கம்பனின் தமிழமுதம் - 12: திசைமுகன் செய்த முட்டையும் ககன முட்டையும்
கதிரவன், கோள்கள் குறித்த வானியல் ஆராய்ச்சிகள் அயல்நாடுகளில் விரிவாக நடந்தன; நடந்துகொண்டுள்ளன. மிகுந்த எதிர்ப்புகளுக்குப் பிறகே அவற்றில் பல ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கதிரவன், கோள்கள் குறித்த வானியல் ஆராய்ச்சிகள் அயல்நாடுகளில் விரிவாக நடந்தன; நடந்துகொண்டுள்ளன. மிகுந்த எதிர்ப்புகளுக்குப் பிறகே அவற்றில் பல ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மாணிக்கவாசகப் பெருமான், திருவாசகம் 'திருவண்டப் பகுதி'யில் இறைவனின் பெருமையைப் பேசும்போது, 'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்' என்று குறிப்பிடுகிறார். 'அண்டம் எனப்படும் பேருலகின் பகுதியாகச் சுழலும் எண்ணற்ற உருண்டை வடிவான கோள்கள்' என்று இதற்குப் பெரியோர்கள் விளக்கம் சொன்னார்கள். மிகப்பெரிய அறிவியல் செய்தியை, இறைச் சிந்தனையுடன் சேர்த்துத் தனது படைப்பில் மாணிக்கவாசகர் சொன்னது மிக வியப்புதான்.
காப்பியத்தில், கதைப்போக்கோடு சேர்த்து கம்பன் பயன்படுத்தும் சில சொற்களும் நமக்கு வியப்பைத் தரத்தான் செய்கின்றன. சீதையைத் தேடிச் சென்ற அனுமன், இலங்கையில் இருக்கும் அசோகவனம் என்னும் இடத்தில் அவள் சிறை வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தான். செய்தியை இராமனிடம் சொல்ல, விரைந்து வந்த அனுமன், இராமன் அமர்ந்திருந்த திசையில் கால் நீட்டி, சீதை இருந்த திசையில் தலை தரையில் படுமாறு வைத்து வணங்கினான்.
Advertisement
குறிப்பினால் உணரவல்ல இராமன், 'இவன் சீதையைப் பார்த்துவிட்டான்; அவள் நலமுடன் இருக்கிறாள்' என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டான்.
அதன் பின்னரே, தான் சீதையைப் பார்த்ததை இராமனிடம் சொல்லத்தொடங்கினான் அனுமன்.
'எனது கண்களால் சீதையை நான் கண்டேன். அவள் நலமுடன் எந்த மாற்றமும் இன்றி இருக்கிறாள்; உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாள்; தவம், அவளைத் தவமிருந்து பெற்றிருக்கிறது!' என்றெல்லாம் பலவாறாக வியந்து சொல்கிறான் அனுமன்.
'இராமா! சீதையை, இராவணன் தீண்டக்கூட இல்லை' என்று கூறிய அனுமன், அதற்குச் சான்றாக சிலவற்றைச் சொன்னான். இதுதான் கம்பனின் கவிதை.
தீண்டிலன் என்னும் வாய்மை, திசைமுகன்
செய்த முட்டை
கீண்டிலது; அனந்தன் உச்சி கிழிந்திலது;
எழுந்து வேலை
மீண்டில; சுடர்கள் யாவும் விழிந்தில;
வேதம் செய்கை
மாண்டிலது; என்னும் தன்மை வாய்மையால்
உணர்தி மன்னோ!
'ஆதிசேடப் பாம்பின் தலை வெடித்துச் சிதறவில்லை; கடல் பொங்கி வரவில்லை; விண்மீன்களும் சூரிய சந்திரரும் கீழே விழுந்துவிடவில்லை; வேதம் தனது செயல்களில் மாறவில்லை.' இப்படியெல்லாம் சொன்ன அனுமன் மற்றொன்றைச் சொன்னான். பிரமன் படைத்த, முட்டை வடிவிலான இந்த உலகம் பிளக்கவில்லை.'
உலகத்தின் வடிவத்தை 'முட்டை' என்று கம்பன் குறிப்பிட்டுள்ளது வியப்புதான். இதே உதாரணத்தை, இரணியனுக்கும் அவன் மகன் பிரகலாதனுக்கும் நடந்த விவாதத்திலும் குறிப்பிடுகிறான் கம்பன்.
'இறைவன் தூணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்' என்று பிரகலாதன் எதிர்வாதம் செய்ததும் கடும் கோபம் கொண்டான் இரணியன், 'இந்தத் தூணில் இருக்கிறானா?' என்று கேட்டு, அந்தத் தூணைத் தனது கையால் அறைந்தான். தூண் பிளந்தது; நரசிம்மம் வெளிப்பட்டது. கம்பன் கவிதையைப் பார்க்கலாம்.
பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது,
சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம்
முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார்
அறிந்து அறையகிற்பார்?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது,
கீழும் மேலும்
நரசிம்மம் தோன்றியதால் என்ன நிகழ்ந்தது என்பதைச் சொல்ல, தனது கற்பனைக் குதிரையை விரட்டுகிறான் கம்பன்.
'தூண் பிளந்தது; நரசிம்மம் வெளிப்பட்டது; எட்டுத் திசைகளையும் நிரப்புவதுபோல அதன் உருவம் பெரிதாகிக்கொண்டே போனது; அண்டம் முழுவதையும் அளப்பதுபோல அதன் உருவம் மிகப் பெரிதானது; அண்டத்துக்கு அப்பால் நிகழ்ந்ததை அறிந்து சொல்ல வல்லவர் யார்? இப்படிச் சொன்ன கம்பன், 'அண்டவெளியில் அடங்கிய உலக முட்டை மேலும் கீழுமாகப் பிளந்தது' என்று இந்தக் கவிதையை முடிக்கிறான்.
'திசைமுகன் செய்த முட்டை' என்றும், 'ககன முட்டை' என்றும் உலகினைக் கம்பன் சொல்லியிருப்பது, வியந்து பார்க்க வைக்கிறது!