தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (29-05-2022)

DIN

என்னை அலுவலகத்தில் சந்திக்க விழையும் வெளியூர் நண்பர்களையும், அன்பர்களையும் தவிர்க்க முடியாது. அதே நேரத்தில், சென்னையைச் சேர்ந்த யாராவது சந்திப்பதற்கோ, அழைப்பிதழ் தருவதற்கோ வர விரும்புவதாகச் சொன்னால் பெரும்பாலும் நான் அதைத் தவிர்த்து விடுவேன்.

ஏதாவது சந்திப்பு, நிகழ்வு, தனிப்பட்ட காரணங்களுக்காக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கும் எங்கள் அலுவலகத்திலிருந்து சென்னை நகரின் முக்கியப் பகுதிகளுக்கு நான் வருவதுண்டு. அப்போது என்னை சந்திக்க விழைபவர்களை நானே நேரில் சென்று சந்தித்துவிடுவேன். ஏதாவது பொது இடத்துக்கு வரச்சொல்லி சந்திப்பதும் உண்டு. இரவு பத்து மணிக்கு மேல், எனது தலையங்கம் உள்ளிட்ட அன்றாட அலுவல்களை முடித்துக்கொண்டு, சிலரை சந்திக்கப் போவதும் உண்டு.

பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்  என்னை சந்திக்க விழைகிறார் என்று சொன்னதுமே, "அவர் வர வேண்டாம். ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நான் சென்று சந்திக்கிறேன்' என்று தகவல் அனுப்பினேன். அவரைத் தொலைபேசியில் அழைத்து "நானே வருகிறேன். நீங்கள் சிரமப்பட வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டேன். அவர்  கேட்டால்தானே?

"நான்தான் நேரில் வருவேன்' என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார். அவரும், சென்னை டி.ஜி. வைணவக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் முருகனுமாக நேரில் வந்துவிட்டார்கள்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வைணவத் தமிழ் இலக்கியத்தில் அவர் போலக் கரைகண்ட புலமை பெற்றவர்கள் தமிழகத்தில் வெகு சிலர்தான் இருக்க முடியும். புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலிலும், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலிலும் அவர் நிகழ்த்திய திருமுறைகள் பற்றிய தொடர் சொற்பொழிவுகளைக் கேட்பதற்கென்றே பக்தர் கூட்டம் காத்திருக்கும்.

""நான் வந்திருப்பேனே... நீங்கள் ஏன் சிரமப்பட்டு இவ்வளவு தூரம் வந்தீர்கள்?'' என்று நான் உரிமையுடன் கேட்டேன்.  ""எல்லாவற்றுக்கும் ஒரு முறைமை இருக்கிறது. படைப்பாளி தனது படைப்பை நேரில் சென்று விமர்சகரிடம் அவரே கொடுப்பதுதான் முறை'' என்கிற அவரது பதிலைக் கேட்டு நான் அவரை அண்ணாந்து பார்த்ததில் வியப்பென்ன இருக்கிறது?

நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நான் பத்திரிகை ஆசிரியர். 
பண்பிலும், புலமையிலும் அவர் பேராசிரியர்!

-----------------------------------------

பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் ஒரு மிகப்பெரிய பணியைச் செய்து முடித்திருக்கிறார்.  பல்கலைக்கழகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறாரே தவிர, அவரது தமிழ்ப்பணி ஓய்ந்துவிடவில்லை. கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தை வீணாக்கிவிடாமல் அவர் ஆற்றியிருக்கும் மிகப்பெரிய தமிழ்ப்பணி, இப்போது அவர் வெளிக்கொணர்ந்திருக்கும் "திருக்குறள் களஞ்சியம்'.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உழைத்து, அவர் தொகுத்திருக்கும் "திருக்குறள் களஞ்சியம்' வள்ளுவம் குறித்த ஆய்வாளர்களுக்குக் கிடைத்திருக்கும் பேரகராதி; பன்னூற் திரட்டு; தேடல் குறிப்பு (ரெஃபரென்ஸ்) நூலகம். இதுவரை எவருமே மேற்கொள்ளாத சாதனை முயற்சியில் ஈடுபட்டு பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் கொண்டுவந்திருக்கும் திருக்குறள் களஞ்சியம், காலப்போக்கில் காணாமல் போய்விடாமல் பல அறிஞர்களின் பதிவுகளை, மீள்பதிவு செய்து தந்திருக்கிறது.

பத்துத் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் "திருக்குறள் களஞ்சியம்' தொகுப்பில், வீரமாமுனிவரில் தொடங்கி, 125 அறிஞர்கள் திருக்குறள் குறித்து எழுதிய கட்டுரைகளும், ஆய்வுகளும் தேடித் தொகுக்கப்பட்டிருக்கின்றன. "தமிழறிஞர்கள் யார், எவர்' என்கிற பட்டியல் தயாரித்தால், அவர்களில் பெரும்பாலோரின் கட்டுரைகள் "திருக்குறள் களஞ்சியம்' தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. 

தமிழிலக்கிய வரலாற்றில் மிகுதியாகப் பதிப்பிக்கப் பெற்ற நூல்; மிகுதியாக உரை செய்யப்பெற்ற நூல்; மிகுதியான மொழிகளில் மொழிபெயர்க்கப்பெற்ற தமிழ் நூல் என்கிற சிறப்புகளைப் பெற்ற திருக்குறள் குறித்து இதற்கு முன்னால் பல ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், இப்படியொரு கட்டுரைத் தொகுப்பு வெளிவந்ததாகத் தெரியவில்லை. அதுமட்டுமல்ல, அந்த அறிஞர்களின் கட்டுரைகள் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன என்பதுதான் அதனினும் சிறப்பு.

பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் இந்தத் தொகுப்புக்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் கட்டுரைகளை எழுதிய 125 தமிழறிஞர்கள் குறித்த குறிப்புகளுடன் தொடங்குகிறது முதலாவது தொகுதி. யாரோ ஒருவர் எழுதிய கட்டுரை என்று வருங்கால சந்ததியினர் நினைத்துவிடக் கூடாது. யார் அவர் என்பதையும் தெரிந்துகொண்டு கட்டுரைகளைப் படிக்க வேண்டும் என்கிற பேராசிரியரின் தொலைநோக்குப் பார்வை பாராட்டுக்குரியது.

பத்துத் தொகுதிகள்; 125 ஆய்வுக் கட்டுரைகள். அவ்வளவு எளிதில் ஆழ்ந்து படித்துவிட முடியாது. அறிஞர்கள் பற்றிய குறிப்பைத் தவிர்த்துவிட்டுக் கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன். இரண்டாவது தொகுதிக்குத்தான் வந்திருக்கிறேன். அதில் "தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வின் "திருவள்ளுவர் விரிவுரை' கட்டுரையில் அவர் குறிப்பிடுகிறார் -

""திருவள்ளுவர் தமிழ்நாட்டிற் பிறந்தவர்; தாய் மொழியை நன்கு பயின்றவர். அவர் அந்நாளில் தமிழ்நாட்டிற் புகுந்த பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் முதலிய மொழிகளிலுள்ள நூல்களையும் பயின்றிருப்பர். திருவள்ளுவர் தாம் பெற்ற கலைப் புலமையளவில் நின்று திருக்குறளை யாத்தனர் என்று சொல்வதற்கில்லை. இதனை அவர்தம் நூலை ஆராய்வதால் தெளிதல் கூடும்.
திருக்குறளை ஆய்ந்து பார்த்தால், அது கலைப்புலமை கடந்த இயற்கைப் புலமையால் முகிழ்ந்த தெள்ளறிவினின்றும் பிறந்ததென்பது விளங்கும். ஆராய்ச்சியாளர்  சாதிவெறி, மதவெறி, மொழிவெறி முதலிய வெறிகளற்றவராயிருத்தல் வேண்டும்''.

வள்ளுவம் என்கிற மகா சமுத்திரத்தில் மூழ்கி சில முத்துக்களைக் கண்டெடுத்து முத்தாரம் கோத்திருக்கிறார் பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்.

-----------------------------------------


இன்றைய பெண்ணியக் கவிஞர்களில் கோவை மீ. உமாமகேஸ்வரி குறிப்பிடத்தக்கவர். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உயர்நிலை உதவியாளராக கோவையில் பணியாற்றி வருபவர். அவரது நான்காவது கவிதைத் தொகுப்பு "சங்கிலித் தையல்'. புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்த அந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்தது "அறியா சுவரொட்டி' என்கிற இந்தக் கவிதை.
வழிதவறிய வளர்ப்பு நாயைக்
கண்டெடுத்து தருவோருக்கு
தக்க சன்மானமென
அறிவிக்கும் சுவரொட்டியைப்
படிக்காதிருக்கட்டும்
அந்த முதியவர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT