இந்த வாரம் கலாரசிகன் - (30-07-23)
பெரியவர் சொ.சொ.மீ. சுந்தரத்துக்கு இன்று அகவை 80. வணிகவியல் படித்தவர்; திருமுறைகளைக் கரைத்துக் குடித்தவர்; சைவ சித்தாந்தத்தில் கரை கண்டவர்; எல்லாவற்றிற்கும் மேலாக மிகச் சிறந்த மனிதர்.
பெரியவர் சொ.சொ.மீ. சுந்தரத்துக்கு இன்று அகவை 80. வணிகவியல் படித்தவர்; திருமுறைகளைக் கரைத்துக் குடித்தவர்; சைவ சித்தாந்தத்தில் கரை கண்டவர்; எல்லாவற்றிற்கும் மேலாக மிகச் சிறந்த மனிதர். என் மீது தனிப்பட்ட அன்பும், பற்றும் கொண்ட பெருந்தகை.
முன்கூட்டியே தெரிந்திருந்தால் மதுரைக்கு விரைந்திருப்பேன். தமிழ்போல அவர் நீடு வாழ, திருவாலவாய் ஈசனை வேண்டி வணங்குகிறேன்!
-----------------------------------------------------
விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் ஜூலை 15ஆம் தேதி நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரையில் தங்கியிருந்தேன். நான் படித்த சேதுபதி உயர்நிலைப் பள்ளியை ஒட்டி இருக்கிறது மதுரை தலைமைத் தபால் நிலையம். அதைக் கடந்து செல்லும்போது, காரை நிறுத்தச் சொன்னேன்.
காரிலிருந்து இறங்கி, தலைமைத் தபால் நிலையத்தின் ஒரு பகுதியாக இயங்கும் தபால் தலை சேகரிப்பு மையத்தை நோக்கி நான் நடக்கத் தொடங்கினேன். பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து நான் தீவிரமான தபால் தலை சேகரிப்பாளன். கடந்த 30 ஆண்டுகளாக முன்பு போலத் தீவிரமாக இல்லை என்றாலும், தபால் தலைகளை சேகரிப்பதில் உள்ள ஆர்வம் குறைந்துவிடவில்லை. வெளிநாடுகளிலிருந்து வரும்போது யாராவது அன்பளிப்பாக என்ன வேண்டும் என்று கேட்டால், அந்த ஊர் தபால் தலைகள் கொண்டு வாருங்கள் என்று இப்போதும்கூட சிறுபிள்ளைபோல நான் கேட்பதுண்டு.
தபால் தலைகள் சேகரிப்பது என்பதில் பல நுணுக்கங்கள் உண்டு. உறையிலிருந்து தபால் தலையைப் பிரித்து எடுக்கக் கூடாது. கத்தரிக்கோலால் உறையுடன் வெட்டி எடுக்க வேண்டும். குறிப்பிட்ட அளவில் சேர்ந்தவுடன் அவற்றைத் தண்ணீரில் ஊறப்போட வேண்டும். தபால் தலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தனியாகப் பிரிந்துவிடும். அவற்றை எடுத்து உலர்த்தி, இன்னொரு உறையிலோ, பெட்டியிலோ பத்திரப்படுத்த வேண்டும்.
தபால் தலைகளை சேகரித்து பத்திரப்படுத்த தனியாக ஆல்பங்கள் கிடைக்கும். தபால் தலைகளை நாடுகள், பூக்கள், பறவைகள், விலங்குகள், கலைகள், ஆளுமைகள் என்று அவரவர் கற்பனைக்குத் தகுந்தபடி தரம் பிரித்து, ஆல்பத்தில் வெவ்வேறு தலைப்புகளில் சேமித்து வைக்க வேண்டும். ஆல்பத்தில் ஒட்டுவதற்கென்று "ஹிஞ்சுகள்' கிடைக்கும். அவற்றால்தான் ஒட்ட வேண்டும்.
தபால் தலை சேகரிப்பாளர் மையம் (ஃபிலேடலிக் ப்யூரோ) சார்பில் மாதந்தோறும் ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்தில் பயிற்சி முகாம் நடத்துவார்கள். அதில் தபால் தலை சேகரிப்பாளர்கள் (டாக்டர்கள், நீதிபதிகள், பேராசிரியர்கள் போன்ற பெரிய மனிதர்கள்கூட இருப்பார்கள்) கலந்து கொள்வார்கள். தபால் தலைகளைப் பரிமாறிக் கொள்வது, பண்ட மாற்று செய்து கொள்வதுகூட அங்கே நடக்கும். தபால் தலைகளை எப்படி சேகரிப்பது என்பதை அங்கே கற்றுக்கொடுப்பார்கள்.
தபால் தலை சேகரிப்புக்கு உதவியாக பேனா நண்பர்கள் எனக்கு இருந்தனர். அமெரிக்காவில் டாமி ஹில்ட்ஸ், ஜெர்மனியில் கிறிஸ்டினா கேபல், நைனிடாலில் சைலேஷ் ஷா ஆகியோருடன் கடந்த நூற்றாண்டு இறுதிவரை நான் தொடர்பில் இருந்தேன். எனக்கு ஒன்பது நாடுகளில் இருந்த பேனா நண்பர்கள் கடிதத் தொடர்பில் இருந்தனர். நானும் அவர்களுக்கு இந்தியத் தபால் தலையை ஒட்டி கடிதம் அனுப்புவேன்.
தபால் தலைகள் வெளியிடப்படும் நாளில் சிறப்பு உறைகள் வெளியிடப்படும். அந்த உறைகளில் தபால் தலைகளை ஒட்டி அந்த தேதியுடன் சிறப்பு முத்திரை பெற்று சேகரிப்பதும் வழக்கம். சமீபத்தில்கூட, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்காக வெளியிடப்பட்ட சிறப்புத் தபால் தலையையும், உறையையும் அதே நாளில் தில்லி தலைமைத் தபால் நிலையம் சென்று வாங்கி வந்தேன்.
எனது தாய்வழித் தாத்தா, மாமா இருவர் சேமிப்புடன் எனது சேமிப்பும் சேர்ந்து மூன்று தலைமுறை தபால் தலை சேகரிப்பு என்னிடம் இருக்கிறது. அவ்வப்போது அதை எடுத்துப் பார்த்து ரசிப்பதில் ஒரு தனி ஆனந்தம்.
மதுரை தலைமைத் தபால் நிலையத்தில் உள்ள தபால் தலை சேகரிப்பாளர்கள் மையத்தில் 1964 முதல் நான் உறுப்பினன். அதற்கான பதிவுகள் இல்லை என்கிறார்கள். பழைய நினைவுகளை மீள்பார்வை பார்க்க முடிந்தது மட்டுமல்ல, என்னிடம் இல்லாத பல புதிய தபால் தலைகளையும் வாங்கிக் கொண்டு விடை பெற்றேன்.
வாட்ஸ்ஆப், ட்விட்டர் யுகத்தில் தபால் தலைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. தபால் தலை சேகரிப்புக்கு இன்றைய தலைமுறைக்கு நேரமும் இல்லை. எங்கள் தலைமுறையினர் தபால் தலைகளைச் சேகரித்தோம். இன்றைய தலைமுறை பல்வேறு நாட்டு நாணயங்களை சேகரிக்கிறார்கள்!
-----------------------------------------------------
சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனியில் அமைந்த ரஹ்மத் பதிப்பகத்துக்கு அங்கு பணியாற்றும் அனஸையும், வசீமையும் சந்திக்கச் சென்றிருந்தேன். நுழைந்தவுடன் கண்ணில் பட்டது "சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம்' என்கிற புத்தகம். பத்தாண்டுகளுக்கு முன்பு ராணி வார இதழின் முன்னாள் ஆசிரியர் அ.மா.சாமி எழுதி வெளியான அந்தப் புத்தகம் இப்போதாவது எனது பார்வையில் பட்டதே என்று நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
சிவந்தி ஆதித்தனார் குறித்து எழுத அ.மா. சாமியைவிடப் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது. "ராணி' ஆசிரியர் அ.மா. சாமியும், "தினத்தந்தி' ஆசிரியர் ஐ. சண்முகநாதனும் சிவந்தியாருக்கு இரு கரங்களாகச் செயல்பட்டார்கள்.
வாழ்க்கை வரலாறு எழுதுவது என்பது ஒரு வகை. ஓர் ஆளுமை குறித்து அவரைத் தெரிந்த, அவருடன் பழகிய பலரின் பார்வையைப் பதிவு செய்வது என்பது இன்னொரு வகை. "சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம்' இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அதனால், அவரது பன்முகப் பரிமாணங்கள் அனைத்தும் இதில் பதிவாகி இருக்கின்றன.
-----------------------------------------------------
குறிப்புக்காக சில புத்தகங்கள் எனது சேகரிப்பில் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு டாக்டர் சுதா சேஷய்யன் எங்கள் நிருபர் கோபி கிருஷ்ணாவுடன் வந்திருந்தார். உரையாடிக் கொண்டிருக்கும்போது, நிர்மலா சுரேஷ் பற்றிய பேச்சு வந்தது. தனது நினைவில் தங்கிவிட்ட நிர்மலா சுரேஷின் கவிதையைப் பகிர்ந்து கொண்டார் டாக்டர் சுதா. அந்தக் கவிதை இதுதான் காற்றில் உன் பெயரைச் செதுக்குகிறது என் மூச்சு...