இந்த வாரம் கலாரசிகன் - (23-10-2022)
லட்சுமி மில்ஸ் அதிபர்களில் ஒருவரான பெரியவர் ஜி.கே. சுந்தரத்தால் தொடங்கப்பட்ட கோவை கம்பன் கழகம் தனது பொன் விழா நிகழ்வை வெகு விமரிசையாகக் கொண்டாடியது.
லட்சுமி மில்ஸ் அதிபர்களில் ஒருவரான பெரியவர் ஜி.கே. சுந்தரத்தால் தொடங்கப்பட்ட கோவை கம்பன் கழகம் தனது பொன் விழா நிகழ்வை வெகு விமரிசையாகக் கொண்டாடியது.
நீதிநாயகம் அரங்க. மகாதேவனின் சிறப்புரை, யூடியூப் சேனல்களில் பரவலாகப் பகிரப்பட வேண்டிய ஆழமான ஆய்வு. கம்பனையும், சங்கப் பாடல்களையும் ஒப்பிட்டு மேற்கோள் காட்டிய அவரது ஆழங்காற்பட்ட இலக்கியப் புரிதல், அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்தது.
தமிழகத்தில் நூற்றுக்கணக்கான இலக்கிய சொற்பொழிவாளர்கள் உருவாகக் கம்பன் கழகங்கள் ஒரு முக்கியமான காரணம். அவர்களால், கம்ப காதையிலும், தமிழிலக்கியத்திலும் பாமரர்களுக்கும் தமிழார்வம் ஏற்பட்டதை எப்படி மறந்துவிட முடியும்? பட்டிமன்றம் என்றாலே, அதன் விவாதப் பொருளாகக் கம்ப காதையும், இளங்கோவடிகளின் சிலம்பும்தான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேச்சுப் போட்டிகளை நடத்தி பல இளம் இலக்கிய சொற்பொழிவாளர்களை உருவாக்கியதில் கம்பன் கழகங்கள் பெரும் பங்காற்றி வந்தன, வந்து கொண்டிருக்கின்றன. இப்போதும்கூட அந்த நடைமுறை தொடர்கிறது என்பதையும், சப்தமில்லாமல் கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் இளைய தலைமுறைக் கூட்டமொன்று உருவாகிக் கொண்டிருப்பதையும் கோவை கம்பன் கழகப் பொன்விழா நிகழ்வு உணர்த்தியது.
கம்பன் விழாக்களில் ஒரு மரபு பின்பற்றப்பட்டு வந்தது. எந்த ஊரில் கம்பன் விழா நடந்தாலும், ஏனைய கம்பன் கழகப் பொறுப்பாளர்கள் சில உறுப்பினர்களுடன் அதில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். முந்தைய தலைமுறை கம்பன் கழகப் பொறுப்பாளர்களான கோவை நஞ்சுண்டன், வேலூர் குப்புசாமி முதலியார், ராஜாபாளையும் முத்துக்கிருஷ்ண ராஜா உள்ளிட்டவர்கள் வயதைப் பொருட்படுத்தாமல் எந்த ஊரில் கம்பன் விழா நடந்தாலும் சென்றுவிடுவார்கள்.
கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன்புவரை அந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கோவை கம்பன் விழாவில் கோவில்பட்டி, விழுப்புரம் உள்ளிட்ட சில கம்பன் கழகங்களின் சார்பில் வந்திருந்தார்கள் என்றாலும், பெரும்பாலான கம்பன் கழகப் பிரதிநிதிகள் பங்கு பெறாததை மற்றவர்கள் கவனித்தார்களோ என்னவோ, நான் கவனித்தேன்.
கம்பன் கழகங்கள் முன்புபோல ஓர் இயக்கமாக மீண்டெழ வேண்டும். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பழைய நடைமுறைகள் தொடர வேண்டும். "கம்பனடிப்பொடி' சா. கணேசனாருக்கும், பெரியவர் ஜி.கே. சுந்தரத்துக்கும், நீதிநாயகம் மு.மு. இஸ்மாயிலுக்கும், கோவிந்தசாமி முதலியாருக்கும் நாம் செய்யும் கைமாறு அதுவாகத்தான் இருக்கும்.
-------------------------------------------------------------------
இந்தியாவின் விடுதலை வேள்வியில் தமிழகத்தின் பங்கு குறித்து, "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யைத் தொடர்ந்து, முழு முனைப்புடன் தமிழகமெங்கும் சுற்றி அலைந்து, தேடிக் கண்டுபிடித்துத் தியாகிகளையும், அவர்களது தியாங்களையும் ஆவணப்படுத்திய பெருமை (அருந்தொண்டு) ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரனுக்கு உண்டு. அவரது "விடுதலை வேள்வியில் தமிழகம்' நூலின் மூன்றாவது பாகம் விரைவில் வெளிவர இருக்கிறது.
மக்கள் சிந்தனைப் பேரவை இப்போது, "விடுதலைப் போராட்ட வரலாற்று ஆய்வு மையம்' ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், தமிழக விடுதலைப் போராட்ட இயக்கங்கள் பற்றிய நூல்கள், முனைவர்பட்ட ஆய்வுகள், சிறப்பு மலர்கள், ஆவணங்கள், கட்டுரைகள், புகைப்படங்கள், பதிவுகள் போன்றவை இருந்தால், அவற்றைப் பேரவை கோருகிறது.
நூல்கள் மற்றும் ஆவணங்களை மக்கள் சிந்தனைப் பேரவை, ஏ 47, சம்பத் நகர், ஈரோடு - 638 001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். விவரங்களை 0424 - 2269186 என்ற எண்ணிலோ அல்லது info@makkalsinthanaiperavai.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். நல்லதொரு முயற்சி. ஊர் கூடித் தேர் இழுப்போம், வாருங்கள்.
---------------------------------------------------------------
குற்றாலத்தில் பழைய குற்றாலம், புலி அருவி, ஐந்தருவி, தேனருவி, செண்பகாதேவி, சிற்றருவி என்று பெரிய அருவி இல்லாமல் வேறு பல அருவிகள் உண்டு. மற்ற அருவிகளில் எல்லாம் குளித்துவிட்டுப் பெரிய அருவியிலும் குளித்து குற்றாலநாதர் தரிசனத்துக்குப் போவது சுற்றுலாப் பயணிகள் பலர் கையாளும் வழிமுறை. அதேபோல, பேராசிரியர் அரங்க. ராமலிங்கம் தொகுத்திருக்கும் "திருக்குறள் களஞ்சியம்' என்பது பெரிய அருவி என்றால், அவரது "திருக்குறள் கட்டுரைகள்' சிற்றருவி.
பத்து தொகுதிகளாக 125 அறிஞர்களின் திருக்குறள் குறித்த கட்டுரைகள் "திருக்குறள் களஞ்சியம்' என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்றால், அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 அறிஞர்களின் 44 கட்டுரைகள் தனியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
திருக்குறள் என்கிற ஆழங்காண முடியாத கடலில் முத்துக் குளித்து, ஆளாளுக்கு ஒரு முத்தைத் தேடிப் பிடித்து வருகிறார்கள். அந்த முத்துக்களைக் கோர்த்து மாலையாக்கும் முயற்சியின் முன்னோட்டம், பேராசிரியர் அரங்க. இராமலிங்கத்தின் "திருக்குறள் கட்டுரைகள்'. தொடர்வது திருக்குறள் களஞ்சியம்.
---------------------------------------------------------------
நெல்லைச் சீமையிலிருந்து வெளிவரும் "காணிநிலம்' தனிச்சுற்று இதழில் வெளிவந்திருக்கிறது கவிஞர் சக்தி ஜோதி எழுதிய "தன் நீர்மை குன்றாது...' என்கிற கவிதை. அதிலிருந்து சில வரிகள்.
எந்த நதியும்
ஏதோவொரு பெண்ணின்
பெயர் தாங்கியே
தன் ஈரத்தைத்
தக்கவைத்துக் கொண்டிருக்கிறது
கோடையில் வற்றினாலும்
மணலெல்லாம்
பெண்மனம் போல
முற்றிலும் ஈரமற்றுப்
போவதில்லை!