மண்புழு, மீன்கள், ஊர்வன, பறவைகள் உள்ளிட்ட ஒருசில விலங்குகளில் அரைவைப்பை (gizzard) என்னும் ஒரு வகையான உறுப்பு காணப்படுகிறது. இது செரிமான மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதியில் உணவு அரைக்கப்படுவதால், செரிமானம் எளிதில் நடைபெறுகிறது. இப்பணியைச் செய்யும் பொருட்டு, இப்பகுதியின் செல் சுவரானது தசைகளுடன் தடித்துக் காணப்படும். இப்பகுதியில் உணவு அரைக்கப்படுவதால், அரைவைப்பை என அழைக்கப்படுகிறது.
பற்கள் இல்லா விலங்குகள் உணவுடன் சிறுசிறு கூழாங்கற்களை உண்ணும். அக்கற்கள் இப்பகுதியில் தங்கி உணவினை அரைக்கும் பணியில் உதவுகின்றன. அரைவைப் பணிக்கு பின் உமிழ்வதன் மூலமோ அல்லது கழிவுடனோ இக்கற்கள் வெளியேற்றப்படும். அரைவைப்பை கொண்ட விலங்குகளில் பறவையினத்தைச் சேர்ந்த புறாக்களும் அடங்கும்.
புறாக்கள் உணவுடன் கற்களை உண்ணும் செய்தி, சங்கப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. கடியலூர் உருத்திரங்கண்ணனார் தாம் பாடிய பட்டினப்பாலையில் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.
"காவிரிப்பூம்பட்டினத்தில் சமணர்களும் பௌத்தர்களும் தவம் செய்யும் பள்ளிகள் பல இருந்தன. தாழ்ந்த மலர்கள் அடர்ந்த சோலைகளில் விரிந்த சடைமுடியை உடைய முனிவர்கள் செய்த வேள்வியிலிருந்து தோன்றிய நறும்புகையை வெறுத்த ஆண் குயில், அங்கிருந்து தன் அழகிய பெண் குயிலுடன் கிளம்பி, யாரும் எளிதில் புகமுடியா பூதம் காவல் காக்கும் பாதுகாவலையுடைய நகரத்திற்குச் சென்று, அங்கே கற்களை உணவாக உண்டு வாழும் புறாக்களுடன் ஒதுக்கிடத்தில் தங்கின' என அவர் புகார் நகரை வருணிக்கின்றார். இச்செய்தி கீழ்வரும் பாடல் அடிகளில் கூறப்பட்டுள்ளது. ஆக, புறாக்கள் கல் உண்ணும் என்ற உண்மை பெறப்படுகிறது.
தவப்பள்ளித் தாழ் காவின்
அவிர் சடைமுனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை முனைஇ குயில் தம்
மாயிரும் பெடையோடு இரியல் போகிப்
பூதம் காக்கும் புகல் அரும் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும்!
(பா. 53-58)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.