தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 04-08-2024

பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தலைநகர் தில்லிக்குச் சென்றால் எல்லா தலைவர்களையும் சந்திக்க முடியும் என்பதால் பயணம் மேற்கொண்டேன்.

கலாரசிகன்

பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தலைநகர் தில்லிக்குச் சென்றால் எல்லா தலைவர்களையும் சந்திக்க முடியும் என்பதால் பயணம் மேற்கொண்டேன். அதுமட்டுமல்லாமல், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் நீதியரசர் அரங்க.மகாதேவனை தில்லியில் சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதும் இன்னொரு காரணம்.

எதேச்சையான நிகழ்வு என்று சொல்வதா, எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்று சொல்வதா என்று தெரியவில்லை. தில்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் அவரது அறைக்குப் பக்கத்து அறை எனக்கு ஒதுக்கப்பட்டது.

அவருக்கு இன்னும் நீதிபதிக்கான இல்லம் ஒதுக்கப்படவில்லை என்பதால், தமிழ்நாடு அரசு இல்லத்தில் இருந்துதான் செயல்படுகிறார். அவரது அறைக்கு அருகிலேயே இன்னொரு அறை அவரது அலுவலகமாக செயல்பட ஒதுக்கப்பட்டிருந்தது. என்னைக் கூட்டிக்கொண்டுபோய் அந்த அறையைக் காண்பித்தார். நான் மிரண்டுபோய்விட்டேன்.

நூற்றுக்கணக்கான கேஸ் கட்டுகள் (வழக்குகள் தொடர்பான கோப்புகள்) அங்கே அடுக்கப்பட்டிருந்தன. அவை ஒருநாள் விசாரணைக்கானவை என்று உதவியாளர் சொன்னதுமட்டுமல்ல, அடுத்தநாள் இதைப்போல இரண்டு மடங்கு கோப்புகள் நீதியரசர் படித்து, குறிப்பெடுக்கக் காத்திருக்கின்றன என்று சொன்னபோது நான் மலைத்துதான் போனேன்.

தேசநலனிலும், இந்திய பண்பாட்டுக் கூறுகளிலும், தமிழ் இலக்கியத்திலும் அக்கறையுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் ஆளுமைகளில் நீதிபதி அரங்க.மகாதேவன் ஒருவர் என்பதில் எனக்கு மட்டுமல்ல, யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அவரை ஒவ்வொருமுறை சந்தித்துப் பேசும்போதும், ஏதாவது புதிய விஷயத்தை, நான் அறிந்திடாத தகவலை, சமுதாயம் எதிர்கொள்ளும் அவலத்தை கற்றுக்கொள்கிறேன். தில்லியில் சந்தித்தபோதும் அப்படித்தான்.

நீதிபதி அரங்க.மகாதேவனின் தனித்துவம் என்னவென்றால் அவருக்கு சங்க இலக்கியமும், சமய இலக்கியமும் மட்டுமல்ல, நவீன இலக்கியத்திலும் ஆழங்காற்பட்ட புரிதல் உண்டு என்பதுதான். தந்தை மா.அரங்கநாதன் தன்னை எப்படி வளர்த்தார் (வார்த்தார்) என்பதை நீதியரசர் பகிர்ந்துகொண்டார்.

தனது மாணவப் பருவத்தில், க.நா.சு., அசோகமித்திரன், ஜெயகாந்தன், ஞானக்கூத்தன் போன்ற நவீன தமிழ் ஆளுமைகள் உடனான தொடர்புகள் குறித்தும், பாலகுமாரன் உள்ளிட்ட புதின எழுத்தாளர்கள் குறித்தும் அவர் சொன்ன கருத்துக்கள் எழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டியவை. நட்பு ரீதியாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன் என்பதைவிட, ஒரு மாணவனாக நான் அவரிடம் பாடம் கேட்டேன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

ஏறத்தாழ ஒரு வாரம் கடந்துவிட்டது. அந்த சந்திப்பின்போது அவர் எழுப்பிய ஒரு கேள்வி என்னைத் தூங்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது. கேள்வி என்பதைவிட, அதை புதிர்தான் என்று கூற வேண்டும். அது வேறொன்றுமல்ல. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் எழுப்பிய நூற்றுக்கணக்கான ஆலயங்கள், தமிழ்நாட்டின் பண்பாட்டையும் கட்டடக் கலை மேன்மையையும் இப்போதுவரை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

ராஜராஜன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயிலும், ராஜேந்திர சோழனின் கங்கைகொண்ட சோழபுரமும் காலத்தின் சீற்றத்தை எதிர்த்து உயர்ந்து நிற்கின்றன. கட்டடக் கலையின் உன்னதத்தை வடித்துத் தந்த அந்த மன்னர்களின் அரண்மனைகள் எங்கே? மாட மாளிகைகள் எங்கே? பிரம்மாண்டமான ஆலயங்களை எழுப்பிய அந்த மன்னர்கள், தாங்கள் வாழ அரண்மனைகள் கட்டாமலா இருந்திருப்பார்கள்...? அவை எப்படி, எப்போது காணாமல் போயின?

நீதியரசர் கேட்ட கேள்வியை எனக்கு நானே திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன். பதில் கிடைக்கவில்லை...

***********

தமிழகத்தில் மிக அதிகமாக உரை எழுதப்படும் படைப்பாக திருக்குறள்தான் இருக்கும். தமிழறிஞர்கள் என்று மட்டுமல்ல, தமிழ் ஆர்வலர்களும்கூட குறளுக்கு விளக்கவுரை எழுதுவது என்பது தங்களது வாழ்நாள் பங்களிப்பு அல்லது சாதனை என்று கருதுகிறார்கள். குறளுக்கு வெண்பாவில், புதுக்கவிதையில், ஏன் குறள் வடிவில் விளக்கவுரை எழுதிப் புதுமை செய்திருப்பதாக பலர் பெருமிதத்துடன் தங்களது படைப்புகளை புத்தக விமர்சனத்துக்கு அனுப்புவதை நான் வாரந்தோறும் பார்க்கிறேன்.

திருக்குறள் குறித்து எனக்கு சந்தேகம் எழும்போதெல்லாம் உடனடித் தெளிவு பெற கைப்பேசியில் முனைவர் தெ.ஞானசுந்தரம் ஐயாவை தொடர்புகொள்வது எனது வழக்கம். திருக்குறள் குறித்த அவரது 'கற்பக மலர்கள்' ஈடு இணையற்ற படைப்பு.

நேற்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியின் தமிழ் இலக்கியப் பேரவை நிகழ்வில் கலந்துகொண்டு சென்னை திரும்பும் வழியில் அவரை கைப்பேசியில் தொடர்புகொண்டு குறளுக்கு உரை எழுதியவர்கள் குறித்துப் பாடம் கேட்டுக்கொண்டிருந்தேன். பரிமேலழகருக்கு முன்னால் மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் உள்ளிட்ட பத்து உரைகள் இருந்திருக்கின்றன. பரிமேலழகரின் உரைக்கு குறிப்பு எழுதியவர்களில் வடிவேலு செட்டியாரும்,

வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரும்தான் மிகவும் தெளிவாக, புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருப்பதாகக் கருதுகிறார் முனைவர் தெ.ஞானசுந்தரம்.

பிற்காலத்தில் பலர் உரை எழுதியிருக்கிறார்கள். அவற்றில் சுருக்கமான உரைகளில், முனைவர் தெ.ஞானசுந்தரத்தின் மதிப்பீட்டில் இரா.சாரங்கபாணியும், புலியூர் கேசிகனும் எழுதிய உரைகள்தான் மிகச் சிறப்பானவை. புலியூர் கேசிகன் 'வன்கண் குடிகாத்தல்' என்று தொடங்கும் 632-ஆவது குறளுக்கு எழுதியிருக்கும் விளக்கம்தான் மிகப் பொருத்தமானது என்றும், ஏனைய உரைகளிலிருந்து வித்தியாசப்படுகிறது என்றும் விளக்கினார் அவர்.

திருக்குறள் உரைகள் பற்றிய இந்த சிந்தனைக்குப் பின்னணி இருக்கிறது. 47-ஆவது கபிலர் விழாவுக்குச் சென்றிருந்தபோது, திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவர் தே.முருகன் எனக்கு திருக்குறள் உரை ஒன்றை அன்பளிப்பாகத் தந்தார். அதன் உரையாசிரியர் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான நாவலர் இரா.நெடுஞ்செழியன்.

அவர் நடத்திய 'மன்றம்' என்கிற இதழ் மிகச் சிறந்த இலக்கிய இதழாக வெளிவந்தது என்பது இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 'மன்றம்' இதழில் வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கிறதா?

***********

அவை நாயகன் பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய கவிதை இது. மனித வாழ்வின் புதிரை விலங்கினத்தின் மூலம் உணர்த்துகிறாரோ கவிஞர்...

எத்தனையாவது தப்படியில்

நினைவிலுள்ள

தன் காட்டை அடையும்

கூண்டில் உலவும் புலி...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT