தமிழ்மணி

உலகம் காணா உயர்சீடர்

முனைவர் கி. சிவா

இவ்வுலகத்தில் எண்ணற்ற குருமார்களும் மாணவர்களும் தோன்றி மறைந்துள்ளனர். அவ்வாறே உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்கு இலக்கணம் படைத்த ஒல்காப் புகழ் தொல்காப்பியனார்க்கும் உலகப்பொதுநெறி வகுத்த திருவள்ளுவனார்க்கும் இறவாக் காப்பியங்கள் படைத்தளித்த இளங்கோவடிகள், கம்பர் முதலான பலருக்கும் குருமார்கள் இருந்திருப்பர். அவர்களைக் குறித்த செய்திகள் நமக்குத் தெரியவில்லை. அகத்தியர், தொல்காப்பியரின் குரு என்று சொல்லப்படுகிறது. தமிழறிஞர்கள் அச்செய்தி உண்மையென்பதற்கு மெய்ச்சான்றுகள் இல்லையென்பர்.

குரு, குருத்து என்னும் சொற்கள் தமிழில் உண்டு."குரு'வை "அடி'யாகக் கொண்டு "குருத்தல்' என்ற தமிழ்ச்சொல் தோன்றுகிறது. இதற்கு வளர்ச்சி என்று பொருள். அதாவது, அறிவை வளரச்செய்பவரையும் வளர்த்துக்கொள்பவரையும் குரு எனக் குறிப்பர். ஆசு, இரியர் என்னுமிரு சொற்கள் இணைந்து ஆசிரியர் என்ற சொல் உருவாகும். 

"ஆசு' என்பதற்குக் குற்றமென்னும் பற்றுக்கோடு (புறநானூறு பா.307) என்றும் "இரியர்' என்பதற்குக் பகைவர் அல்லது நீக்குபவர் என்றும் பொருள். புறநானூற்றின் "ஆசு ஆகு எந்தை' என்ற பாடலடியில் குறிப்பிட்டுள்ள பற்றுக்கோடு என்ற விளக்கம் குறிப்பிடத்தக்கது. பற்றுக்கோடு இல்லாமல் கொடி வளர்வது கடினம். ஆகவே, அறிவாகிய கொடி படர்வதற்கு ஆசானே அடிப்படையாகிறார் என்பது தமிழ்தந்த விளக்கம்.  

ஆனால், இன்றோ நாம் வாழும் காலத்தில் ஆசிரியர் மாணவர் உறவில் பலவிதமான மேடு பள்ளங்கள் உருவாகியுள்ளன என்பதைக் காண்கிறாம். வள்ளலாரின் காலத்திலே இம்முரண் இருந்தது என்பதை அறியமுடிகிறது. வள்ளலார் "குருட்டு மாணாக்கர் புல்லொழுக்கம்', "குருட்டு ஆசிரியர் புல்லொழுக்கம்' ஆகிய துணைத் தலைப்பின்கீழ் (ஆறாம் திருமுறை) பாடல்கள் புனைந்துள்ளார். குணநலம், அறிவுநலம் முதலான எந்தச் சிறப்பும் இல்லாத ஆசிரியரைக் குருட்டு ஆசிரியர் என்றும், அதேபோன்ற குணமற்ற மாணவர்களைக் குருட்டு மாணாக்கர் என்றும் அவர் குறித்துள்ளார். 

குருட்டு மாணவனிடம் சென்று குரு என்று சொன்னால்  வேர்க்குருவோ முகக்குருவோ நம் குரு என்று கேட்பானாம். இப்படிப்பட்ட மாணவர்கள் ஊர்க்குருவிகள் போலப் பல்கிக் கிளைத்திருக்கின்றனராம் (பா.12). பொய், சூது முதலான பல தீய செயல்களைச் செய்யும் குணம்கெட்ட குருவின் குறைகளை எடுத்துச்சொன்னால் பிணமும் நின்று சிரிக்குமாம் (பா.15).

எய்கின்றான் குருஅம்பால், எறிகின்றான்
      சீடன்கல் லெடுத்து, வஞ்சம்
செய்கின்றான் குரு, இடித்துச் சிரிக்கின்றான்
     சீடன், மிகத் தீய சொல்லால்
வைகின்றான் குரு அவனை, வலிக்கின்றான்
     சீடன், நடு வழியில் நின்று
பெய்கின்றான் குரு, ஓடிப் பெய்கின்றான்
    சீடன்என்னோ பிறைவேய்ந் தோனே! (பா.16)

என்னும் இப்பாடல் தீய நடத்தையுடைய குரு, சீடன் ஆகிய இருவரையும் காட்சிப்படுத்துகிறது.

வள்ளலார் காலத்துக்கு முன்னர், குருமார்களின் நிலை சிறப்புற்றிருந்ததையும் அறியமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபந்த வேந்தர் எனக் கொண்டாடப்படும் குமரகுருபரரே (1625-1688) உலகம் காணாத உயர்ந்த சீடராய் அனைவராலும் கொண்டாடத்தக்கவர் ஆவார். அவர் தம் குருவான தருமபுர ஆதீன மடாதிபதி மாசிலாமணி தேசிகர்மீது பண்டார மும்மணிக்கோவை என்ற நூலை இயற்றியுள்ளார். 

அதில் தம் குருவிடம், "அடுத்த பிறவி எனக்கு வேண்டா. அப்படி இருக்குமென்றால் கல்வியும் ஒழுக்கமும் இல்லாதவர்களாய் - பழிப்பிற்குரிய குணங்கள் கொண்டவர்களாய் இருப்பினும் தங்கள் சீடர்களாக வாழ்வோர், உணவு உண்டபின் தெருவில் வீசி எறியும் வாழை இலையிலே (பரிகலம்) இருக்கும் எச்சில் உணவை உண்டு வாழ்கின்ற நாயாகப் (ஞமலி) பிறந்து தங்களது அருளை அடைய விழைகிறேன்' என்று வேண்டுகிறார். 

விழுத்தகு கல்வியும் ஒழுக்கமும் இலராய்ப்
பழிப்புளராய் ஆயினும் ஆக வழுத்துநின்
பொன்னடித் துணைசேர் நின்னடித் தொண்டர் 
திருவமுது ஆர்ந்து தெருக்கடை எறிந்த
பரிகல மாந்திஇப் பவக்கடல் உழக்கும்
வரனுடை ஞமலி யாகிநின்
அருளையும் அயராது அவதரிப் பதுவே (37-43) 

"குருவே! உங்கள்மீது அன்புகொண்ட சீடர்களின் எச்சில் உணவை உண்டு வாழ்கின்ற நாயாகப் பிறந்து தங்களது அருளை அடைய விரும்புகிறேன்' என்று கூறிய குமரகுருபரரைப் போன்ற மற்றோர் சீடரை உலக வரலாற்றில் காணமுடியுமா?   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

கல்கியின் நாயகி!

எழும்பூர் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: உடனடியாக மீட்ட காவல்துறை

இந்திய குடியுரிமை பெற்ற பின் தனது முதல் வாக்கை செலுத்தினார் பிரபல நடிகர்

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

SCROLL FOR NEXT