தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 17-11-2024

குறுந்தொகையை அகற்றி நிறுத்தி செம்மொழித் தமிழ் குறித்துப் பேச முடியாது.

DIN

பலரது இலக்கிய ஆர்வத்துக்கு வடிகாலாக அமைவது சிற்றிதழ்கள் என்று இதற்கு முன்பும் பலமுறை கருத்து தெரிவித்திருக்கிறேன். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் சுப்பிரமணியபுரம் விஜயபுரம் வடக்கிலிருந்து கடந்த 46 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது 'தாழம்பூ' என்கிற இருமாத இதழ். கோ.மாதவி, கிரிஜாமணாளன் இருவருடன் எம்.எஸ்.கோவிந்தராஜன் ஆசிரியராக இந்த இதழை வெளிக்கொணர்கிறார்.

நவம்பர் - டிசம்பர் 2024 'தாழம்பூ' இதழ், 'இலக்கிய ராஜரிஷி ' வல்லிக்கண்ணன் 104-ஆவது பிறந்த நாள் சிறப்பிதழாக வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. கதைகள், கவிதைகளுடன் சிற்றிதழின் பங்களிப்புக் குறித்த வல்லிக்கண்ணனின் கருத்து, 1999-இல் 'தாழம்பூ' இதழுக்கு அவர் அளித்த பேட்டி, கல்கியின் நாவல்கள் குறித்த வல்லிக்கண்ணனின் கட்டுரை உள்ளிட்டவை சிறப்பிதழில் இடம் பெற்றிருக்கின்றன.

கையெழுத்துப் பிரதியாகத் தொடங்கிய 'தாழம்பூ', 46 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கையெழுத்து பாணியிலேயே தொடர்கிறது. கணினி தொழில்நுட்பத்துக்கு மாறினால் உள்ளடக்கத்தை இரண்டு மடங்கு அதிகப்படுத்தலாமே; புகைப்படங்களை அதிகரிக்கலாமே. கோவிந்தராஜன் ஏன் தயங்குகிறார்?

========

தில்லியில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில், இலக்கியத்துக்கான ராம்நாத் கோயங்கா வாழ்நாள் சாதனையாளர் விருது, ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்டுக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நானும் சென்றிருந்தேன். நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்தியாவின் தலைமை வழக்குரைஞர் (அட்டர்னி ஜெனரல்) ஆர்.வெங்கடரமணியை சந்திக்க அவரது வீட்டுக்குப் போயிருந்தேன்.

பிரபல வழக்குரைஞரும், இப்போது இந்தியாவின் தலைமை வழக்குரைஞருமான ஆர்.வெங்கடரமணி, ஒரு சிறந்த ஆங்கிலக் கவிஞரும்கூட என்பது அப்போதுதான் தெரிந்தது. புதுச்சேரியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் இந்தியாவின் தலைமை வழக்குரைஞர் என்பது பெருமைக்குரியதாக இருந்தது. அவர் ஒரு கவிஞரும்கூட எனும்போது அவர் குறித்த மரியாதை மேலும் பல மடங்கு உயர்ந்து விட்டது.

அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியின் கவிதைகள் 'ரோஸஸ் வித்அவுட் தோர்ன்ஸ்' (முள்ளில்லாத ரோஜாக்கள்) என்கிற பெயரில் தொகுக்கப்பட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து சமீபத்தில் பணி ஓய்வு பெற்றிருக்கும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூடால் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கவிதைத் தொகுப்பை எனக்கு அவர் அன்பளிப்பாகத் தந்தபோது, அந்தத் தலைப்பு என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது. அவரே அதற்கு விளக்கமும் தந்தார்.

தொழுநோயாளிகளுக்குப் பணிவிடை செய்யும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சமூக சேவகர் பாபா ஆம்தேவை சந்திக்கச் சென்றபோது, அவருடைய தோட்டத்தில் இருவரும் காலாற நடந்து கொண்டிருந்தார்களாம். அப்போது பாபா ஆம்தே சொன்னாராம் - ''இந்த ரோஜாக்களுக்கு முள்ளில்லாமல் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்? இங்கிருக்கும் தொழுநோயாளிகள் அவற்றைப் பறிக்க முடியாமல் முட்கள் தடுக்கிறதே...''

யாருக்கும் எந்த வேதனையும் இல்லாத நல்வாழ்வு அமைய வேண்டும் என்கிற பாபா ஆம்தேயின் உயரிய சிந்தனைதான் தனது கவிதைத் தொகுப்புக்கு 'முள்ளில்லாத ரோஜாக்கள்' என்று தலைப்பு வைக்கக் காரணம் என்றார் கவிஞர் ஆர்.வெங்கடரமணி!

========

குறுந்தொகையை அகற்றி நிறுத்தி செம்மொழித் தமிழ் குறித்துப் பேச முடியாது. தமிழாய்வு செய்யும் அறிஞர்கள் யாராக இருந்தாலும், குறுந்தொகையால் கவரப்படாதவர்களாக இருந்ததில்லை.

குறுந்தொகைக்கு பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் எழுதிய உரைகள் காலச்சூழலில் கிடைக்காமல் போயின. அதன் விளைவாக குறுந்தொகைக்கு உரை எழுதிப் பதிப்பிக்கும் முயற்சிகள் தொடங்கின. 1915-இல் திருக்கண்ணபுரம் திருமாளிகைச் செüரிப் பெருமாள் அரங்கன் என்பவர் எழுதிப் பதிப்பித்த குறுந்தொகையின் மூலம், உரைதான் முதல் பதிப்பாகும்.

பலரும் அதைத் தொடர்ந்து உரைகளும், பதிப்புகளும் வெளியிடத் தொடங்கினர். 1915 முதல் 1964 வரையிலான அரை நூற்றாண்டில் வெளி வந்த 11 பதிப்புகளில் காணப்படும் பாயிரங்களைத் தொகுத்து பதிப்பித்திருக்கிறார் முனைவர் ஆ.மணி. திருமாளிகைச் செüரி பெருமாள் அரங்கன், உ.வே.சாமிநாதையர், பொ.வே.சோமசுந்தரனார் ஆகிய மூவரும் செய்த உரைகள் மட்டுமே முழுமையானவை.

முனைவர் ஆ.மணி வெளிக்கொணர்ந்திருக்கும் குறுந்தொகை பாயிரங்கள் முதலாவது தொகுதியில் உள்ளவாறே தரப்பட்டிருக்கின்றன. குறுந்தொகை பதிப்புகளின் முதல் 50 ஆண்டுகளில் உ.வே.சாமிநாதையர் செய்த குறுந்தொகை உரை மட்டுமே 1937, 1947, 1955 என்று மேலும் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மூன்று பதிப்புகளாக வெளிந்துள்ளன. ஏனைய அனைத்துப் பதிப்புகளுமே ஒருமுறை மட்டுமே பதிப்பாகியுள்ளன.

குறுந்தொகைக்கு உரை எழுதிப் பதிப்பிக்க ஒவ்வொருவரும் எத்துணை சிரமங்கள் மேற்கொண்டனர் என்பதை ஆசிரியர் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. தனது ஆசிரியரையும், இந்த முயற்சி வெற்றி பெற வழிநடத்திய தமிழறிஞர்களையும், பேராசிரியப் பெருமக்களையும் ஒருவர் விடாமல் குறிப்பிட்டு நன்றி செலுத்தியிருக்கும் முனைவர் ஆ.மணியின் முயற்சி பாராட்டுக்குரியது.

========

கவிஞர்களுக்கு முதுமை வரலாம்; ஆனால் அவர்களது எழுத்து என்றென்றும் இளமையாகவே இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் படைப்புகள். அவரது சமீபத்திய படைப்பு 'நறிவிலி'. சிற்பி இலக்கிய விருது விழாவில் வெளியிடப்பட்ட அந்த கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது 'புள்ளிக் கணக்கு' என்கிற இந்தக் கவிதை -

நண்பர் சொன்னார்:

'படுத்துறங்கும் போது

உங்கள் தோற்றம்

கேள்விக் குறி போல் இருக்கிறது'

சிந்தித்துப் பார்த்தேன்

அப்படியெனில்

நின்றால் ஆச்சரியக் குறி

நடந்தால் காற்புள்ளி

உட்கார்ந்தால் முற்றுப் புள்ளி

அமர்ந்தபடி சோம்பல் முறித்தால்

அரைப் புள்ளி ஆவேனோ?

சமூகத்தில்

பெரும் புள்ளியாவதற்கு

என்னதான் செய்யவேண்டும்

நான்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

SCROLL FOR NEXT