தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன்

தமிழக வரலாற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் செப்பேடுகளாகவும், கல்வெட்டுகளாகவும், சிற்ப ஓவியங்களாகவும், புதைபொருளாகவும்,  சுவடிகளாகவும் பல்கிப் பரந்து கிடக்கின்றன.

தினமணி

"சிலம்பொலி' செல்லப்பனார் மறைந்து ஓராண்டு கடந்துவிட்டது. இப்போதும் ஏதாவது இலக்கிய நிகழ்வுக்குப் போனால் முதல் வரிசையில் அவர் அமர்ந்திருப்பது போன்ற பிரமை தோன்றாமல் இல்லை. அவர் வழங்கிய கடைசி  அணிந்துரை, "இந்த வாரம்' தொகுப்புக்கு வழங்கப்பட்டதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். என்னைப் பார்க்கும் போதெல்லாம், "இந்த வாரம்' எப்போது தொகுப்பாக வெளிவரும் என்று அவர் கேட்காமல் இருக்கமாட்டார்.

உலகில் எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். பெயரும், புகழுமாக வாழ்ந்து மறைகிறார்கள். அவர்களது காலத்துக்குப் பிறகு குடும்ப உறவுகளேகூட அவர்களை நினைப்பார்களா என்பது சந்தேகம்தான். மறைந்த பிறகு, குடும்ப உறவுகளைக் கடந்து மற்றவர்களாலும் ஒருவர் நினைவுகூரப்படுகிறார் என்றால், அவர்கள் மட்டும்தான் வள்ளுவர் மொழியில் சொல்வதாக இருந்தால் "தக்கார்'. சிலம்பொலியாரும் அந்தப் பட்டியலில் சேர்கிறார். அகவை 90 கடந்த நிறை வாழ்க்கை  வாழ்ந்து, மறைந்து, இப்போதும் நம் நினைவில் உலவுகிறார்!

                                                                     *****

கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், வரலாற்றுப் பேராசிரியருமான தன் தந்தை சி.கோவிந்தராசனார் குறித்து முனைவர் சி.கோ.தெய்வநாயகம் எழுதியிருக்கும் புத்தகம் கல்வெட்டாய்வுப் பேரறிஞரின் பெரும் தமிழ்ப் பணிகளின் சாதனைகளைப் பதிவு செய்திருக்கிறது.  

கரந்தைத் தமிழ்ச்சங்கக் கல்லூரியில் தொடங்கிய பெரியவர் சி.கோ.வின் தமிழ்த்தேடல், நமக்கு எத்தனை எத்தனையோ வரலாற்றுச் சான்றுகள் கிடைக்க வழிகோலி இருக்கிறது. தமிழகக் கல்வெட்டுகளைப் படித்துப் படியெடுப்பதற்கும், பொருள்  உணர்வதற்கும் தனிப்பயிற்சி வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெரியவர் சி.கோ. ஆய்வுப் பணியை மேற்கொண்டிருந்தபோது, அதற்கு உதவும் வகையில் உருவாக்கியதுதான் "கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி'.

கல்வெட்டு ஆராய்ச்சி மட்டுமல்லாமல் சிற்பக்கலை, கட்டடக்கலை, நாட்டியக்கலை, நாடகக்கலை, ஜோதிடக்கலை எல்லாவற்றுக்கும் மேலாக சித்த மருத்துவக் கலையிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது, வியப்பு மேலிடுகிறது! அதைவிட,  அவரது "குடந்தை இளைஞர் நாடக சபா'வின் நாடகமொன்றில் எம்.ஜி.ஆர். நடித்திருக்கிறார் என்கிற செய்தி, இந்தப் புத்தகத்தைப் படித்தபோதுதான் தெரியவந்தது.

தமிழக வரலாற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் செப்பேடுகளாகவும், கல்வெட்டுகளாகவும், சிற்ப ஓவியங்களாகவும், புதைபொருளாகவும்,  சுவடிகளாகவும் பல்கிப் பரந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து தமிழக வரலாற்றை முறைப்படுத்த உதவின பெரியவர் சி.கோ.வின் ஆய்வுகள். 

கடையேழு வள்ளல்கள் வெறும் கற்பனை மாந்தரல்லர், வரலாற்று நாயகர்கள் என்று உறுதிப்படுத்தியவர் அவர்தான். பாரி வாழ்ந்த பறம்பு மலையையும், கொல்லிமலைப் பகுதியை ஆண்ட வல்வில் ஓரியின் சிற்பத்தையும் அடையாளம் காட்டியவர் அவர்தான்.

