முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (21-08-2022)

சென்னை வந்திருப்பதாக கட்செவி அஞ்சலில் தகவல் தந்திருந்தார் கவிஞர் உஸ்மான்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

சென்னை வந்திருப்பதாக கட்செவி அஞ்சலில் தகவல் தந்திருந்தார் கவிஞர் உஸ்மான். அவர் ரஹ்மத் பதிப்பகத்திலிருந்து பணி ஓய்வுபெற்று தனது சொந்த ஊரான மன்னார்குடிக்குப் போனபிறகு, அவ்வப்போது தொலைபேசியில் பேசிக் கொள்வதுடன் சரி. இடையில் கொள்ளை நோய்த்தொற்று வேறு வந்துவிட்டது. கடந்த மூன்றாண்டுகளாக நாங்கள் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

நண்பர் "கவிக்கோ மன்றம்' முஸ்தபாவின் நம்பிக்கைக்குரியவர்களில் முதலாமவர் கவிஞர் உஸ்மானாகத்தான் இருக்கும். சுபாவத்திலேயே புத்தக வாசிப்புப் பிரியர் அவர். அப்படிப்பட்டவருக்குப் பதிப்பகத்தையும், புத்தக விற்பனை நிலையத்தையும் நிர்வாகம் செய்யும் பொறுப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? தனது குடும்பத்தைக் கூட மறந்து ரஹ்மத், கலாம் பதிப்பகங்களுடன் ஒன்றிவிட்டிருந்தார். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வற்புறுத்திப் பணி ஓய்வு வழங்கினார் முஸ்தபா என்பது எனக்குத் தெரியும்.

அவர் பணி ஓய்வுபெற்று சொந்த ஊரில் நிம்மதியாக இருக்கட்டும் என்று நண்பர் முஸ்தபா முடிவெடுத்தபோது, என்னிடம் அது குறித்துத் தெரிவித்தார். இப்போதும் கூட, நானும் முஸ்தபாவும் பேசிக் கொண்டால், ஏதாவது ஒரு விதத்தில் கவிஞர் உஸ்மான் குறித்த பேச்சு வந்துவிடும்.

கவிஞர் உஸ்மானுக்கு என்னை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல். எனக்கும் அவரைப் பார்க்க வேண்டும் என்கிறஆர்வம். நானே சந்திக்க வருகிறேன் என்று அவரிடம் சொன்னேன். தியாகராய நகரிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருப்பதாக அவர் சொன்னார். சந்தித்தோம். பார்த்ததே பேருவகை.

நாங்கள் சந்தித்தது எங்கே தெரியுமா? தியாகராய நகர் தீனதயாளு தெருவில் உள்ள வானதி பதிப்பகத்தில். "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்பார்களே அதுபோல, அங்கு சென்றபோது "வானதி பதிப்பகம்' ராமநாதனை சந்திக்க முடிந்தது; நண்பர் உஸ்மானை அங்கே வரவழைத்து அளவளாவி மகிழவும் முடிந்தது.

சிலரிடம் மணிக்கணக்கில் பேச வேண்டும் என்பதில்லை. ஒரு சில நிமிட சந்திப்பும், சிநேகபூர்வ நலம் விசாரிப்பும் போதும். அவை வெளிப்படுத்தும் நட்பின் சமிக்ஞைகள் கணக்கிட முடியாதவை. அன்றும் அப்படித்தான். நாங்கள் நிறைய பேசவில்லை. அவர் நலமாக இருக்கிறார் என்று நானும், நான் நலமாக இருக்கிறேன் என்று அவரும் தெரிந்து கொண்டோம்.

வாழ்நாளில் நாம் எத்தனையோ பேரை சந்திக்கிறோம். ஆனால், ஒரு சிலரைத்தான் மனதால் நேசித்து நட்புப் பாராட்டுகிறோம். கவிஞர் உஸ்மான் எனக்கு அவர்களில் ஒருவர்!

-----------------------------------------------------------

சென்னை கம்பன் விழா குறித்து கடந்த வாரம் எழுதியிருந்தேன். வழக்கம்போல இந்த ஆண்டும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இயலவில்லை என்பதில் சற்று வருத்தம் உண்டு. குறிப்பாக பட்டிமன்றம் எஸ். ராஜா நிகழ்த்திய ஏவி.எம். அறக்கட்டளைச் சொற்பொழிவுக்குப் போக வேண்டும் என்று திட்டமிட்டும், கலந்து கொள்ள இயலாமல் போனது.

சென்னை கம்பன் கழகத்துக்கும் ஏவி.எம். நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1975-ஆம் ஆண்டு சென்னை கம்பன் கழகம் நிறுவப்பட்டது முதல், ஆண்டுதோறும் நடைபெறும் கம்பன் விழா ஏவி.எம். அறக்கட்டளையின் "ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டப'த்தில்தான் நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் கம்பன் விழாவில் ஏவி.எம். அறக்கட்டளை சார்பில் ஒரு நினைவுச் சொற்பொழிவு நடைபெறுவதும் வழக்கம். இந்த ஆண்டு நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்தியவர் பட்டிமன்றம் எஸ். ராஜா.

பட்டிமன்றப் பேச்சாளர்களில் இரு வகையினர் உண்டு. நகைச்சுவை துணுக்குத் தோரணங்களைக் கோத்து பொழுதுபோக்குக்காக பட்டிமன்றம் நடத்துபவர்கள் ஒரு ரகம். தேனில் மருந்தைக் குழைத்துத் தருவதுபோல, இலக்கியத்தை நகைச்சுவை ரசனையுடன் கலந்து, பாமரர்களுக்கும் தமிழார்வம் ஏற்படத் தூண்டுகோலாக இருப்பவர்கள் இன்னொரு ரகம். மேலே சொன்ன இரண்டு ரகத்திலும் சமர்த்தர் பட்டிமன்றப் பேச்சாளர் எஸ். ராஜா.

இந்த ஆண்டின் ஏவி.எம். அறக்கட்டளை சொற்பொழிவுக்கு எஸ். ராஜா எடுத்துக்கொண்ட தலைப்பு "கம்பனில் நகைமலர்கள்'. கம்ப காதையின் பல்வேறு பரிமாணங்கள் குறித்தெல்லாம் நான் ஆர்வத்துடன் படித்திருக்கிறேன். நகைச்சுவை ததும்பும் கம்பநாடகக் காட்சிகளை எவரும் தேர்ந்தெடுத்துத் தொகுத்து நான் பார்த்ததில்லை.

அன்றைய நிகழ்ச்சிக்குப் போக முடியவில்லை என்கிற எனது வருத்தத்தைப் போக்கும் விதத்தில், அன்றைய எஸ். ராஜாவின் ஏவி.எம். அறக்கட்டளை சொற்பொழிவான "கம்பனில் நகை மலர்கள்' நூல் வடிவம் பெற்றிருக்கிறது. தொல்காப்பியம், சங்க இலக்கியம், வடமொழி இலக்கியம் என்று தொடங்கி கம்பனில் நங்கூரம் பாய்ச்சி, நகைச்சுவை முத்துகளை இனம் பிரித்துத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கும் எஸ். ராஜாவின் மேதைமைக்கு என் பாராட்டுகள்.

"இலக்கியம் கற்பது நம்மை நாமே தூசி தட்டிப் பார்த்துத் துயரங்களைக் களைவதற்குத்தானே. இந்தச் சிறு நூலில் கம்ப வனத்தில் பூத்திருக்கும் நகைமலர்கள் சிலவற்றை உங்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறேன்' என்கிற அவரது கூற்றிலுள்ள உண்மை புத்தகத்தைப் படித்தால் புரியும்.
இன்றைய இளைய தலைமுறை பட்டிமன்றப் பேச்சாளர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய, பத்திரப்படுத்த வேண்டிய புத்தகம் இது. கம்பன் விழா மேடைகளில் உங்களுக்கு இது கை கொடுக்கும். கம்பனிடம் காதல் கொண்ட இலக்கிய அன்பர்கள் ரசித்துப் படித்து சிரித்து மகிழவும், கம்பனின் நகைச்சுவை ரசனையை உணரவும் வழிகோலுகிறது எஸ். ராஜாவின் "கம்பனில் நகை மலர்கள்.'

-----------------------------------------------------------

ஆண்டுதோறும் ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் புலம்பெயர்ந்த, வெளிநாடுவாழ் தமிழர்கள் பலர். அவர்களில் சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் கவிஞர் வாணமதியும் ஒருவர். பதின்ம வயதுப் பெண்ணாக ஈழப் போரில் களம் கண்டவர்; அன்று நடந்த கொடுமைகளின் நேரடி சாட்சியாக இருந்தவர். குடும்பத்துடன் சுவிஸ் நாட்டில் குடியேறிவிட்டாலும், அவரது நினைவில் இருந்து அந்த வடுக்கள் மறையவில்லை என்பதை அவரது பேச்சும் எழுத்தும் எடுத்தியம்புகின்றன.

அண்மையில் இந்தியா வந்திருந்த கவிஞர் வாணமதியின் "காட்சிப் பிழைகள்' கவிதைத் தொகுதி, கவிஞர் முத்துலிங்கத்தால் சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியிடப் பட்டது. தொழிலதிபர் "நல்லி' குப்புசாமி செட்டியார் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். ஈழப் போராட்டத்தில் "மே-18' ஏற்படுத்திய வேதனையை வெளிப்படுத்துகின்றன அவரது கவிதை வரிகள்:

இனப்படுகொலை
இனப்படுகொலை
எத்தனைக் காலமாக இயம்புகின்றோம்?
எம் இனம் அழிக்கப்பட்டதா?
என் இனத்தின் அடையாளம்
அழிக்கப்பட்டதா?
பதிலின்றிப் பரிதவித்தாலும்
இனியொரு விதி செய்யும்
வருமொரு காலம்.

முழு கட்டுரையைப் படிக்க →