இந்த வாரம் கலாரசிகன் - (20-08-2023)
தில்லி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் முகுந்தனின் மணிவிழா (சஷ்டியப்த பூர்த்தி) சென்னையில் நடந்தது. தில்லிவாழ் தமிழர்களில் குறிப்பிடத்தக்க அனைவரும் அதற்காக சென்னைக்கு வந்திருந்தனர்.
தில்லி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் முகுந்தனின் மணிவிழா (சஷ்டியப்த பூர்த்தி) சென்னையில் நடந்தது. தில்லிவாழ் தமிழர்களில் குறிப்பிடத்தக்க அனைவரும் அதற்காக சென்னைக்கு வந்திருந்தனர். "சக்தி' பெருமாள், கே.வி.கே. பெருமாள், தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளின் செயலர் ராஜு உள்ளிட்ட அனைவருமே ஆஜர்.
சென்னைக் கம்பன் விழாவில் நண்பர் கே.வி.கே. பெருமாளை சந்தித்தேன். அவருடன்தான் முகுந்தன் மணிவிழா நிகழ்வுக்கும் சென்றேன். கே.வி.கே. பெருமாளின் பின்னணி தில்லிக்கு வெளியே பலருக்கும் தெரியாது. மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, அவரது தனிச் செயலாளராக நீண்ட காலம் செயலாற்றி, இப்போது பணி ஓய்வு பெற்றிருப்பவர். ப. சிதம்பரத்தின் செயலாளராகப் பணியாற்றியவர் என்பதிலிருந்தே அவரது சுறுசுறுப்பையும், செயல் திறமையையும் புரிந்து கொள்ளலாம்.
கே.வி.கே. பெருமாள் ஒரு புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார். தில்லியில் கம்பன் கழகம் நிறுவ வேண்டும் என்பதுதான் அவர் இப்போது மேற்கொண்டிருக்கும் முனைப்பு. அதில்தான் அவர் ஒரு குழப்பத்திலும் சிக்கலிலும் இருக்கிறார். அதை என்னிடம் தெரிவித்து, ஆலோசனை கேட்டார். அவருக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் குழப்பம் எனக்கு ஒரு சில ஆண்டுகளாகவே இருப்பது அவருக்குத் தெரியாது. எனக்கு மட்டுமல்ல, கம்பன் மீது காதல் கொண்ட எல்லா இலக்கிய அன்பர்களும் எதிர்கொள்ளும் பிரச்னைதான் அது.
"கம்பன் அடிப்பொடி' சா. கணேசனார் காரைக்குடியில் 1939-ஆம் ஆண்டு தொடங்கிய "கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும்' பணி இன்று தமிழகத்திலும், தமிழ்நாட்டிற்கு வெளியேயும் பரவிக் கொண்டிருக்கிறது.
ஆண்டுதோறும் கம்பன் விழா நடத்த, அதற்கென்று கம்பன் அறநிலையை உருவாக்கி, ஏனைய கம்பன் கழகங்களுக்கு வழிகாட்டி (வழிகோலி) இருக்கிறார் கம்பன் அடிப்பொடி.
யார், எந்த ஊரில் கம்பன் கழகம் நிறுவினாலும் அவர்கள் காரைக்குடி கம்பன் அறநிலையைத் தொடர்பு கொள்வது வழக்கம். அவர்கள் "கம்பன் சீர்' என்று கம்பனின் திருவுருவப் படம், ஒரு கம்பராமாயணப் புத்தகம், ரூ. 101 அளித்து கம்பன் கழகம் நிறுவத் தங்களது ஆசியை வழங்குவது என்பது மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
"கம்பன் அடிப்பொடி' காரைக்குடியில் எழுப்பிய கம்பன் கோட்டத்தையும், ஆண்டுதோறும் நடத்தும் கம்பன் விழாவையும் பாதுகாக்கக் கம்பன் அறநிலையைத் தோற்றுவித்தார். அதற்கு அவர் கம்பன் கழகம் என்று பெயர் சூட்டாமல் விட்டுவிட்டார். இப்போது காரைக்குடி கம்பன் அறநிலை சில ஆண்டு
களாகப் பிளவுபட்டிருக்கிறது. அது குறித்து நான் ஏற்கெனவே எழுதியும் இருக்கிறேன்.
சென்னைக் கம்பன் கழகத்தை வளர்த்ததிலும், இன்றைய முன்னணி இலக்கியப் பேச்சாளர்களை உருவாக்கியதிலும், காரைக்குடியில் கம்பன் விழாவை வெற்றிகரமாகக் "கம்பன் அடிப்பொடி' விட்டுச் சென்ற இடத்தில் இருந்து தொடர்ந்து நடத்தப் பங்களித்ததிலும் "கம்பன் அடிசூடி' பழ. பழனியப்பனின் பங்களிப்பு அளப்பரியது என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருந்துவிட முடியாது. பழகுவதற்கு இனிய நண்பர், கம்பனில் ஆழங்காற்பட்ட அன்பர், நிகழ்ச்சிகளை வெற்றிகரமாகக் கட்டமைப்பதில் சமர்த்தர்.
காரைக்குடியில் கம்பன் அறநிலையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனியாகக் காரைக்குடி கம்பன் கழகம் என்று பதிவு செய்து நடத்தி வருகிறார். புதிதாகக் கம்பன் கழகம் நிறுவ விழைபவர்கள் "கம்பன் அடிப்பொடி' நிறுவிய கம்பன் அறநிலையைத் தொடர்பு கொள்வதா, இல்லை "கம்பன் அடிசூடி' பழ. பழனியப்பனின் கம்பன் கழகத்தை நாடிக் "கம்பன் சீர்' பெறுவதா என்பதுதான் தில்லியில் கம்பன் கழகம் நிறுவ விழையும் கே.வி.கே. பெருமாள் உள்பட அனைவரும் எதிர்கொள்ளும் குழப்பம்.
தனி மனிதர்கள் நிரந்தரமானவர்கள் அல்ல; ஆனால், செயல்பாடுகள் நிரந்தரமானவை. "கம்பன் அடிப்பொடி' சா. கணேசனார் தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கிய கம்பன் பணிகள் சிதைந்துவிடக் கூடாது. அறநிலையைச் சேர்ந்தவர்களும், நண்பர் "கம்பன் அடிசூடி' பழ. பழனியப்பனும் உட்கார்ந்து பேசி காரைக்குடி கம்பன் கழகத்தைக் கம்பன் அறநிலையுடன் இணைத்து, கம்பன் புகழ்பாடி கன்னித் தமிழ் வளர்க்கும் பணியைத் தொடர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.
------------------------------------------------
ஆசிரியர் சாவியின் நெருங்கிய நண்பர்கள் என்று பட்டியலிட்டால், அதில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் வி.ஜி. பன்னீர்தாஸ். சொந்தமாக "சாவி' வார இதழைத் தொடங்கவும், அதைத் தொடங்கி நடத்தவும் விளம்பரங்களை அள்ளித் தந்து உதவிக் கரம் நீட்டியவர். அவர்களது நெருக்கம் வியாபார ரீதியாக இல்லாமல் குடும்ப ரீதியாகவும் இருந்தது.
பன்னீர்தாஸ் அண்ணாச்சியின் மகன் விஜிபி ராஜாதாஸ் எழுதிய "என் தந்தையின் அறிவுச் சிந்தனைகள்!' என்கிற புத்தகம் விமர்சனத்துக்கு வந்திருந்தது. அதைப் பார்த்தபோது, "சாவி' வார இதழ்கால நினைவுகள் தோன்றி மறைந்தன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ரயில் பயணத்தின்போது ராஜாதாஸையும் அவரது மனைவியையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அண்ணாச்சியைப் போலவே, சகஜமாகப் பழகும் பண்பாளர் அவர். "தந்தை மகற்காற்றும் நன்றி', "மகன் தந்தைக்காற்றும் உதவி' ஆகிய இரண்டு குறள்களுக்கும் அடையாளம் தந்தையும் மகனும் என்பதைப் புத்தகத்தைப் படிக்காமலே உணர்ந்தேன்.
புத்தகத்தைப் படித்தபோது, விஜிபி ராஜாதாஸை அகற்றி நிறுத்திவிட்டு, எந்தவொரு மகனும் தனது தந்தையின் அறிவுரைகளாகத் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துகள் அண்ணாச்சியுடையது என்று நான் உணர்ந்தேன்.
விமர்சனத்துக்கு வந்திருந்தது கவிஞர் காரை பார்த்திபனின் "முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை' புத்தகம். அதிலிருந்து ஒரு கவிதை -
கரைகளும்
வந்து சென்றதை
நினைவில் இருத்தவில்லை
அலைகளும் கொண்டு
சேர்த்ததை
குறிப்பெடுக்கவில்லை