சேர, சோழ, பாண்டியர்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் நாயகி கண்ணகியின் வாழ்க்கை வரலாற்றுச் சான்றுகளைத் தேடித்தந்தவர் பேராசிரியர் சி.கோ.மங்களாதேவி கோயில் என்று அறியப்படும் கண்ணகி கோட்டத்தைத் தேடிக் கண்டுபிடித்து அடையாளம் காட்டியதுதான் 96 வயது நிறை வாழ்வு வாழ்ந்த பெரியவரின் மிகப்பெரிய தமிழ்த் தொண்டு. 

நான் பகிர்ந்து கொண்டிருப்பது ஒரு சில குறிப்புகள்தான். முனைவர் சி.கோ.தெய்வநாயகம்  எழுதி, தொகுத்து வெளியிட்டிருக்கும் "சி.கோவிந்தராசனார் 96' என்கிற புத்தகம் அந்த மாமனிதரின் அரும் பெரும் சாதனைகள் அனைத்தையும் எடுத்தியம்புகிறது. 

96 வயது நிறைவாழ்வு வாழ்ந்த பெரியவர் சி.கோவிந்தராசனார், சித்தர் வழியில் தாமே தமது மூச்சுக்கலைத் திறத்தால் அடங்கி நிறைவுற்றார் என்பதை அறியும்போது மெய் சிலிர்க்கிறது. முனைவர் சி.கோ.தெய்வநாயகத்தை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற எனது ஆவல், இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு மேலும் அதிகரித்திருக்கிறது.

*****

திருவள்ளுவர், கம்பர், மகாகவி பாரதியார் குறித்த எந்தவொரு தகவலோ, புத்தகமோ தனக்குக் கிடைத்தால் அதை உடனே எனக்கு அனுப்பித் தந்துவிடுவதை நண்பர் முல்லைப் பதிப்பகம் பழநி வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
சமீபத்தில் அவர் எனக்கு அனுப்பித் தந்திருக்கும் புத்தகம் அவருடைய தந்தை "பதிப்புச் செம்மல்' முல்லை முத்தையா தொகுத்த "பாரதியார் பெருமை' என்கிற புத்தகம். 1956}இல் தொகுத்து வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் மறுபதிப்பு கண்டிருக்கிறது. பாரதியார் குறித்துக் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் கூறியிருக்கும் கருத்துகளும், கட்டுரைகளும், கவிதைகளும் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
மகாகவி பாரதியாரால் "தம்பி' என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பர் வழங்கியிருக்கும் அணிந்துரையைவிட, இந்தத் தொகுப்பு குறித்து சிறப்பாக எடுத்தியம்பிவிட முடியாது. ""இந்தக் கதம்பம் தற்கால நாகரிக மாதர்கள் பெரிதும் விரும்பும் கனகாம்பரம், நீலாம்பரம், டிசம்பர் பூப்போன்ற பன்னிற மலர்கள் அடங்கிய மணமற்ற கதம்பம் அல்ல. முல்லை முத்தையா தொகுத்துள்ள இந்தக் கதம்பத்தில் மல்லிகை, முல்லை, ரோஜா மலர்களின் மணம் வீசுகிறது'' என்பது பரலியாரின் பார்வை.
பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, அவரது வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, திரு.வி.க.வில் தொடங்கி 40 பிரபலங்களின் பாரதியார் குறித்த பதிவுகள் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. "பாரதி, யார்?' என்று தெரிந்து கொள்வதற்கு இதைவிடச் சுருக்கமான, சிறப்பான தொகுப்பு இருந்துவிட முடியாது.
"பாரதி - காலமும் கருத்தும்' அறிஞர்களுக்கு என்றால், "பாரதியார் பெருமை' பாமரனுக்கு மகாகவி பாரதியைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

                                                                      *****

தீநுண்மி (கரோனா) நோய்த் தொற்று வந்தாலும் வந்தது நமது கவிஞர்களின் கற்பனை காட்டாற்று வெள்ளமாகப் பிரவாகிக்கத் தொடங்கிவிட்டது. அதிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, தீநுண்மி நோய்த் தொற்று பரவும் வேகத்தைவிட, அதிவேகமாகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு அதிகமாகவும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீநுண்மி நோய்த் தொற்று சார்ந்த கவிதைகள் வீறுகொண்டு எழுகின்றன. ரசிக்க வைத்த இந்தவாரப் பதிவு  பாரதி பத்மாவதியின் கவிதை! 
புத்தம் புதியதாய்
ஓர் உலகம்
செதுக்கிக் கொண்டிருக்கிறார்
கடவுள்
கொரோனா என்கிற
உளியால்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT