தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 20-10-2024

நெல்லை வழக்குரைஞர் முனைவர் சு.பாண்டியன் குறித்து இதற்கு முன்பும் ஒருமுறை எழுதியிருந்தேன்.

கலாரசிகன்

நெல்லை வழக்குரைஞர் முனைவர் சு.பாண்டியன் குறித்து இதற்கு முன்பும் ஒருமுறை எழுதியிருந்தேன். தவறு என்று அவருக்குப் பட்டால் அதைத் தட்டிக் கேட்பது என்பதில் தயக்கம் காட்டாதவர். கவிஞர் பெ.சிதம்பரநாதன் எழுதிய நடுப்பக்கக் கட்டுரை ஒன்று குறித்து அவருக்குக் கடுமையான கருத்து வேறுபாடு. எழுத்தில் தனது ஆத்திரத்தை எல்லாம் கடிதமாகக் கொட்டித் தீர்த்துவிட்டார்.

'தப்பிதங்களால்தான் தமிழருக்குப் பெருமையா?' என்கிற அந்தக் கட்டுரையில் 'குடிமக்கள் காப்பியம்' என்று போற்றப்படும் சிலப்பதிகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள்தான் முனைவர் சு.பாண்டியனின் கடிதத்துக்குக் காரணம். 'கண்ணகி கோயில் சிலைக்கு இமயத்தில் இருந்து 'பாறையை' எடுத்து வந்தான் சேரன் செங்குட்டுவன்'' என்கிற வரிகள் அவரது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியது.

சிலை அமைப்பதற்குப் பாறை பயன்படாது; அதற்குக் கருங்கல்தான், அதுவும் தகுந்த கருங்கல்தான் பயன்படுத்தப்படும் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதற்கு சிலம்பிலிருந்து பல வரிகளை மேற்கோள் காட்டுகிறார் முனைவர் சு.பாண்டியன்.

முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று, இப்போது வழக்குரைஞராக இருக்கும் முனைவர் சு.பாண்டியன் ஜோதிடத்திலும் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது அவரது தன்விவரக் குறிப்பில் இருந்து தெரிகிறது. சிலம்பு குறித்தும் அதில் பிழை ஏற்படலாகாது என்பதிலும் அவர் முனைப்பாக இருப்பதில் நியாயம் இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், பட்டப் படிப்பு முடித்து காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். தமிழக காவல் துறையில் சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றி தலைமைக் காவலராக உயர்ந்தவர்.

காவல் துறையில் பணியாற்றிக் கொண்டே தமிழ், ஜோதிடவியல், சைவசித்தாந்தம், கல்வியியல், சட்டம், உளவியல் உள்ளிட்ட பல படிப்புகளில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார் என்பதுடன் நின்றுவிடவில்லை இவரது சிறப்பு. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தான் பிறந்த முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியிலேயே முதுகலைத் தமிழாசிரியராகவும் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர் அவர்.

சிலப்பதிகாரம் படைக்கப்பட்டு ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், சிலப்பதிகாரத்தின் பதிகத்தைப் பாடியது யார் என்கிற கேள்விக்கு பதில் தேடுவதுதான் அவரது முனைவர் பட்ட ஆய்வாக இருந்தது. அந்த ஆய்வை 'சிலம்பின் பதிகம் பாடிய பாவலன்' என்ற பெயரில் புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார் முனைவர் சு.பாண்டியன்.

'உரைசால் அடிகள் அருள மதுரைக் கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்'' என்பதைக் குறிப்பிட்டு, மேலும் தொடர்கிறார். சேர மன்னர்கள் தமிழார்வம் மிக்கவர்கள் என்பதைப் பதிற்றுப்பத்து விளக்குகிறது. தமிழ் மன்னர்கள், தமிழில் புலவர்களாகவும் இருந்திருக்கின்றனர். சேர நாட்டினர் பதிகம் எழுதும் மரபுடையவர்கள். அதனால்-

சிலம்பின் பதிகத்தைப் பாடியது சேரன் செங்குட்டுவன் என்று கருதுவதற்கு இடமிருக்கிறது என்று தனது ஆய்வை முடிக்கிறார் அவர். முனைவர் பாண்டியனின் கடிதத்தையும் படித்தேன்; அவர் அனுப்பித் தந்த புத்தகத்தையும் ரசித்தேன்!

---------------------------------------------

மகாகவி பாரதியார் குறித்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் ஆய்வுகளும் எழுதி வெளிக்கொணர்ந்திருக்கும் முனைவர் சொ.சேதுபதியின் சமீபத்திய அருட்கொடை 'மகாகவி பாரதி வரலாறு'. எத்தனையோ பேர் எழுதிவிட்ட மகாகவியின் வரலாற்றை முனைவர் சொ.சேதுபதி தனது பங்குங்கு எழுதி இருக்கிறார் என்று நினைத்துவிடாதீர்கள். இது வேறு மாதிரியான, முன்மாதிரி முயற்சி!

பாரதியாரின் சுயசரிதையில் தொடங்கி, பாரதியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து அவருடன் நெருங்கிப் பழகிய 10 பேர் பதிவு செய்த வரலாற்று நூல்களையும் இணைத்துத் தொகுத்திருக்கிறார் சொ.சேதுபதி. நாவலர் சோமசுந்தர பாரதியார், வி.சக்கரைச் செட்டியார், வ.ரா., ஆக்கூர் அனந்தாச்சாரி, செல்லம்மா பாரதி, வ.உ.சி., பாரதிதாசன், ரா.கனகலிங்கம், யதுகிரி அம்மாள் உள்ளிட்டவர்கள் எழுதிய பதிவுகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

'பாரதியாரின் விரிவான பூரணமான சரித்திரத்தை ஒருவரே எழுதிவிட முடியாது. அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் சிலர் ஒருங்கு சேர்த்தே அதனை எழுத வேண்டும். அவரவர்களுக்குத் தெரிந்த விஷயங்களை அவரவர்கள் எழுதி, அவ்வாறு எழுதியவற்றை ஒருங்கு திரட்டி ஒரு நூலாக வெளியிட வேண்டும். அதற்குரிய காலம் விரைவில் வருமென்று நம்புகிறேன்'' என்று ஆக்கூர் அனந்தாச்சாரியின் 'கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதி சரிதம்' நூலுக்கான சிறப்புரையில் பரலி சு.நெல்லையப்பர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதற்கான காலத்தை எதிர்பார்த்துத் தமிழகம் இத்தனை காலம் காத்துக் கிடந்தது. 1882 டிசம்பர் 11 } இல் தொடங்கி, 1921 செப்டம்பர்11}இல் நிறைவுற்ற பாரதியின் வரலாற்றை எழுதிய 11 அறிஞர்களின் படைப்புகளைத் திரட்டி ஒரு புத்தகமாகத் தொகுத்திருக்கிறார் சொ.சேதுபதி. கவிதா பப்ளிகேஷன்ஸ் சேது சொக்கலிக்கம் அகவை 75 ஆண்டு நிறைவு செய்த வைரவிழாவின் நினைவாக தேவகோட்டை பாரதி சங்கத்தின் பாரதி விழாவில் வெளியிடப்பட்டிருக்கிறது இந்தத் தொகுப்பு.

'மகாகவியின் திருவுருவையும், திருவுள்ளத்தையும் அணு அணுவாக வாசித்தும் நேசித்தும் எழுதப்பட்ட அரிய நூல்களை ஒரு பெருந்தொகுப்பாக வழங்கும் கிருங்கை சேதுபதிக்குத் தமிழுலகும் பாரதியின் அன்புப் பேருலகும் காலமெல்லாம் கைகூப்பி, நன்றி சொல்லும்'' என்கிற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் அணிந்துரை வரிகளை நான் கடன் வாங்க விழைகிறேன்.

காலம் கடந்து பாரதியின் பெருமையை நிலைநிறுத்தும் அரியதோர் ஆவணப் பதிவு முனைவர் சொ.சேதுபதி தொகுத்திருக்கும் 'மகாகவி பாரதி வரலாறு'.

---------------------------------------------

என்னதான் சொல்ல வருகிறார் என்று நினைத்தபடியே அந்தக் கவிதையைப் படித்தேன். கடைசி வரியைப் படித்ததும் வாய்விட்டு சிரித்து விட்டேன். விமர்சனத்துக்கு வந்திருந்த ச.ஆனந்த குமாரின் 'மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள்' என்கிற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருந்தது, அந்தத் தலைப்பு இல்லாத கவிதை.

விடாமல் உதை பட்டுக்

கொண்டேதான் இருந்தது..

ஒவ்வொரு முறையும் சுற்றியிருக்கிற

ரசிகர்களின் கைதட்டலில்

அதிர்ந்தது அரங்கம்..

போட்டி முடிந்தவுடன்

இரு அணிகளுக்கும் பரிசுகள்..

உதைபட்ட கால்பந்து கவனிப்பாரற்று

மூலையில் அநாதையாய்..

எனக்கு கட்டை விரலில் மை தீட்டிய

சாமானியன் நினைவிற்கு

வந்து தொலைத்தான்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

SCROLL FOR NEXT