ்வரலாறு கோழியின் வீரத்தை மட்டுமல்ல, சோழ நாட்டு மண்ணின் வீரத்தையும் பறைசாற்றுகிறது. இந்த மண்ணில் பிறந்தவர்கள், எதிரி தன்னிலும் வலிமையுள்ளவன் என்று அறிந்தாலும், வெற்றியா? தோல்வியா ? என்று நினையாமல் தங்களின், தங்கள் மண்ணின் உரிமையைப் பாதுகாக்க உயிரையும் பொருட்படுத்தாமல் போராடுவார்கள் என்ற செய்தியையும் இது வெளிப்படுத்துகிறது.
கோவாததும் கோத்ததும்: மதுரைக் காண்டத்தில்,
ஆய்ச்சியர் குரவையில் உள்வரி வாழ்த்தாக,
"கோவா மலை யாரம், கோத்த கடலாரம்,
தேவர்கோன் பூணாரம், தென்னர்கோன் மார்பினவே' (26, 27)
என்ற வரிகள் காணக்கிடைக்கின்றன. மலை ஆரம் என்பது மலையில் விளைந்த பொருள்களையும்; கடல் ஆரம் என்பது கடலில் விளைந்த பொருள்களையும் குறிக்கும். மலைவிளை பொருள்களான மான், மயில், தேன், தினை, வள்ளிக்கிழங்கு, மா, பலா முதலிய பல; இவை அனைத்தையும் பெயர் சூட்டாமல் மலை ஆரம் என்பது தன்னுள் அடக்கியிருக்கிறது. அதுபோலவே, கடல்விளை பொருள்களான முத்து, சிப்பி, பாசி, சங்கு முதலியவற்றையும் பெயர் சூட்டாமல் கடல் ஆரம் தன்னுள் அடக்கியிருக்கிறது.
இவை இரண்டுக்கும் அடைமொழிகளாக "கோவா' என்ற சொல்லும், "கோத்த' என்ற சொல்லும் பெற்றிருக்கின்றன. மலை ஆரம் அனைத்தும் கோக்க முடியாதவை எனவும், கடல் ஆரம் அனைத்தும் கோக்கக்கூடியவை எனவும் பொருள்படும் வண்ணம் இளங்கோவடிகள் ஆய்ந்து கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார். "கோவா மலை ஆரம் கோத்த கடல் ஆரம்' என்ற சொற்களால் கூறியிருப்பது அவரது நுண்ணிய புலமையைக் காட்டி நம்மை மகிழ்விக்கிறது.
-மா. உலகநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.