தமிழ்மணி

கனவில் வந்தவனுக்கு தண்டனை

முனைவா் கி. இராம்கணேஷ்

கிள்ளிவளவன் என்ற சோழ மன்னன் ஊரார் பார்க்க தெருவில் உலா வந்தான். தலைவியொருத்தி அவனைக் கண்டு தனது மனதைப் பறிகொடுத்தாள். சோழன் மீது அவளுக்குக் காதல் ஏற்பட்டது. அவள் சிந்தனை ழுழுவதும் மன்னன் நிரம்பியிருந்தான்.

பகல் பொழுதில் மட்டுமல்லாமல் இரவில் உறக்கத்தின் போதும் மன்னனின் நினைவு அவளை வாட்டி வதைத்தது. ஒருவழியாக உறங்கியவளின் கனவிலும் சோழனே வந்தான். கனவில் வந்தவன் என்ன செய்தான் என்பதைப் பின்வருமாறு தோழியிடம் பாடுகிறாள்.

தானைகொண் டோடுவ தாயிற்றன் செங்கோன்மை
சேனை யறியக் கிளவேனோ - யானை
பிடிவீசும் வண்டடக்கைப் பெய்தண்டார்க் கிள்ளி
நெடுவீதி நேர்ப்பட்ட போது    
(முத்தொள்ளாயிரம்)

"தோழியே! தன்னைத் தேடிவந்த பரிசிலருக்கு ஆண் யானைகளையும் பெண்யானைகளையும் அதிகமாகக் கொடுக்கின்ற வளமான பெரிய கையினையும் பூக்கள் மிகுதியாக வைத்துக் கட்டப்பெற்ற குளிர்ந்த மாலையினையும் உடைய கிள்ளவளவன் என்ற மன்னனுடைய செங்கோல் முறைமை எப்படியிருக்கிறது என்பதைப் பார்த்தாயா?

இரவில் கனவில் வந்த அவன் என்னுடைய ஆடையைக் கவர்ந்துகொண்டு ஓடிப்போயினான். நானும் அவனைப் பிடிக்க முயற்சி செய்தேன். ஆனால் அவன் என்னிடம் அகப்படாமல் தப்பிவிட்டான். அவன் இப்படிச் செய்தது முறையா?

நாளை நமது நெடிய வீதியில் சோழன் உலா வரும்போது அவன் செய்த செயலை, உறுதியாக அவனது படை வீரர்களும் அறியும்படியாக உரக்கச் சொல்லாமலா விடுவேன்? கட்டாயம் சொல்லிவிடுகிறேன் பார்' என்கிறாள்.

கனவில் மன்னன் செய்த செயலை நனவில் படைவீரர்கள் முன்பு சொல்லி அவன் பெருமையை அழித்து விடும் தண்டனையை அளிப்பதாகக் கூறுகிறாள் தலைவி. மன்னனின் தவறு இதில் எதுவுமில்லை. மங்கை கொண்ட காதல் அவளைப் பிதற்ற வைக்கிறது. காதல் எல்லை மீறிப்போனால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இப்பாடல் தெற்றென உணர்த்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ம் கட்டத் தேர்தல்: மகனுடன் சென்று வாக்கு செலுத்திய சச்சின் டெண்டுல்கர்

தந்தையுடன் வாக்களித்த நடிகை குஷி கபூர்!

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

ரூ.263 கோடி வரி மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை!

SCROLL FOR NEXT