முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன்  - (17-10-2021)

மேனாள் குடியரசுத் தலைவரான ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் தமிழர் என்பதும், வெளிநாட்டுக்குப் போய் மேற்படிப்புப் படிக்காமல் தமிழகத்திலேயே படித்துத் தேர்ச்சிப் பெற்று, தலைசிறந்த  விண்வெளி விஞ்ஞானியானவர் என்பதும் 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:


மேனாள் குடியரசுத் தலைவரான ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் தமிழர் என்பதும், வெளிநாட்டுக்குப் போய் மேற்படிப்புப் படிக்காமல் தமிழகத்திலேயே படித்துத் தேர்ச்சிப் பெற்று, தலைசிறந்த  விண்வெளி விஞ்ஞானியானவர் என்பதும் அவரது தனிப் பெருமை.  அவரது பிறந்த நாள் அக்டோபர் 15ஆம் தேதி இந் தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டது. ஆனால், அவர் பிறந்த தாய்மண் அதை எப்படிக் கொண்டாடியது என்பதை நினைக்கும்போது சற்று வருத்தமாக இருந்தது.

அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் சிலை நிறுவப்படும் என்கிற தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. அதே நேரத்தில், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அவரது பிறந்த நாளை  எல்லா பள்ளிகளிலும், குறைந்தபட்சம் ஒரு படம் வைத்து மரியாதை செலுத்தும் விதத்திலாவது கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தாமல் விட்டது வேதனை அளிக்கிறது. இத்தனைக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அப்துல் கலாம் பிறந்த நாள் "இளைஞர் எழுச்சி நாள்' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின், குறிப்பாக கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அப்துல் கலாம் ஒரு முன்னுதாரணம். ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். கிராமப்புறத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, சாதாரண பள்ளியில் படித்தாலும்கூட  உன்னத நிலையை அடைய முடியும் என்கிற நம்பிக்கையையும், உத்வேகத்தையும் மாணவர்களுக்கு அளிக்கிறது அப்துல் கலாமின் வாழ்க்கை.

எல்லா பள்ளிகளிலும் அப்துல் கலாமின் பிறந்த தினம் கொண்டாடப்படுவதன் மூலம் அடித்தட்டு மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதை நமது பள்ளிக் கல்வித்துறை ஏன் மறந்துவிட்டது? தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைதான் மறந்துவிட்டது என்றால், ராமநாதபுரம் மாவட்ட கல்வித் துறையாவது, அவர்களது மாவட்டத்தைச் சேர்ந்த பேராளுமை ஒருவரின் பிறந்த நாள் எல்லா பள்ளிகளிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று ஏன் நினைக்கவில்லை?

அப்துல் கலாம் ராமநாதபுரத்தில் உள்ள சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்தவர். ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் கல்விச்சாலை அமைப்பதற்காக வழங்கிய  இடத்தில் அந்தப் பள்ளி நிறுவப்பட்டிருக்கிறது. ஒரு கிறிஸ்துவ அறக்கட்டளையால் நடத்தப்படும் அந்த அரசு  உதவிபெறும் பள்ளி, அப்துல் கலாம் படித்த பள்ளி என்று விளம்பரப்படுத்திக் கொள்கிறது. 

அதெல்லாம் சரி, அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை நடத்தக்கூடப் பள்ளி நிர்வாகத்துக்கு  இடமும் மனமும் இல்லாமல் போனது ஏன்? அந்தப் பள்ளிக்கு வெளியே சாலையில் மேடை போட்டு, கலாம் படம் வைத்து மலரஞ்சலி செலுத்தியதை  நிர்வாகம் வேடிக்கை பார்த்ததே தவிர, பள்ளி வளாகத்தில் விழா நடத்த அனுமதிக்கவில்லை என்கிற செய்தி வியப்பாக இருக்கிறது. 

பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், பாரத ரத்னா என்று இந்திய அரசின் அத்தனை உயர் விருதுகளையும் பெற்ற ஒரே ஒரு இந்தியர் மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மட்டும்தான் என்பது தெரியுமா?  அத்தகைய மாமனிதர் ஒரு தமிழர் என்பது நமக்கு எத்துணை பெருமை! அவர் நிகழ்த்திய சாதனைகளுக்கு நிகரான சாதனை செய்திருக்கும் தமிழர் வேறு யார்? நாம் வாழும் காலத்தில் அவரைப் போல எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த மனிதர் வேறு யார்?

அவரது 90ஆவது பிறந்த நாள் கடந்துபோய்விட்டது. இந்தத் தவறு இனிவரும் ஆண்டுகளில் நிகழக்கூடாது. ஆண்டுதோறும் அப்துல் கலாமின் பிறந்த தினம் தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி வளாகங்களிலும், குறைந்தபட்சம் மாணவர்களின்  மலரஞ்சலியுடனாவது கொண்டாடப்பட வேண்டும் என்கிற அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும். கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரது கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காகத்தான் இதை எழுதுகிறேன்.

தினமணி இணையதளமும், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியும் இணைந்து மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் அன்று "கலாம், கனவல்ல நிஜம்' என்கிற கருத்தரங்கை நடத்தின. அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் தவத்திரு குன்றக்குடி பொன்னம் பல அடிகளார் சென்னை வந்திருந்தார். ஏறத்தாழ இரண்டாண்டுகள் ஆகிவிட்டன அவரை தரிசித்து என்பதால், அவரது ஆசி பெறச் சென்றிருந்தேன்.

1995இல் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் 46ஆவது குருமகா சந்நிதானமாகப் பட்டம் ஏற்ற தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக  இறைப் பணியும், தமிழ்ப் பணியும், கல்விப் பணியும், சமுதாயப் பணியும் ஆற்றி வருபவர். "அருள்நெறி திருக்கூட்டம்' அமைப்பின் தலைவர். முந்தைய குருமகா சந்நிதானத்தால் தொடங்கிய உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் பொறுப்பேற்று தொடர்ந்து நடத்தி வருபவர்.

பருவ இதழ் ஒன்றில் அவர் தொடராக எழுதிய "அன்பே தவம்' கட்டுரைகளின் தொகுப்பை எனக்குப் பிரசாதமாக வழங்கினார் சந்நிதானம். அதில் சில கட்டுரைகளை நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன். சில விடுபட்டவை. இப்போது முழுமையான தொகுப்பாகப் படிக்கும்போது, அந்தக் கட்டுரைகள் புதியதொரு பரிமாணத்தில் இருப்பதை என்னால் உணர முடிந்தது.

""அன்பைத் துறக்காமல் வாழ்வதுதான்  தவ வாழ்வு. தவம் என்பது தன்னை ஈடேற்றுவதல்ல. உலகத்தை, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மனித குலத்தை உயர்த்திச் செல்வது'' என்கிறார் அடிகளார். 

அதை வலியுறுத்தியும், வழிமொழிந்தும் எழுதப்பட்டிருக்கின்றன "அன்பே தவம்' புத்தகத்தில் உள்ள கட்டுரைகள்.

குட்டிக் கதைகள், வரலாற்றுச் செய்திகள், ஆளுமைகளின் வாழ்க்கை அனுபவம், இலக்கிய மேற்கோள்கள் என்று  தவத்திரு பொன்னம்பல அடிகளாரின் சொற்பொழிவுகளில் காணப்படும் எல்லா அம்சங்களையும், அவரது புத்தகத்திலும் காண முடிகிறது. அடேயப்பா, எவ்வளவு படித்திருக்கிறார், எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார் என்கிற பிரமிப்பை நம்மில் ஏற்படுத்துகின்றன அவரது கட்டுரைகள்.

""அன்பு, தவமாக  மாறிவிட்டால் இந்த மண்ணுலகம் செழிக்கும். "கவலை துறந்து இங்கே வாழ்வதே வீடு' என்று பாரதி சொன்ன சொர்க்கம் தோன்றும். காண முடியாத ஒன்றல்ல சொர்க்கம். 

வாழும் மண்ணை அன்பால், அரவணைப்பால், தோழமையால், நட்பால், அகிம்சை உணர்வால் அரவணைத்தால் அது செழிக்கும். சொர்க்கம் இங்கே வந்து இறங்கும். 

இதுதான் "அன்பே தவம்' காட்டும் பாதை'' என்று முடிக்கும்போது, நமக்கும் புரிதல் ஏற்படுகிறது. அதே நேரத்தில் முடித்து விட்டாரே என்கிற நினைப்பும் மேலிடுகிறது.

கவிஞர் அ.கார்த்திகேயன் வெளிக்கொணர்ந்திருக்கும் "சமவெளியில் மிதத்தல்' என்கிற கவிதைத் தொகுப்பில்  இடம்பெற்றிருக்கிறது "மீட்பு' என்கிற இந்தக் கவிதை.

கடலில்
சங்கமமான பிறகு
மிதந்து வந்த
நதி எங்கே என்று
தேடி அலையும்
நான்
ஒரு முட்டாள் !

முழு கட்டுரையைப் படிக்க →