"பேச்சு மொழியின் பரிமாணத்தைக்காண அம்மொழியில் காணப்படும் மரபுத் தொடர்களின் எண்ணிக்கையும் அவற்றின் ஆழ அகலப் பரிமாணங்களும் துணை புரியும். பொதுவாக மரபுத்தொடர்கள் பேச்சு மொழியின் நன்கொடைகள்தாம். பேச்சு மொழியிலிருந்தே பெரும்பாலும் அவை எழுத்து மொழிக்கு ஊடுருவிச் சென்று அதனை வளமும் வனப்பும் பெறச் செய்கின்றன' என்கிறார் ச. அகத்தியலிங்கம்.
"கயிறு உருவி விடுதல்' என்பது தமிழில் ஒரு மரபுத் தொடர். "கயிறு திரி', "கயிற்றின் மேல்நட', "கயிற்றில் தொங்கு' என்பன போன்ற, மரபுத் தொடர்கள் "தற்காலத் தமிழ்மரபுத் தொடர் அகராதி'யில் இடம் பெற்றுள்ளன. ஆனால் "கயிறு உருவி விடுதல்' என்பது அவ்வகராதியில் காணப்பெறவில்லை. தற்காலத்தில் வழக்கற்றுப் போனது, அதற்குக் காரணமாகலாம்.
நாட்டுப்புறங்களில் இன்று "மஞ்சுவிரட்டு' என்னும் வீரவிளையாட்டுக்காக வளர்க்கப்படும் கொல்லேறுகளைத் திடலுக்குக் கொண்டு சென்றதும் கயிற்றின் பிடியிலிருந்து அவற்றை விடுவிப்பர். இதுவே, "கயிறு உருவி விடுதல்' எனப்பெறும். இந்த நாட்டார் வழக்கை எழுத்து இலக்கியத்தில் ஏற்றி அதற்குக் கூடுதல் அழகும் உயிர்ப்பும் கொடுத்திருக்கிறது திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் பற்றிய இந்நூலினைப் பாடியவர் கணிமேதாவியார் என்னும் புலவர். 
இந்நூலுள் குறிஞ்சியை அடுத்துவரும் நெய்தல் திணையில், "பாங்கன் தலைமகனைக் கண்டு, தலைவியை வியந்து சொல்லியது' என்னும் துறையமைந்த பாடலில் இம்மரபுத் தொடர் காணப்படுகிறது.
பண்ணாது, பண்மேல் தேன்பாடும் 
                                                                                  கழிக்கானல்,
எண்ணாது கண்டார்க்கே ஏர்   அணங்கால்;  
                                                                                     எண்ணாது
சாவார், சான்றாண்மை சலித்திலா 
                                                                          மற்றுஇவளைக்
காவார் கயிறுரீஇ விட்டார் என்பது பாடல். 
யாழினைப் போலன்றி, பண்ணோடு பொருந்தத் தேன் என்னும் ஒருவகை வண்டினங்கள் இசைக்கின்ற கடற்கரைச் சோலையில் இவளைக் கண்டவர்கள் அறிவினால் ஆராயாது அணங்காம் என்று கருதி இறந்துபடுவர். சான்றாண்மையிடத்து வேறுபட்டிலாத இவளைக்காவாது வெளியில் விட்டவர்கள் சான்றாண்மையின் வேறுபட்டவர்கள் ஆவர் என்பது இதன் பொழிப்புரையாகும்.
எனினும், "கண்டார்க்கு இடர்விளைக்கும் அணங்கான இவளைக் கொல்லேற்றினைக் கயிறு உருவி விட்டது போல வெளியில் விட்டார்களே' என்பதுதான் இதன் சாரமான கருத்து.
வண்டுஅலர் கோதை மாதர்
வனமுலை வளர்த்த தாயர்
கண்டுஉயிர் உண்ணுங் கூற்றம்
கயிறுரீஇக் காட்டி யிட்டார் (2457)
என்னும் சீவகசிந்தாமணிப் பாடலிலும் இம்மரபுத்தொடர் இடம் பெற்றுள்ளது. 
"பார்த்தவர் உயிரைப் பறிக்கும் அழகு படைத்தவள்' என்பதை உணர்ச்சிக் கொந்தளிப்போடு வெளியிடுவதற்குப் பெரிதும் இது உதவியிருக்கிறது.
பெண்ணே! உன்மீதும் தவறு இல்லை; உன்னை வெளியில்விட்ட பெற்றோர் மீதும் தவறு இல்லை. நிறையழிந்த மதயானையை நீர்த்துறைக்குக் கொண்டு செல்கையில் அதுபற்றிப் பறையறைந்து முன்னறிவிப்புச் செய்வது போலப் பேரழகியான உன்புறப்பாடு பற்றியும் அறிவித்திருக்க வேண்டும். அப்படி ஆணையிடாத இந்நாட்டின் அரசனே தவறு உடையவன்.
அவள் அழகில் கிறங்கிய இளைஞன் ஒருவன் கூற்றாகக் குறிஞ்சிக் கலியில் இப்படிப் பாடியிருக்கிறார் கபிலர்.
நீயும் தவறு இலை; நின்னைப் புறங்கடைப் 
போதரவிட்ட நுமரும் தவறு இலர்;
நிறைஅழி கொல்யானை நீர்க்கு விட்டாங்கு
"பறை அறைந்தல்லது செல்லற்க' என்னா
இறையே தவறு உடையான்
என்பது பாடற்பகுதி.
நம்காலத்துக் கவிஞரான தமிழ் ஒளியும்,
அரக்கான மஞ்சள் நிறக்கச் சணிந்தே
அசைகின்ற மயிலொருத்தி
வரக்கண்ட பின்னர் வழிமேல் நடந்து
வராதீர்! வராதீர்! ஐயா!
என்று "தடை' விதிக்கிறார்.
காலம் மாறினும் மனித "மனோபாவம்' மாறுவதில்லை என்பதற்கான சான்று இது. 
இந்நிலையில் "கயிறு உருவி விடுதல்' போன்ற மரபுத் தொடர்கள் கருத்துடன் உணர்வையும் ஒருசேரப் பிணித்து முழுவீச்சுடன் கற்போர் மனத்தில் தைக்கும் ஆற்றல் படைத்தவை. "அவனைத் தூண்டி விடாதே' என்னும் பொருளில், "வரிப்புலியை வால்உருவி விடாதே' என்னும் மரபுத் தொடரை ஒருமுறை சொல்லிப் பாருங்கள். பொருளுணர்ச்சிக்கு அது கொடுக்கும் கூடுதல் அழுத்தம் நமக்குப் புரிந்து  விடும். இதனை உணர்ந்தே வில்லிபாரதம் சூதுபோர்ச்
சருக்கத்தில்,
வயப்புலியை வாலுருவி விடுகின் றீரே (265)
என்று சகுனி கூற்றாக இதைப் பயன்படுத்தியிருக்கிறார் வில்லிபுத்தூராழ்வார்.
இவ்வாறே,
பொருகடல் நீர் வண்ணன் உகைக்குமேல்
எத்தேவர் வாலாட்டும் அப்போது ஒழியும் (38)
என்னும் திருமழிசையாழ்வாரின் நான்
முகன் திருவந்தாதிப் பாடலில் இடம்பெறும் "வாலாட்டு' என்னும் மரபுத்தொடர் குறும்பு செய்தல் / தொல்லை கொடுத்தல் எனும் பொருளில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே எழுத்து இலக்கியத்தில் இடம் பெற்றதையும் அறியலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.