தமிழ்மணி

கம்பராமாயண ஓலைச்சுவடிகள்

படித்தவர் மத்தியில் பேசப்பட்ட கம்பராமாயணத்தைப் பாமரர்களும் கேட்கும் வண்ணம் பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் மூலம் பல அமைப்புகளும் நிறுவனங்களும் ஊடகங்களும்  செய்துவருகின்றன.

ச. கிருஷ்ணமூர்த்தி

படித்தவர் மத்தியில் பேசப்பட்ட கம்பராமாயணத்தைப் பாமரர்களும் கேட்கும் வண்ணம் பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் மூலம் பல அமைப்புகளும் நிறுவனங்களும் ஊடகங்களும் சென்ற நூற்றாண்டு முதல் செய்துவருகின்றன.  

தொன்றுதொட்டு ஓலைச்சுவடிகள் மூலம் கம்பராமாயணத்தைப் புலவர்கள் காப்பாற்றி வந்துள்ளனர். 

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் 43 கம்பராமாயண ஓலைச்சுவடிகளைச் சேகரித்துள்ளார். இக்கட்டுரை ஆசிரியர், தஞ்சை மாவட்டத் தொல்லியல் அலுவலராகப் பணியாற்றியபோது, 1979-இல் சீர்காழி அருணாசல முதலியாரிடமிருந்து 10 கம்பராமாயண ஓலைச்சுவடிகளை அரசுக்காகச் 
சேகரித்துள்ளார்.

அரசினர் கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலகம், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பல நிறுவனங்கள், தனியார்களிடம் கம்பராமாயண ஓலை பிரதிகள் உள்ளன. வெளிநாடுகளிலும் உள்ளன.

இக்கட்டுரை ஆசிரியர் சேகரித்திருந்த கம்பராமாயண ஓலைச்சுவடிகள் பத்தில், ஒன்பது சுவடிகள் தாமிரபரணி நதி பாயும் பகுதியில் எழுதப்பட்டதாகும். மேற்கண்ட சுவடிகளின் மூலம் பல்வேறு விவரங்கள் தெரியவருகின்றன.

முதல் சுவடியில் பாலகாண்டம் முதல் சுந்தரகாண்டம் வரை 5 காண்டங்கள், 92 படலங்கள், 6,252 பாடல்கள் உள்ளன. ஏடுகளின் எண்ணிக்கை 304. கொல்லம் 929-ஆம் ஆண்டு 17-ஆம் தேதி ஆதித்தவாரமும் ரோகினி நட்சத்திரமும் திரையோதசியும் கூடிய சுப தினத்தில் அதாவது கி.பி.1754-இல் இச்சுவடி எழுதப்பட்டது. "ஆழ்வார் திருநகரியில் மேலைத்தெருவில் காணுகோவி ஆழ்வார்பிள்ளை குமாரர்களில் தருமபுத்திர பிள்ளையவர்கள் குமாரர் அழகிய நம்பி எழுதினது' என்ற வாசகம் உள்ளது. சுவடி எழுத 84 நாள்கள் தேவைப்பட்டுள்ளது. நல்ல நாளும் கிழமையும் நேரமும் பார்த்து எழுத முற்பட்டனர்.

இரண்டாவது சுவடி "கொல்லம் 987 ஆவணி மாதம் 29-ஆம் தேதி குருவாரமும் புணர்பூசமும் கூடின சுப தினத்தில் விடிந்து 6 நாழிகையில் தொடங்கி எழுதினது. 989 ஆனி சோமவாரமும் புணர்பூச நட்சத்திரமும் துலா லக்னமும் கூடின சுப தினத்தில் எழுதி முடிந்தது'. அதாவது கி.பி. 1812-இல் தொடங்கி, 1814-இல் எழுதி முடிந்துள்ளது. இச்சுவடி எழுத 22 மாதங்கள் தேவைப்பட்டுள்ளன. ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணிய கவிராசன் புத்திரன் கண்ணபிரான் எழுதியது. ஏடுகளின் எண்ணிக்கை 299.

மூன்றாம் சுவடியில் பால காண்டம் 24 படலம், 1354 விருத்தகங்கள், அயோத்தியா காண்டம் 13 படலம், 1209 விருத்தங்கள் உள்ளன.

நான்காவது சுவடியில் ஆரண்யகாண்டம் 1995 விருத்தகங்கள் இருப்பதாகக் குறிப்பு உள்ளது. 

ஐந்தாவது சுவடியில் பாலகாண்டம், அயோத்தியகாண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தாகாண்டம் என நான்கு காண்டங்களும் 64 படலங்களும் 4,464 விருத்தகங்களும் உள்ளன. பிள்ளைபெருமாள் கவிராயர் இச்சுவடியை எழுதியுள்ளார். இக்கவிராயர் பிரசித்திப் பெற்றவராவார்.

ஆறாவது சுவடியில் ஒவ்வொரு காண்டமும் ஒவ்வோர் இடத்தில் எழுதப்பட்டவிவரமுள்ளது. பாலகாண்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தெய்வசிலையாரால் கொல்லம் 917 ஆடி மாதம் 12-ஆம் தேதி அதாவது கிபி. 1802-இல் எழுதி முடிந்தது. அயோத்திய காண்டம், திருவட்டாறில் ஆதிகேசவர் சந்நதியில் திருவேங்கட கவிதாசர் சார்வபௌமரால் கி.பி. 1803-இல் எழுதி முடிக்கப்பட்டது. ஆரண்ய காண்டமானது ஸ்ரீவைகுண்டத்து சாத்தாதவர்களில் இராமாயண பட்டர் இளையபெருமாள் அய்யன் ஏடு முதலாக நாலும் உடன் வைத்துத் திருந்திய பாடத்தை தெய்வச் சிலையார் என்பவர் திருமலைப் பிள்ளைக்காக ஜனவரி 1803-இல் எழுதி முடித்துள்ளார். கிட்கிந்தா காண்டமும், சுந்தர காண்டமும் இவரே எழுதியுள்ளார்.

ஏழாவது சுவடி ஆரண்ய காண்டம் 16 படலங்கள் 1,023 விருத்தகங்கள், கிட்கிந்தா காண்டம் 15 படலங்கள் 1040 விருத்தகங்களைக் கொண்டுள்ளது. சிங்கிகுளம் என்ற ஊரில் வாழ்ந்த நாங்குநேரி நம்மாழ்வார் சாத்தாத வைஷ்ணவர் புத்திரன் தெய்வநாயகம் எழுதியுள்ளார்.

எட்டாவது சுவடி சர்வதாரி வருஷம் ஐப்பசி மாதம் 14-ஆம் தேதி சுக்கிர வார நாள் விசாக நட்சத்திரத்தில், அதாவது கி.பி. 1825-இல் திருப்பூந்துருத்தி ஜோஸ்யர் நாராயண ஐயங்காரால் எழுதி முடிக்கப்பட்டது என்று குறிப்புள்ளது.
ஒன்பதாவது சுவடி, சீவைகுண்டம் அணைஞ்ச பெருமாள் பிள்ளை கொல்லம் 873 மாசி மாதம் 26-ஆம் தேதி எழுதி முடித்துள்ளார். பத்தாவது சுவடியில் முதல் ஆறு காண்டங்கள் உள்ளன. எழுதியவர் பற்றிய குறிப்பு இல்லை.

சென்னை உ.வே.சாமிநாதையர் நூலகத்தில் உள்ள 43 கம்பராமாயண ஓலைச்சுவடிகளில் ஒரு சுவடி ஏழு காண்டங்களும் முழுமையாகக் கொண்டுள்ளது. 

உ.வே.சா. நூலகம், அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், தமிழ்ப் பல்கலைக்கழக கம்பராமாயணச் சுவடிகள் சிலவற்றில் நூல் அரங்கேறிய காலம். இடம் குறித்து ஒரு விருத்தகம் உள்ளது.

எண்ணிய சகாத்த மெண்ணூற் றேழின்  
                                       மேற்சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர்
                                      தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய விராம காதை 
                                          பங்குனி யுத்த நாளில்
கண்ணிய வரங்கர் முன்னே 
                                   கவியரங் கேற்றி னானே

இப்பாடலின் மூலம் நூலின் பெயரும் நூலாசிரியர் பெயரும் அரங்கேறிய இடமும் அரங்கேறிய காலமும் அறிகிறோம்.  இப்பாடலின் அடிப்படையில் கிபி. 885-இல் திருவரங்கம் கோயிலில் கம்பர் நூலை அரங்கேற்றினார் எனத் திருச்சிற்றம்பலம் மு. அருணாச்சலம் குறிப்பிட்டார். இவரை ஒட்டி சிலர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கம்பராமாயணம் எழுதப்பட்டது என்பர். இதற்கு ஒரு பாடல் உண்டு. கம்பனுக்கும் அனபாயச் சோழனுக்கும் பகை இருந்ததாகவும் முரண்பட்ட தகவல் உண்டு.

உ.வே.சா. நூலகத்தில் உள்ள கம்பராமாயணச் சுவடி ஒன்று, நாலு தேசங்களிலுமுள்ள இராமாயணச் சுவடிகளை வைத்துக் கொண்டு சோதிச்சுக் கொல்லம் 918 முதல் 953 வரை பிழைதிருத்தி உறங்காவல்லிதாசன் எழுதியுள்ளார். இராமாயணம் திருவேங்கடம் எழுதுவித்துள்ளார். நாலு தேசம் என்பது சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாடு ஆகும். 49 ஓலைச்சுவடிகளை வைத்துக் கொண்டு 35 ஆண்டுகள் ஆய்ந்து எழுதப்பட்டுள்ளது.

ஒரு சுவடி ஆலங்குடி மகாஸ்ரீ வரதராஜ முதலியாருடையது என்கிறது. வேறொர் சுவடி கிருஷ்ணாபுரம் பெருமாள் ஐயங்காரால் எழுதப்பட்டது. மற்றோர் சுவடி யுத்த காண்டம், உத்தர காண்டத்தைக் கொண்டுள்ளது.  சுவடியின் முடிவில் ஆகக் காண்டம் 6, கவிகள் 12,017 முற்றும் என்ற குறிப்பு உள்ளது. கண்ணிக்குறிச்சி எழுவரை முக்கிக் குப்பையாண்டார் பிள்ளை பாடம் சுத்த பிரதியாக கண்டதும் வைத்துக் கொண்டு கொல்லம் 918 முதல் 952 வரை திருத்தி எழுதினது என்ற விளக்கம் உள்ளது.

386-ஆம் எண்ணுள்ள சுவடியை அபிமான சிகாமணி நல்லூர் உடைய நயினார் சீகயிலாயமுடையார் கரியமாணிக்கம் எழுத திருமேனி பெரிய திருவடி இரத்தின கவிராயர் விலைக்கு வாங்கியுள்ளார். தண்டலங்காரச் சுவடி ஒன்றில் இந்த இரத்தினக் கவிராயர் பெயர் இடம்பெற்றுள்ளது.

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகக் கம்பராமாயண ஓலைச்சுவடிகளில் ஒன்றினை ராமச்சந்திர வனியனார் யுவ ஆண்டு புரட்டாசியில் எழுதி முடித்துள்ளார்.

சேலம் அம்மாபேட்டை வெள்ளாளரில் சிதம்பரம் பிள்ளை மகன்  பிழை பொறுத்தான் சகம் 1670 கலி 4850-இல் கம்பராமாயணம் ஏழு காண்டங்களையும் நான்கு ஓலைச்சுவடிகளில் எழுதி முடித்துள்ளார். காலம் கி.பி. 1748  ஆகும். இங்கே பிள்ளை என்பவர் துளுவ வேளாளராவார்.

சென்னை இராயப்பேட்டையிலிருக்கும் வள்ளிபுரம் அழகப்ப முதலியார் குமாரன் பரசுராமன் யுத்த காண்டம் 4346 பாடல்களைச் சௌமிய வருடம் தை மாதம் எழுதி முடித்துள்ளார். அரசினர்க் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் இச்சுவடி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வா் வருகை: நாகையில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரம்

அரசுக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம் டிச.29-இல் தொடக்கம்

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT