விருந்தும் மருந்துமாகும்
வெற்றிலை வெற்றிலையின் பூர்விகம் மலேசியா. வெற்றிலையைத் தமிழ்நாட்டினர் வெற்றிலை அல்லது வெத்திலை என்று அழைக்கின்றனர்.
வெற்றிலை வெற்றிலையின் பூர்விகம் மலேசியா. வெற்றிலையைத் தமிழ்நாட்டினர் வெற்றிலை அல்லது வெத்திலை என்று அழைக்கின்றனர். தெலுங்கு மொழியில் "தமலபாக்கு' என்றும், அரேபியர் "தம்போல்' என்றும் வடநாட்டினர் "பான் கா பட்டா' என்றும் அழைப்பர்.
வெற்றிலையை அடகு, அடை, சாகம், பன்னம், பாக்கிலை, பாசிலை, தம்பலம், திரை, திரையல், வெள்ளிலை, வெற்றிலை, வெத்திலை என்று தமிழ் இலக்கியங்கள் விரித்துக் கூறும். சீவக சிந்தாமணியில் வெற்றிலை பயிரிடும் தோட்டம் மெல்லிலைக்காவு (சீவக: பா.826) என்று குறிப்பிடப்படுகின்றது.
வெற்றிலை வைக்கும் பெட்டி வெற்றிலைப் படலிகை என்றும், வெற்றிலைச் செப்பு என்றும் அழைக்கப்படுகிறது. அச்செப்புத்தட்டு மணிச்செப்பு என்று சிறப்பிக்கப்படுகிறது சீவக: பா:197;1-2)
கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் "ஆண் வெற்றிலைகள்' என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் "பெண் வெற்றிலைகள்' என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
வெற்றிலையைத் தாம்பூலம், திரையல், நாகவல்லி, மெல்லிரை, மெல்லிலை என்று பல பெயர்களில் சுட்டுகிறது சூடாமணி நிகண்டு.
வெற்றிலை பயிராகும் பகுதிக்கு "கொடிக்கால்' என்று பெயர். பண்படுத்திய நிலத்தில் சிறு சிறு வாய்க்கால்களை வெட்டி கரையில் அகத்திச் செடியை வரிசையாக ஊன்றி வைப்பார்கள். இவற்றுடன் கலியாண முருங்கை, கமுகு, நுணா ஆகிய மரங்களை நடுதலும் உண்டு. அகத்தி முளைத்த நிலத்தை அகத்திக்கால் என்று அழைப்பர்.
புரட்டாசி மாதத்தில் வெற்றிலைக் கொடி நடுவர். மூன்று மாதங்களில் வெற்றிலைக்கு முன் அகத்தி வளரும்போது தோட்டத்தை சடைக்கால் என்ற பெயரால் குறிப்பர். வெற்றிலை நட்டு ஆறு மாதம் வரை இந்நிலம் இளங்கால் என்று அழைக்கப்படும். வளர்ந்த வெற்றிலைக் கொடியை அகத்திக் காலில் கட்டுவர். கோரையை கிழித்து அகத்திச் செடியில் எடுத்துக்கட்டும் முறைக்கு எடுத்தாக்கை என்று பெயர்.
தை மாதத்தில் வளர்ந்த வெற்றிலை கொடியை நீண்ட அகத்தி மரத்தின் மேல் தென்னம்பாளையைக் கொண்டு கட்டுவதற்கு கங்குவாடு என்று பெயர். பிறகு வளர்ந்த இரண்டு அகத்தி மரங்களின் முனைகளை சேர்த்து கட்டுவதற்கு பிடிக்கட்டு என்று பெயர்.
நீண்டு வளர்ந்து செல்லும் வெற்றிலைக் கொடியை மடக்கிக் கட்டுவதற்கு மடக்கு வேலை என்று பெயர். இவ்வாறு கொடிக்கால் போட்டு மூன்று மாதங்களில் சடைக்கல் என்றும் ஆறுமாதம் ஆனதும் இளங்கால் என்றும் ஒன்றரை வருடம் ஆனபிறகு பயிர்க்கால் என்றும் வெற்றிலை அழியப்போகும் போது முதிக்கால் என்றும் அழிந்த கொடிக்காலுக்கு வெட்டுக்கட்டே என்றும் கூறுவர்.
அக்காலத்தில் வெற்றிலை பயிரிடுவதற்கும் விற்பனை செய்வதற்கும் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. வெற்றிலை பயிரிடுவதற்கு விதிக்கப்பட்ட வரி இலைக்கூலம் என்றும், வெற்றிலையை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்ட வரி இலைவாணிபப் பாட்டம் என்றும் அழைக்கப்பட்டது. தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் என்னும் பொருள் இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
- முனைவர் பிரியா கிருஷ்ணன்