தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 12-05-2024

தினத்தந்தி நாளிதழின் முன்னாள் குழும ஆசிரியர் காலமானார்

கலாரசிகன்

தினமணி 'மாணவர் மலர்' குறித்த கலந்துரையாடலுக்காக சென்ற வாரம் நான் கோவை சென்றிருந்தபோது அந்த அதிர்ச்சியான தகவல் கிடைத்து. தினத்தந்தி நாளிதழின் முன்னாள் குழும ஆசிரியர் ஐ.சண்முகநாதன் காலமானார் என்ற தகவலை எனக்கு முதலில் தெரிவித்தது எங்கள் பகுதி சென்னை மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன்.

எனது வீட்டிற்கு அருகில் அதே முகப்பேர் பகுதியில்தான் வசித்து வந்தார் பெரியவர் சண்முகநாதன். முழுமையான வாழ்க்கை வாழ்ந்து, முதிர்ந்த அகவை 90 எட்டி விடைபெற்றிருக்கும் அந்த பத்திரிகையாளரின் இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாத ஒன்று என்பதில் இருவேறு கருத்துகள் இருந்துவிட முடியாது.

தினமணி நாளிதழுக்கு எப்படி ஒரு ஏ.என்.சிவராமனோ, அதேபோல தினத்தந்தி நாளிதழுக்கு ஒரு சண்முகநாதன். அவர்கள் இருவருமே உருவாக்கி வைத்த மரபின் அடிப்படையிலும் வகுத்த பாதையிலும்தான் இரண்டு நாளிதழ்களும் இன்றுவரை பயணிக்கின்றன என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

பெரியவர் சண்முகநாதன் தினத்தந்தியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தபோது எனக்கு வயது 1. தனது 18-ஆவது வயதில் தினத்தந்தியின் மதுரை பதிப்பில் சி.பா.ஆதித்தனாரால் உதவி ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சண்முகநாதன், அந்த நாளிதழின் பல்வேறு பதிப்புகளில் பணியாற்றி, பதவி உயர்வுகள் பெற்று, சென்னை தலைமை இடத்தில் தினத்தந்தியின் குழும ஆசிரியராக உயர்ந்தார் என்றால், அதன் பின்னால் இருக்கும் உழைப்பும் நிர்வாகத்திடம் அவருக்கு இருந்த விசுவாசமும் நிர்வாகத்துக்கு அவரிடம் இருந்த நம்பிக்கையும், எல்லாவற்றுக்கும் மேலாக இதழியலில் அவரது ஆழங்காற்பட்ட அனுபவமும்தான் காரணம்.

தினத்தந்தி நாளிதழில் அவர் எழுதிய "வரலாற்று சுவடுகள்' என்கிற தொடர், காலங்கள் கடந்தும் அவரது பெயரை நிலைநிறுத்தும். "ஒரு தமிழனின் பார்வையில் 20-ஆம் நூற்றாண்டு வரலாறு", "கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம்வரை' என்பவை உட்பட 20-க்கும் மேற்பட்ட படைப்புகள் சண்முகநாதன் என்கிற எழுத்தாளர் தமிழுக்கு வழங்கியிருக்கும் கொடைகள்.

வெளியூரில் இருந்ததால் அவரது குடும்பத்தாருக்கு எனது அஞ்சலியைத் தெரிவிக்கும்படி, தினத்தந்தியின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாரை தொடர்புகொண்டபோது, அவர் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். ஐயா ஆதித்தனாரால் அந்த நாளிதழில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நடைமுறையைப் பற்றி அவர் சொன்னது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

உதவி ஆசிரியர்களாக அந்த நாளிதழில் பணிக்குச் சேரும் இளைஞர்களை, அதன் ஆசிரியர் அல்லது செய்தி ஆசிரியர் கரம் பிடித்து அழைத்துச் சென்று, அவரவர் இடத்தில் அமர்த்தி வாழ்த்துவார்கள் என்பதுதான் அந்தத் தகவல். இன்றைய நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமார் அந்த வழக்கப்படி, குழும ஆசிரியராக இருந்த சண்முகநாதனால் கரம்பிடித்து, பணியில் அமர்த்தி ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை அவர் என்னிடம் தெரிவித்தபோது நெகிழ்ந்துவிட்டார்.

ஐ.சண்முகநாதன் என்கிற இதழியல் ஆலமரத்தின் விழுதுகள் விரிந்து படர்ந்து அவரது பெயரை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன.

---------------------------

தினமணிக்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர் இரா.கதிரவன். சமீப காலமாக அவரது கட்டுரைகள் ஏனோ வருவதில்லை. ஏனென்று தெரியவில்லை. அவர் தினமணி நாளிதழில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து "யாம் துஞ்சலமே' என்ற தலைப்பில் புத்தக வடிவம் ஆக்கி இருக்கிறார். அந்தப் புத்தகம் நண்பர் "டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்' வேடியப்பனால் எனக்கு அனுப்பித் தரப்பட்டிருந்தது.

தினமணி கட்டுரைகள் மட்டுமல்லாமல் இரா.கதிரவன் எழுதிய சில இலக்கியக் கட்டுரைகளும் அதில் ஒரு பகுதியாக இடம்பெற்றிருக்கின்றன. தனித்தனி புத்தகங்களாக அவை வெளியிடப்பட்டிருந்தால் இன்னும் கூட நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, அந்த இலக்கியக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஆழ்ந்த இலக்கிய ஆர்வத்தின் வெளிப்பாடு என்பதை என்னால் தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை.

பொதுவாக கல்வித் துறையைச் சேர்ந்த தமிழாசிரியர்கள் மற்றும் மாணவர்கள்தான் செவ்விலக்கியத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பது வழக்கம். ஏனையோர் அதிகபட்சம் குறள், சிலம்பு, கம்பகாதை, சமய இலக்கியங்கள் என்பவற்றுடன் நின்றுவிடுவார்கள். 35 ஆண்டுகால பொறியாளர் - மேலாண்மைப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒருவர் சங்க இலக்கியத்தில் காதல் கொண்டிருப்பது அரிதிலும் அரிது.

புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, முத்தொள்ளாயிரம், சிலப்பதிகாரம் என்று பாடல்களைத் தேர்ந்தெடுத்து, சுவாரசியமாக சாமானியர்களும் அவற்றைப் படித்து ரசிக்கும் விதத்தில் எடுத்தியம்பியிருக்கும் இரா.கதிரவனின் இலக்கிய ரசனையும் எழுத்து வித்தகமும் ரசிக்க வைக்கிறது.

இன்னொரு பகுதியாக இணைக்கப்பட்டிருக்கும் 31 கட்டுரைகளில் 29 தினமணியில் வெளியானவை. அவற்றில் ஒருசில கட்டுரைகளைத் தவிர, ஏனைய கட்டுரைகள் பிரசுரத்திற்கு முன்னால் எனது பார்வைக்கு வந்தவை. ஒருசில என்னால் பத்தி பிரிக்கப்பட்டு, வார்த்தைகள் செப்பனிடப்பட்டவை. அதை ஆங்கிலத்தில் "காப்பி எடிட்டிங்' என்று சொல்வார்கள். அப்படிப் படிக்கும்போதே இரா.கதிரவனின் எழுத்தில் பொதிந்திருக்கும் சமூக அக்கறையையும் அவை வெளிப்படுத்தும் அறச் சீற்றத்தையும் ரசித்தவன் நான். அந்தக் கட்டுரைகளைப் புத்தக வடிவில் படிக்கும்போது அவை புதிய பரிமாணம் எடுக்கின்றன.

----------------------------------------

கவிஞர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் விடாப்பிடியாகத் தொடர்ந்து வெற்றிகரமாக வெளிக்கொணரும் மாத இதழ் "கவிதை உறவு'. அதில் கவிஞர் தங்கம் மூர்த்தி எழுதும் தொடர் "கவிதை நெடுஞ்சாலை'. அதில் தன்னைக் கவர்ந்த சக கவிஞர்களின் கவிதைகளை இணைத்து, அவர்கள் குறித்த தனது பார்வையைப் பதிவு செய்து வருகிறார். அப்படி அவர் பதிவு செய்திருக்கும் 25 கவிஞர்கள் குறித்த கட்டுரைகள் "சொற்கள் மீட்டிய மாய இசை' என்கிற தலைப்பில் நூல் வடிவம் பெற்றிருக்கிறது.

அதை எனக்கு அனுப்பித் தந்திருந்தார் கவிஞர் தங்கம் மூர்த்தி. அதில் இடம் பெற்றிருக்கும் பல கவிஞர்களின் கவிதைகள் "இந்த வாரம்' பகுதியில் இடம் பெற்றவை. அந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது கோ.வசந்தகுமாரன் எழுதிய

இந்தக் கவிதை-

புன்னகையைக்

கழித்து விட்டால்

மிருகத்தின் சாயல்

வந்து விடுகிறது

மனிதனுக்கு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT