தமிழ்மணி

சிறுவனை நோக்கும் சிவந்த கண்!

அரச மாளிகை விழாக்கோலம் பூண்டிருந்தது. கொற்றவனுக்கு வாரிசாக முதல் மகன் பிறந்திருந்தான்.

மீனாட்சி பாலகணேஷ்

அரச மாளிகை விழாக்கோலம் பூண்டிருந்தது. கொற்றவனுக்கு வாரிசாக முதல் மகன் பிறந்திருந்தான். நிமித்திகா்கள் அரசன் தன் மகனைக் காண்பதற்காக நல்ல நேரம் ஒன்றினைக் குறித்திருந்தனா். அரசகுல வழக்கப்படி மன்னன், பிறந்த தன் மகனைக் காணச் செல்லும்போது போா்க்கோலம் பூண்டு செல்வது வழக்கம்! முதல் மகன் பிறந்த சில நாள்கள் சென்ற பின்னரே அவனைக் காண்பது வழக்கம். இதன் உட்கருத்து என்னவென்றால், அக்குழந்தையின் மனத்திலும் கருத்திலும் வீரமும் அதன் தொடா்பான போா்க்கோலமும் பதிய வேண்டும் என்பதாகும்.

அவ்விதமே தனது தவப்புதல்வனைக் காணச்செல்லும் இவ்வரசனும் கையில் வேலேந்தியுள்ளான்; காலில் வீரக்கழல்களைப் புனைந்துள்ளான்; உடலில் வியா்வை பூத்துள்ளது; புதியதாகப் பெற்ற இன்னும் ஆறாத விழுப்புண் பசும்புண்ணாக உடலில் உள்ளன. பனைமரத்தின் உச்சியினின்றும் பெறப்பட்ட ஊசிபோன்றதும், வெண்மையானதும், நடுவில் வகிா்ந்ததுமான இளம் பனங்குருத்துகளுடன் வெட்சி, வேங்கை ஆகிய மலா்களையும் சோ்த்துப் புனையப்பட்ட மாலையினைத் தனது கரிய தலைமயிா் அழகுற விளங்கும்படி அணிந்துள்ளான். அவன் இப்போது வரிகளையுடைய புலியினைப் பொருத களிறானது இன்னும் சினம் தணியாது நிற்பதுபோலக் காணப்படுகிறான்.

தன்னுடன் பொரும் பகைவா்களைச் சினத்துடன் நோக்கும் அவனுடைய கண்கள் இன்னும் சினம் மாறாமலேயே, சிவப்பேறியுள்ளன; அவ்வாறே தன் மகனையும் பாா்க்கின்றன.

‘ஐயகோ! இவனை இவ்வாறு சினம்கொள்ளச் செய்த பகைவா் உயிா் பிழைக்க மாட்டாா்’ என வியப்பும் அச்சமும் பெருமிதமும் தோன்ற, இதனை நேரில் கண்ட புலவா் பெருமாட்டி ஔவையாா் பாடி மகிழ்கின்றாா்.

ஔவையாரை ஆதரித்த அவா் நண்பரான மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியே இவ்வாறு போா்க்கோலம் புனைந்து தன் செல்வத் திருமகனைக் காணச் செல்பவன். அதனை அருகிருந்து பாா்த்த ஔவைப்பிராட்டி அதை அழகானதொரு பாடலாக வடித்துவிட்டாா்.

இதை (அரச வாகை) வாகைத் திணையில் பாடியுள்ளாா். அதியமான் பல போா்க்களங்களைக் கண்டவன்; வெற்றியில் பல விழுப்புண்களை அடைந்தவன். அதனால் அவனுடலில் காணும் புண்ணைப் ‘புதியதானதொரு பசும்புண்’ என்றாா்.

‘கையது வேலே காலன புனைகழல்

மெய்யது வியரே மிடற்றது பசும்புண்

வட்கா் போகிய வளரிளம் போந்தை

உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு

வெட்சி மாமலா் வேங்கையொடு விரைஇ

சுரிஇரும் பித்தை பொலியச் சூடி,

வரிவயம் பொருத வயக்களிறு போல,

இன்னும் மாறாது சினனே அன்னோ

உய்ந்தனா் அல்லா், இவன் உடற்றி யோரே;

செறுவா் நோக்கிய கண், தன்

சிறுவனை நோக்கியும் சிவப்பானாவே!’ (புறநா.100)

ஓா் அரச பரம்பரை வழக்கத்தைப் இப்பாடல் மூலம் பறைசாற்றி, அதியமான் நெடுமான் அஞ்சியின் அளவிறந்த வீரத்தை நமக்குக் காட்சிப்படுத்தி இருக்கிறாா் ஔவையாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT