தமிழ்மணி

வீரசங்காதப் பெரும்பள்ளி

முனைவர் இரா.மணிமேகலை


கோயம்புத்தூர் விசய மங்கலத்தில் (ஈரோடு பெருந்துறை சாலை) உள்ள "வீரசங்காதப் பெரும்பள்ளி' என்று கல்வெட்டில் அழைக்கப்படும் சந்திரப்பிரப தீர்த்தங்கரர் ஆலயத்தின் முன் மண்டபத்தில் ஒரு தூண் காணப்படுகிறது. அதன் கீழ்ப்புறமாகக் கிரந்தத்திலும் தமிழிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது.
அதில், சாமுண்ட ராஜனின் தங்கை புல்லப்பை என்ற பெயருடைய சமணப் பெண்மணி "நிசீதிகை' செய்து கொண்டதாகக் கூறுகிறது. "சாமுண்டராஜன் கங்க அரசர்கள் இரண்டாம் மாறவர்மன், இரண்டாம் ராஜமல்லன் காலத்தில் அமைச்சராக இருந்தவன் என்றும், கி.பி. 10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்கலாம்' என்றும் கோவைகிழார் குறிப்பிடுகிறார்.
ஆறடிக்கு மேல் தூணின் மேற்பகுதியில் தீர்த்தங்கரர் திருவுருவமும் அதன் கீழ் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த சமணப் பெருமாட்டி புல்லப்பை என்பவரின் குவிந்த கரங்களுடன் தவ நிலையில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் திருவுருவமும் காணப்படுகின்றன. "நிசீதிகை' என்றால், சமண நெறியில் உண்ணா நோன்பால் உயிர்விடும் நெறி என்பதாகும். இதனை "நிஷிதா' என்றும் அழைப்பர்.
தமிழகத்தில் கொள்கைக்காகவும் மானத்துக்காகவும் நாணப்பட்டு அரசர்களும் புலவர்களும் வடக்கிருத்தல் என்னும் கோட்பாட்டைக் கடைப்பிடித்து உயிர் துறந்தனர். சமண நெறியைக் கடைப்பிடிக்கும் துறவியரும் உண்ணா நோன்பிருந்து துறப்பர். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. சமணத் துறவியர் உயிர் துறந்த இடத்தில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் "நிசீதிகை' எனப்படும்.
உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல் அனசனம் ஆகும். (அன் +அசனம்) அசனம் என்றால் உண்ணுதல். அன் என்ற முன்னொட்டு எதிர்ப் பொருளைத் தரும். அதாவது உண்ணாநிலை. இதனை "அனசனத்தவம்' என்பர். சல்லேகனை - இதுவும் உயிர் துறக்க சமண நெறியில் கடைப்பிடிக்கப்படும் ஒரு வகை நோன்பாகும். இது ஓர் அகிம்சை நடவடிக்கை.
ஸ்லேகனை - மெலிந்து போதல் என்று பொருள். சாந்தாரா, சாமரமரணம், சன்யாசன மரணம் என்பதும் இதுவே. சல்லேகனை நோன்பு ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. உயிர் துறக்கும் நோன்பைக் கடைப்பிடிப்பதற்கான காரணிகளை "அருங்கலச் செப்பு' என்னும் சமண நூல் அறிவிக்கின்றது.  பொறுத்துக் கொள்ள இயலாமல் பிறரால் ஏற்படும் இடையூறு;  தீராமல் தொடர்ந்து துன்பம் தரும் நோய்;  தாங்க இயலாத முதுமை - என்று பட்டியலிடுகின்றது.
பெரும் பஞ்சம் வந்து துயருரும் போதும் உயிர் துறக்கலாம் என்று "இரத்னகரண்டக சிராவகாசாரம்' தெரிவிக்கின்றது. வீடுபேற்றில் விருப்பம் கொண்டும் நோன்பைக் கடைப்பிடிப்பர். ஆழி, பள்ளி, அதிட்டானம் ஆகியவை சமணர்கள் வாழும் இடமாகக் குறிப்பிட்டாலும் உயிர்நீத்த இடத்தையே நிசீதிகை என்பர்.
பெüத்த காப்பியமான குண்டலகேசி, "இந்நோன்பு ஒரு தற்கொலை முடிவு' என்று சாடுகிறது. சமணக் காப்பியம் நீலகேசி, "இது தற்கொலை முடிவு அன்று; உடல் சிறையிலிருந்து உயிரை விடுவிக்கும் முயற்சி; அறவழியில் உயிர் துறக்கும் முறை' என்கிறது.
பத்திரபாகு முனிவர், கவுந்தியடிகள் முதலான சமணத் துறவிகள் சல்லேகனை முறையில் உயிர்துறந்தவர்கள். திருநாதர்குன்று எனும் இடத்தில் 57 சமணர்கள் தம் ஆசிரியருடன் உயிர்
துறந்த "சந்திர சந்தி ஆசிரியர் நிசீதிகை' என்ற கல்வெட்டுச் செய்தி உண்ணா நோன்பால் உயிர் விட்டோர் பற்றிய தகவலைத் தருகிறது. 
தமிழரின் வடக்கிருத்தல் என்பது தனக்கு இழுக்கு நேர்ந்தவிடத்து, பெருமிதக் குறைபாடாகவோ, களங்கமாகவோ, மானமிழத்தலாகவோ கருதி அதனைத் தாங்கிக் கொள்ள இயலாமல் வடக்கிருந்து உண்ணா நோன்பில் உயிர்விடலாகும். தமிழர்களின் வடக்கிருத்தலுக்கும் சமணர்களின் சல்லேகனைக்கும் இருக்கும் ஒற்றுமைகளாகத் துயர் பொறுக்கும் துணிவும், யாக்கைப் பற்றின்மையும் அடிப்படைப் பண்புகளாகக் கூறலாம். 
கலைக் களஞ்சியம் வடக்கிருத்தலை "உத்ரகமனம்' என்றும், "மகாப் பிரத்தானம்' என்றும் கூறுகிறது. வடக்கிருந்து உயிர் துறந்தோருக்கு நடுகல் இட்டு நினைவுச் சின்னமாக வழிபடுவதும் உண்டு.
வடக்கு திசை நோக்கி அமர்ந்து தம்முன்பு உடைவாள் ஒன்றை நட்டுவிடுவர். வாளின் கூர்முனை கழுத்தை நோக்கி இருக்குமாறு நிறுத்துவர். அன்னம், தண்ணீர் இல்லாமல் பல நாள்கள் அமர்ந்திருப்பர். பசியினாலும், நீர்வேட்கையினாலும் உடல் தளர்வுற்றுச் சாயும்போது, வாள் கழுத்தில் பாய்ந்து வீரமரணம் அடைவர்.
கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், பெருஞ்சேரலாதன், கபிலர், சேரமான் கணைக்கால் இரும்பொறை ஆகியோர் வடக்கிருந்து உயிர் துறந்தமையைச் சங்க நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது. 
வடக்கிருத்தல் ஆயினும், சல்லேகனை ஆயினும் உயர்ந்த கொள்கைக்காகத் தமிழ்ச் சான்றோர் கடைப்பிடித்த அறநெறி  இது என்பதை அறிய முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT