இந்த வாரம் கலாரசிகன் - 02-06-2024
சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக அரங்க. மகாதேவன் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதியரசர் அரங்க. மகாதேவன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சங்க இலக்கியத்திலும், சமய இலக்கியத்திலும் ஒருசேர ஆழங்காற்பட்ட புலமை கொண்ட ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, இடைக்கால பொறுப்புப் பதவியாகவே இருந்தாலும்கூட, உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர் விரைவில் முழு அதிகாரத்துடன் தலைமை நீதிபதியாகவோ, உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராகவோ உயர வேண்டும் என்று தமிழ் மேல் காதல்கொண்ட அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இலக்கியவாதிகளான பலர் இருந்திருக்கிறார்கள்; இருந்து வருகிறார்கள். கம்பனை நேசிக்கும் நீதியரசர் ஆர்.சுரேஷ்குமாரும், பாரதியை சுவாசிக்கும் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனும் குறிப்பிடப்பட வேண்டியவர்களில் சிலர்.
Advertisement
நீதிபதிகள் மு.மு. இஸ்மாயில், எஸ்.மகாராஜன், வெ.இராமசுப்பிரமணியன் போன்றவர்களின் கம்பன் கழக உரைகள் இலக்கிய ஆவணப் பதிவுகள்.
தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் நீதியரசர் அரங்க.மகாதேவன் வழங்கும் ஒவ்வொரு தீர்ப்பும் கவனத்தை ஈர்ப்பவை என்பது மட்டுமல்ல, சமுதாயத்தின் சிக்கல்களுக்குத் தீர்வை வழங்குவதாகவும் இருப்பவை. தவறுகளை தவறாமல் தட்டிக்கேட்பதும், விதிமுறை மீறல்களை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுவதும், சாமானியனுக்கு நெறி வழுவா நீதி கை நழுவாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும் நீதியரசர் அரங்க.மகாதேவனின் தீர்ப்புகளின் தனித்துவங்கள்.
நீதியரசர் அரங்க. மகாதேவனின் நீதியராயம் முன்பு வந்த எஸ்.ராஜரத்தினம் தொடுத்த வழக்கில், 2016 ஏப்ரல் 26-ஆம் நாள் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. பள்ளிப் பாடத் திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் திருக்குறள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது அந்த மனுதாரரின் கோரிக்கை. அந்த வழக்கில் நீதியரசர் அரங்க.மகாதேவன் வழங்கிய தீர்ப்பு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்கதாகப் போற்றப்படுகிறது.
அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், சாணக்கியர், நெல்சன் மண்டேலா, விக்டர் ஹ்யூகோ, சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட பலரை மேற்கோள் காட்டி வழங்கப்பட்ட அந்த தீர்ப்பே திருக்குறள் குறித்த ஒரு தலைசிறந்த ஆய்வு எனலாம்.
பள்ளிப் பாடத் திட்டத்தில் தனிப் பாடமாக திருக்குறள் இருக்க வேண்டும் என்றும், அடுத்த கல்வி ஆண்டிலிருந்து அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் வழங்கிய உத்தரவு நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வெளியான அந்த தீர்ப்பு தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.
குறள்நெறி சார்ந்த நீதியை நிலை நாட்டும் நீதியரசர் அரங்க.மகாதேவனின் தீர்ப்புகள் உச்சநீதிமன்ற தீர்ப்புகளாக நாடுதழுவிய அளவில் வெளிவரும் நாளை என்னைப் போல பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
-----------------------------------------------------------------------------------------------
வழக்குரைஞர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், சமூக சிந்தனையாளர், வரலாற்று ஆய்வாளர், பொதுவுடைமைவாதி, விவேகானந்தரையும் பாரதியையும் இளைஞர்களிடம் கொண்டுசெல்ல அயராது பாடுபடும் போராளி - இப்படிப்பட்ட பன்முக ஆளுமை த.ஸ்டாலின் குணசேகரனாக மட்டுமே இருக்க முடியும். அவரது மக்கள் சிந்தனைப் பேரவையும், ஈரோடு புத்தகத் திருவிழாவும் ஏற்படுத்தும் அதிர்வலைகள் இளைய தலைமுறையினரை புதிய பாதையில் இட்டு செல்வதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஸ்டாலின் குணசேகரனின் "விடுதலை வேள்வியில் தமிழகம்' அசாதாரணமான வரலாற்றுப் பதிவு. தினமணியின் இளைஞர்மணி இணைப்பில் அவர் எழுதிய "இளைய பாரதமே எழுக!' என்கிற தொடர் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது.
ஸ்டாலின் குணசேகரன் அவ்வப்போது வானொலியிலும், தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் கொடுத்த நேர்காணல்கள் வே.குமரவேல் என்பவரால் தொகுக்கப்பட்டு புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. அரசியல், இலக்கியம், சினிமா, சமூகம், வரலாறு என்று பல்வேறு கேள்விகளுக்கு ஸ்டாலின் குணசேகரன் அளித்திருக்கும் பதில்களும் விளக்கங்களும் சுவாரசியமானவை.
"அன்று பெயரில் ஜாதியிருந்தது; மனதில் இல்லை!' என்று தொடங்கி அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு பேட்டியும் சிந்தனைக்கு தீனி போடுபவை. சில பேட்டிகள் நாமே நேரிடையாக ஸ்டாலின் குணசேகரனிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. இடதுசாரி இயக்கத் தலைவர்களான கே.டி.ராஜு, கே.பாலதண்டாயுதம்,
எம்.கல்யாணசுந்தரம், ஏ.எம்.கோபு, ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், கே.டி.கே.தங்கமணி ஆகியோர் குறித்த அவரது பதிவுகளும், ஜெயகாந்தன், ஜீவா, தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோர் பற்றிய தகவல்களும் இவரது நேர்காணல்களில் நான் கண்டெடுத்த முத்துக்கள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் "பார்வைக்கும் பகிர்தலுக்கும்' என்கிற குறிப்புடன் கவிஞர் தவசி எனக்கு அனுப்பி வைத்த அவரது தொகுப்பு இரண்டு "சிக்ஸர்களின் கதை'. அதில் இருந்தது "கிழக்கே போனவர்கள்' என்கிற இந்த கவிதை.
ஊரைவிட்டு ஓடிப் போன
பாஞ்சாலியும்
பரஞ்சோதியும்
பட்டணத்தில்
செளகரியமாக வசித்து வருவதாக
தகவல் வந்துள்ளது
மேலும் விவரங்கள் விழைவோர்
பாரதிராஜாவை
தொடர்பு கொள்ளவும்.