முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 18-08-2024

அந்திமழை இளங்கோவனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி என்கிற தகவல் வந்தபோது நான் அதிர்ந்துதான் போனேன்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 12:43 PM
பகிர்:
Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 12:37 PM

அந்திமழை இளங்கோவனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி என்கிற தகவல் வந்தபோது நான் அதிர்ந்துதான் போனேன். அவர் காலமான செய்தி எனக்குத் தெரியாது. உடனடியாக மாலனையும், அசோகனையும் தொடர்பு கொண்டபோது அந்தத் தகவல் உண்மைதான் என்பது உறுதிப்பட்டது.

இளங்கோவனுடன் நெருங்கிப் பழகியவன் அல்ல என்றாலும், ஆண்டுதோறும் எனது பிறந்தநாள் அன்று அவரது வாழ்த்தும், கேக்கும் எனக்கு வந்துவிடும். அது அவர் என் மீது வைத்திருக்கும் அன்பின் அடையாளம்.

இளங்கோவன் குறித்த பல தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார் 'அந்திமழை' ஆசிரியர் அசோகன். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும்போது தனது 18-ஆவது வயதில் 'அந்திமழை' என்கிற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர் இளங்கோவன். கால்நடை மருத்துவராக சிறிது காலம் பணியாற்றிவிட்டு மாலனின் ஆசீர்வாதத்துடன் இதழியலில் நுழைந்தார் அவர்.

Advertisement

2004-ஆம் ஆண்டு மின் இதழாக அந்திமழை வெளிவந்தது. கால்நடை மருந்துத் தயாரிப்பில் பணமும் புகழும் சேர்ந்தபோது, 'அந்திமழை' அச்சு வடிவம் பெற்றது. இப்போது டிஜிட்டல் ஊடகமாக வலம் வருகிறது.

இளங்கோவன் எழுதிய 'கரன்சி காதலன்', 'ஊர் கூடி இழுத்த தேர்', 'அரசியல் கட்சிகளின் மரணம்' உள்ளிட்ட புத்தகங்கள் வெளியானதும் மறக்காமல் ஒரு பிரதியை எனக்கு கையொப்பமிட்டு அவர் அனுப்பியதை நினைவுகூர்கிறேன்.

ஆசிரியர் அசோகன் 'அந்திமழை இதழ் தொடர்ந்து வெளிவர வேண்டுமென்று அவரது குடும்பத்தினர் விரும்புகிறார்கள்' என்று சொன்னபோது எந்த அளவுக்கு அந்தக் குடும்பம் அவரது இதழியல் பணிக்கு உறுதுணையாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

------------------------------------------------------------------------------------------------

விமர்சனத்துக்கு வந்திருந்தது அந்தப் புத்தகம். கையொப்பமிட்டு அனுப்பியிருந்தார் நூலாசிரியர். தலைப்பைப் பார்த்ததுமே பிரித்துப் படிக்கத் தொடங்கிவிட்டேன். புத்தக ஆசிரியர் முனைவர் வெ.நல்லதம்பி. புத்தகத்தின் தலைப்பு 'ஒலியலை ஓவியர்கள்'. வானொலி தொடர்பான புத்தகம் என்பதைச் சொல்லியா தெரியவேண்டும்?

ஆகாசவாணியையும், சென்னை, மதுரை, நெல்லை வானொலி ஒலிபரப்புகளையும், இலங்கை வானொலியையும், விவித்பாரதியின் பினாகா கீத்மாலாவையும் நேஷனல் புரோகிராம் சாஸ்த்ரீய சங்கீதக் கச்சேரிகளையும், நேயர் விருப்பம் திரைப்படப் பாடல்களையும், வானொலி நாடகங்களையும், 'இன்று ஒரு தகவலை'யும் கேட்டு வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். அதனால்தான் இப்போதும்கூட எனக்குத் தொலைக்காட்சியில் நாட்டம் ஏற்படாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 12:39 PM

'ஒலியலை ஓவியர்கள்' என்கிற புத்தகம், முகம் தெரியாத, ஆனால் என் பிஞ்சு மனதில் சம்மணம் போட்டு அமர்ந்துவிட்ட வானொலி ஆளுமைகள் குறித்த புதிய பல செய்திகளை அள்ளித் தருகிறது. அந்த ஆளுமைகளுடன் பணியாற்றியவர் என்பதால், முனைவர் வெ.நல்லதம்பியால் ஒவ்வொருவர் குறித்தும் சுவாரஸ்யங்களை மட்டுமல்லாமல், அவர்கள் தொடர்பான நிகழ்வுகளையும் பதிவு செய்ய முடிகிறது.

'வானொலித் துறையின் வண்புகழ் மூவர்' என்று கோ.செல்வம், எஸ்.கந்தஸ்வாமி, எம்.எஸ்.கோபால் ஆகியோரையும், 'முத்திரை பதித்த முதல் இயக்குநர்கள்' என்று விக்டர் பரஞ்சோதி, எஸ்.கோபாலன், ஜி.டி.சாஸ்திரி ஆகிய மூவரையும் பதிவு செய்கிறார் நல்லதம்பி. 'வானொலிச் சித்தர்' என்று மீ.ப. சோமுவையும், 'சிம்மக் குரலார்' என்று

கே.ஜெயம்கொண்டானையும், 'வானொலி நாடகப் பிதாமகர்' என்று டி.என். சுகி சுப்பிரமணியனையும் பாராட்டித் தலைப்புச் சூட்டி இருக்கும் ஆசிரியரின் ரசனையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தமிழ்ப் புனைவு இலக்கியத்துக்கு வானொலி வழங்கிய கொடைகள் தி.ஜானகிராமனும், அகிலனும். காலையில் பல் தேய்க்க மறந்தாலும்கூட, மறக்காமல் வானொலிப் பெட்டியில் காதைத் தீட்டிக்கொண்டு அனைவரும் கேட்கும் நிகழ்ச்சியாக இருந்தது தென்கச்சி கோ.சுவாமிநாதனின் 'இன்று ஒரு தகவல்'. அவர் குறித்த பதிவை முடித்திருக்கும் விதம் நெகிழ வைக்கிறது.

படிப்பதற்கான புத்தகம் மட்டுமல்ல 'ஒலியலை ஓவியர்கள்'. பாதுகாத்து சேகரிப்பில் வைக்க வேண்டிய புத்தகமும்கூட...

------------------------------------------------------------------------------------------------

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 12:39 PM

ஒவ்வொரு முறை கடலூர் வழியாகப் பயணிக்கும்போதும், வளவ.துரையன் பொறுப்பாசிரியராகவும், முனைவர். த.பாஸ்கரன் துணை ஆசிரியராகவும் இருந்து வெளிக் கொணரும் 'சங்கு' தனிச்சுற்று இதழின் அலுவலகம் சென்று அவர்களைச் சந்திக்க வேண்டும் என்று திட்டமிடுவேன். ஆனால் கடலூரைக் கடக்கும்போது, ஒன்று நான் காரில் தூங்கிக் கொண்டிருப்பேன் அல்லது இரவு நேரப் பயணமாக இருக்கும். அதனால், கடந்த வாரப் பயணத்திலும் தவற விட்டேன்.

அவர்களை எதற்காக சந்திக்க விரும்புகிறேன் என்று சொல்ல வேண்டாமா? இதழியல் ஆர்வத்தாலும், படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும் என்கிற முனைப்பாலும் உந்தப்பட்டு 'சங்கு' இதழை அவர்கள் வெளிக்கொணர்கிறார்கள் என்பதை, அந்தக் காலாண்டிதழைத் தொடர்ந்து படித்து வரும் என்னால் உணர முடிகிறது. மிகுந்த சிரமத்துக்கு இடையில்தான் இதுபோன்ற சிற்றிதழ்கள் வெளிக்கொணரப்படுகின்றன. அவற்றை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் ஒவ்வோர் எழுத்தாளரின் கடமை...

என்னை விடுங்கள்... நாஞ்சில் நாடன் எத்துணை பெரிய எழுத்தாளர். இந்த ஆண்டு விஜயா வாசகர் வட்டம் வழங்கும் 'கி.ரா' விருது பெறுபவர். நடப்பு காலாண்டிதழில் அவர் கவிதை எழுதுகிறார் என்றால், எவ்வளவுப் பெரிய மனது அவருக்கு...

நாஞ்சில் நாடன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் ஏதாவது ஒரு சிற்றிதழை ஊக்கப்படுத்த முன்வந்தால் விளம்பரம் பெறவும், சந்தா சேர்க்கவும் உதவும். இன்றைய சூழலில் சிற்றிதழ்கள் வாழ்ந்தால்தான், தமிழ் வாழும்...

'சங்கு' இதழில் நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும்

'குமரன் பாடு' என்கிற கவிதை இது-

சூர பதுமர் பலருண்டு தேயத்தே

வெட்ட வெட்டத் தலை முளைக்கும்

அவர் தாயார் முக்கி முக்கித் தள்ள

படை பெருகும்

குமரன் முருகன் சண்முகன் சரவணன்

வேலன் ஆறுமுகன் கார்த்திகேயன்

சுப்பிரமணியன் கைகளில்

வாக்குச் சீட்டெனும் அட்டைக் கத்தி

மட்டுமே ஆயுதம்

படுபவர் எவர்

சூரனோ முருகனோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.