முகப்பு
தமிழ்மணி

வைணவத் "தமிழ்' விருந்து!

வைணவத்தையும் தமிழையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கூறலாம்.

Updated On : 4 ஜூலை, 2021 at 4:28 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:03 AM

வைணவத்தையும் தமிழையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கூறலாம். அனைத்து வைணவத் திருக்கோயில்களிலும், ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களைப் பாடியவண்ணம் "நடை' திறப்பது வழக்கம். இரவில் நடை சாத்தப்படும் வரை, அவ்வப்போது ஆழ்வார்களில் தமிழ்ப் பாசுரங்கள் கருவறைகளில் ஒலிப்பதுண்டு.

வைணவப் பெருமக்கள் தம் இல்லங்களில்  குறிப்பாக, சமையல் அறையில் உண்ணும் உணவு வகைகளைக்கூட அழகு தமிழில் இயல்பாகச் சொல்லி மகிழ்வர். அவ்வாறு பேசுவதை "வைணவ பரிபாஷை' என்றும் சொல்வதுண்டு. 

உண்ணும் பதார்த்தங்களின் பெயர்களின் ஈற்றில் "அமுது' எனும் பின்னொட்டை இணைத்துப் பேசுவர். 

Advertisement

எடுத்துக்காட்டாக "கத்தரிக்காய் கறி' என்பதை,  "கத்தரிக்காய் கறியமுது' என்றே கூறுவர். பாயசத்தை "திருக்கண்ணமுது' என்பர்.  "ரசம்' என்பதை "சாறு' எனும் தமிழ்ச் சொல்லாக்கி, அதையே "சாற்றமுது' (சாத்தமுது) என்று சொல்வர். குழம்பு, சாம்பாரை  "நெகிழமுது' என்பர். 

வைணவர் ஒருவர் வீட்டில், வைணவர் ஒருவருக்கு விருந்து. வீட்டுச் சொந்தக்காரர் விருந்து முடிந்த பின்பு, விருந்தாளியிடம், "தளிகை (சமையல்) எப்படி இருந்தது?' என்று அன்புடன் விசாரித்தார். விருந்துண்ட விருந்தாளியோ, வைணவ திவ்ய தேசங்களை இணைத்து வைணவ பரிபாஷையில் விருந்தின் பெருமையை எடுத்துரைக்கிறார்.

கண்ணமுது கோயில் கறியமுது விண்ணகர்
அன்னமுது வில்லிபுத்தூர் ஆனதே!
எண்ணும் சாற்றமுது மல்லை குழம்பமுது குருகூர்
பருப்பதனில் திருமலையே பார்!

என்றார். "ஆஹா... திவ்ய தேசங்களுக்கு ஒப்பாக நம் தளிகை இருந்திருக்கிறதே' என்று மகிழ்ச்சி அடைந்தார் விருந்து படைத்தவர். ஆனால், இப்பாடலின் உட்கருத்தோ வேறு!

இப்பாடலில் திவ்ய தேசங்களையும் அவற்றின் சிறப்புகளையும் ஒருசேர இணைத்திருப்பதுதான் சிறப்பு. அவர் உண்ட உணவில், பாயசம் அடிபிடித்துக் கருகிப்போன வாசனை; காற்கறிகளில் உப்பே இல்லை; சாதம் மிகவும் குழைந்து இருந்தது; 

ரசத்தில்  அதிக உப்பு; குழம்பில் (சாம்பார்) புளிப்பு மிகுதி;
பருப்பில் கற்கள் ஏராளம்.

திருவரங்கம் ஸ்ரீரங்கநாதருக்கு அன்றாடம் புதுச் சட்டியில்தான் (மண் பானை) நைவேத்யம் படைக்கப்படும். சில சமயங்களில் பிரசாதம் அடிபிடித்துவிடுவதுண்டு. அப்படி இருந்ததாம் பாயசம்.

திருவிண்ணகரம் என்பது கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோயில். அக்கோயில் எம்பெருமானுக்கு உப்பில்லா பிரசாதம்தான் நைவேத்யம். இலையில் பரிமாறப்பட்ட காய்கறிகளில் துளிக்கூட உப்பு இல்லையாம். அதனால் கறியமுது விண்ணகர் என்கிறார்.

"அன்னம் (பறவை) குழைந்து விளையாடும் வில்லிபுத்தூர்' என்பது ஆன்றோர் வாக்கு. சாதம் (அன்னம்) அளவுக்கு அதிகமாகக் குழைந்துவிட்டது என்பதற்கு வில்லிபுத்தூரைச் சொல்கிறார்.

மல்லை என்ற திவ்ய தேசம் கடற்கரைப் பகுதியில் உள்ள கடல்மல்லை என்ற மாமல்லபுரம். ரசத்தில் மிகுதியான உப்பு கலந்துவிட்டது என்பதற்கு, உப்புக் கடலின் அருகே உள்ள திவ்ய தேசமான "மல்லை'யைச் சேர்த்துக் கொள்கிறார்.

குருகூர் எனும் திவ்ய தேசத்தில்தான் நம்மாழ்வார், புளியமரத்தின் பொந்தில் பல ஆண்டுகள் நிட்டையில் இருந்தாராம். குழம்பில் புளிப்பு மிகுதியாக இருந்ததை நயமாகச் சொல்ல வந்தவர், குருகூரைச் சுட்டிக் காட்டுகிறார்.

திருமலை என்பது திருப்பதி. திருமலை என்றால் கல்தானே! பருப்பில் கற்கள் மிகுதியாக இருந்தன என்பதற்கு, "பருத்தனில் திருமலையே பார்' என்று சாதுர்யமாக, தான் உண்ட விருந்தின்  தன்மையை (?) எடுத்துரைத்தார். இதுவன்றோ வைணவத் தமிழ் விருந்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.