இந்த வாரம் கலாரசிகன் - (5-12-21)
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளன்று எட்டயபுரத்தில் இருக்கக் கொடுத்து வைக்கவில்லை.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளன்று எட்டயபுரத்தில் இருக்கக் கொடுத்து வைக்கவில்லை. பல ஆண்டுகளாக, பாரதியின் பிறந்த தினமான டிசம்பர் 11-ஆம் தேதி எட்டயபுரத்தில் அவரது வீட்டுக்குச் செல்வது, ஊர்வலமாக பாரதி மணிமண்டபம் சென்று, அஞ்சலி செலுத்துவது என்று வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். அதனால், இந்த இடைவெளி ஏற்படுத்தும் ரணம் கொஞ்ச நஞ்சமல்ல.
அதுமட்டுமல்ல. "தினமணி' சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் "மகாகவி பாரதியார்' விருதும் இரண்டு ஆண்டுகளாகத் தடைப்பட்டிருக்கிறது என்பது துரதிருஷ்டமானது. கொள்ளை நோய்த் தொற்றால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு எது என்று என்னைக் கேட்டால், இரண்டு ஆண்டுகள் எட்டயபுரம் செல்ல முடியாததும், "தினமணி' மகாகவி பாரதியார் விருதை, பாரதி ஆய்வாளர் ஒருவருக்கு வழங்க முடியாததும்தான் என்பேன்.
சென்ற ஆண்டு சரி, இந்த ஆண்டு ஏன் நடக்கவில்லை, எட்டயபுரம் செல்லவில்லை என்று கேட்காதீர்கள். அது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது. "ஒமைக்ரான்' தொற்று என்று என்னை நானே தேற்றிக் கொள்கிறேன். ஏதாவது நொண்டிச் சாக்கு சொல்லியாவது நம்மை நாமே தேற்றிக் கொண்டாக வேண்டும். என்னைத் தெரிந்தவர்களுக்கும், என்னைப் புரிந்தவர்களுக்கும் எனது தர்மசங்கடம் புரியும்!
காட்டுமன்னார்குடியில், என்னுடைய நீண்ட நாள் நண்பர் பி.வி.சுப்பிரமணியத்தின் மகள் சுபத்திரை ஜெயங்கொண்டம் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் ரவீந்தர்ராஜ் திருமணம். எனக்கும் பி.வி. சுப்பிரமணியத்துக்கும் ஏறத்தாழ 40 ஆண்டுகளாகத் தொடர்பு. தொடர்பு என்பதைவிட, நாங்கள் குடும்ப நண்பர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
அந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நான் சிதம்பரம் சென்றபோது, எங்கள் நிருபர் சுந்தர்ராஜன், வழக்கம்போல என்னைச் சில புத்தகங்களுடன் சந்தித்தார். என்னிடம் சேர்க்கச் சொல்லி அவருடைய நண்பர்கள், குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அவரிடம் புத்தகங்களைத் தருவது வழக்கம்.அவர் என்னிடம் தந்த புத்தகங்களில் ஒன்று "தமிழும் உலகமும்'.
இலங்கைத் தமிழரான சிவஞானம் என்பவர், சுந்தர்ராஜனிடம் தந்திருந்த அந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம். அதன் மறுபதிப்பு வந்திருக்காது என்று நினைக்கிறேன்.
வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஏ.டி.ஆர்) ஒருங்கிணைப்பாளராக 11-ஆவது உலகத் தமிழ் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இந்தப் புத்தகம் கிடைத்தது எனக்குப் புதிய பல வெளிச்சங்களைத் தந்தன.
1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை, ஜெர்மன் நாட்டின் தலைநகர் பெர்லினில், ஐரோப்பாவில் முதலாவது உலகளாவிய தமிழுறவு மாநாடு நான்கு நாள்கள் நடந்தது. அதன் ஆய்வுரைத் தொகுப்புதான் வெ.செ.குணரத்தினம், 1998-இல் வெளிக்கொணர்ந்த "தமிழும் உலகமும்' என்கிற புத்தகம். புதுச்சேரி வெங்கட்டா நகர் பகுதியில் இருந்த விஜயா பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் இது. அந்தப் பதிப்பகம் இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
"பெருங்கவிக்கோ' வா.மு. சேதுராமன்தான் அந்த மாநாட்டுக்கான அவசியத்தை முன்மொழிந்தவர். "முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்ட அந்த நான்கு நாள் மாநாட்டைப் பார்த்து ஜெர்மானியர்களே வியந்தனர்.
அந்த மாநாட்டை ஜெர்மன் வாழ் தமிழர்கள், ஊர்கூடித் தேர் இழுப்பதைப் போல, பிரம்மாண்டமாக நடத்தினார்கள என்றாலும், அதன் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் "தமிழும் உலகமும்' நூலைத் தொகுத்த வெ.செ.குணரத்தினம். யாழ்ப்பாணத்தை அடுத்த இருபாலை என்கிற சிற்றூரைச் சேர்ந்த குணரத்தினம் 1980-இல் புகலிடம் தேடி ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தவர்.
1998 மாநாட்டில் நடந்த நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் தொகுத்துப் புத்தகமாக்கி இருக்கிறார் வெ.செ.குணரத்தினம். தாய்த் தமிழகத்தில், தமிழ் மாநாடு நடத்துவதில் காணப்படும் அரசியலைப் பார்க்கும்போது, புலம் பெயர்ந்தால்தான் தமிழர்கள் ஒன்றுபடுவார்கள் என்று தோன்றுகிறது.
புலவர் தி.வே.விஜயலட்சுமி என்கிற பெயர் "தினமணி' வாசகர்களுக்கு நன்றாகவே அறிமுகமானது என்பது மட்டுமல்ல, அவரது கட்டுரைகள் வரவேற்புப் பெற்றவையும்கூட. "தினமணி' நாளிதழில் வெளிவந்த அவருடைய கட்டுரைகளின் தொகுப்பு "சமுதாயச் சிந்தனைகள்' என்கிற பெயரில் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.
நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள இயலாததில் எனக்கு வருத்தம் உண்டு. நான் கலந்து கொள்ளாததில் அவருக்கும்தான்.
புத்தகமும், கட்டுரைகளும் இருக்கட்டும். முதலில் புலவர் தி.வே.விஜயலட்சுமி பற்றி நான் குறிப்பிட வேண்டும். தி.வே.கோபாலைய்யர், முனைவர் தமிழண்ணல், பேராசிரியர் தி.இராசகோபாலன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.இராசேந்திரன் முதலிய பலரின் ஆசிரியரான வித்துவான் எச். வேங்கடராமனின் புதல்வி என்று சொன்ன பிறகு அவர் குறித்தும், அவரது தமிழ்ப் புலமை குறித்தும் மேலும் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கலாம்.
இருக்கிறது. தமிழையும், இசையையும் இணைந்து கற்றுத் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர்? அப்படியே இருந்தாலும், தாங்கள் கற்றதை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க முன்வருபவர்கள் எத்தனை பேர்? தமிழும், இசையும் தெரிந்திருந்து சமுதாயம் குறித்த சிந்தனையுடன் இயங்குபவர்கள் எத்தனை பேர்? மேலே சொன்ன அத்தனையும் சேர்ந்த புலவர் தி.வே.விஜயலட்சுமி, "தினமணி' நாளிதழில் நடுப்பக்கத்திலும், தமிழ்மணி பகுதியிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்று சொன்னால், அதற்கு மேலாக இந்தப் புத்தகம் குறித்துச் சொல்லவும் வேண்டுமா!
அதையெல்லாம் விடுங்கள். அணிந்துரை தந்திருப்பவர்கள், விவேகானந்தா கல்லூரி மேனாள் முதல்வர் வ.வே.சுப்பிரமணியனும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரான முனைவர் வாணி அறிவாளனும். தனித்தனியாகப் படித்ததைத் தொகுப்பாகப் படிக்கும்போது மலைப்பாகத்தான் இருக்கிறது...
கவிஞர் மகிவனியின் "கனத்தைத் திறக்கும் கருவி' கவிதைத் தொகுப்பில் இருந்து ஒரு கவிதை. மூன்று வரிகளில், ஐந்து வார்த்தைகளின் ஆழம் நமது இதயத்துக்கு இடம்பெயர்கிறது.
மழைக்காலச் சிற்றெறும்புகள்
உணர்த்துகின்றன
இடம்பெயர்தலின் வலியை!