தமிழ்மணி

மகண்மை கொண்டார்!

பனசை மு. சுவாமிநாதன்


உலக வாழ்வில் தொடர் சங்கிலியாக நிகழ்பவை - நிகழ வேண்டும் என எதிர்ப்பார்பவை பிறப்பு, கல்வி, பணி, திருமணம், பிள்ளைப்பேறு என்பவை. அதில் பிள்ளைப்பேறு மிகவும் விரும்பத்தக்கது; ஏக்கத்துடன் எதிர்ப்பார்ப்பது; பிறரால் ஆவலுடன் கேட்டு அறியப்படுவது.

"மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை வில்லை தாம் வாழுநாளே!'

எனப் புறநானூற்றுப் புலவர் கூறுகிறார். உலக வாழ்வில் திருமணம் முடிந்து சில மாதங்களுக்குள்ளாகவே உற்றாரும், உறவினரும், நண்பர்களும் "ஏதேனும் விசேஷம் உண்டா? என அக்கறையோடும், அக்கப்போருக்காகவும் கேட்பர்.

மணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் மக்கட்பேறு இல்லாவிட்டாலும், இனி கிடைக்கும் என்பது உறுதியாகாத நிலையிலும் அதனால் பாதிக்கப்பட்ட தம்பதி இருவரும் உறவிலோ, நட்பிலோ காப்பகங்களிலிருந்தோ ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பதுண்டு. இதைப் பேச்சு வழக்கில் சுவீகாரம் எடுத்தல்,  தத்தெடுத்தல் எனச் சொல்வதுண்டு.

ஆனால், சேக்கிழாருக்குச் சிந்தையில் உதித்தவை இரண்டு சொற்கள். அரிய தமிழ்ச் சொற்கள்; இனிய பொருள் பொதிந்த சொற்கள்; எல்லா வகையிலும் பொருந்திய சொற்கள். அவை:  1. மகன்மை - மகனாம் தன்மை (மகனாகப் பாவிக்கப்படுதல்); 2. மகண்மை - மகளாம் தன்மை (மகளாகப் பாவிக்கப்படுதல்).

பெரியபுராணத்தில் சுந்தரரை நரசிங்க முனையரையர் வளர்ப்புப் பிள்ளையாக ஏற்ற இடத்திலும், கோட்புலி நாயனார் மகளை சுந்தரர் தம்முடைய மகளாக ஏற்ற சூழலிலும் சேக்கிழார் பெருமான், "அன்பினால் மகன்மை கொண்டார்', "அன்பினால் மகண்மை கொண்டார்' என்கிறார். செந்தமிழ்ச் சொற்களஞ்சியத்துக்கு மேலும் இரு சொற்களைத் தந்த சேக்கிழாருக்கு நாம் நன்றி பாராட்டியாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT