முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 22-09-2024

மருத்துவர் சுதா சேஷய்யனின் நியமனத்தை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வது தமிழக முதல்வரின் கையில்தான் இருக்கிறது.

Updated On : 29 செப்டம்பர், 2024 at 12:58 PM
பகிர்:
Updated On : 29 செப்டம்பர், 2024 at 12:54 PM

மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகத் துணைத் தலைவர் இல்லாமல் செயல்படுகிறது என்கிற வருத்தம், தமிழறிஞர்கள் மட்டுமல்லாமல் எல்லா தமிழார்வலர்களுக்கும் இருந்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதன் துணைத் தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டிருக்கிறார். தகுதியான நபருக்குத் தகுதியான பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

அவர் மருத்துவப் பேராசிரியர் என்பதும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், துணைவேந்தராகவும் இருந்தவர் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். சங்க இலக்கியமானாலும், சமய இலக்கியமானாலும்; காப்பியங்களானாலும், புதின இலக்கியமானாலும்; கம்பனானாலும், பாரதியானாலும் ஒருசேரப் புலமை வாய்ந்த ஒருவர் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது, மெத்தச் சரியான தேர்வு.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை வழிநடத்துவதற்கான தகுதி, தமிழில் புலமை என்பதில் நின்றுவிடாது; அடங்கிவிடாது. தமிழைப் போலவே சம்ஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் புரிதல் உள்ள ஒருவர்தான் அந்தப் பதவியை வகிப்பதற்குத் தகுதியானவர். என்னதான் தனித்தமிழ் குறித்துப் பேசினாலும், சம்ஸ்கிருதத்துடனான ஒப்பீட்டுப் பார்வை இல்லாமல் தமிழாய்வு என்பது முழுமையாகாது.

Advertisement

இதற்கு முன்பு துணைத் தலைவராக இருந்த முனைவர் தெ.ஞானசுந்தரம் சம்ஸ்கிருதம், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்ற மூத்த தமிழறிஞர். அவரைத் தொடர்ந்து அந்தப் பதவியில் அமர்வதற்கு மருத்துவர் சுதா சேஷய்யனைவிடவும் தகுதியும், திறமையும் கொண்ட இன்னொருவர் இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், 16 ஆண்டுகள் கடந்தும்கூட இன்னும் எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை என்பதுதான் உண்மை. தொடங்கும்போது, தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இருந்த தமிழார்வமும், செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை வடிவமைக்கும் உற்சாகமும் அவருக்குப் பின்னால் முதல்வரானவர்களுக்கு இருக்கவில்லை. முதல்வர்தான் அந்த அமைப்பின் தலைவர் என்பதால், தனது அரசு நிர்வாகப் பணிகளுக்கு இடையில், செம்மொழி நிறுவனத்தில் கவனம் செலுத்த அவர்களுக்கு நேரமுமில்லை, ஆர்வமும் இல்லை. அதற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துப் பெறுவதில்கூட கருணாநிதிக்குப் பின்னால் வந்த முதல்வர்கள் அக்கறை செலுத்தவில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

டாக்டா் சுதா சேஷய்யன்

மருத்துவர் சுதா சேஷய்யன், எந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் ஈடுபாட்டுடன் அதில் செயல்படுபவர். முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய, ஆன்மிக நூல்களை எழுதி இருப்பதுடன் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தைத் தமிழில் கொண்டுவந்ததில் பெரும் பங்காற்றியவர். புதிய ஆய்வுகளுக்கு வழிகோலவும், படைப்புகளை ஊக்குவிக்கவும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் செயல்பட அவரது நியமனம் நிச்சயமாக உதவும். மத்திய அரசுடனான அவரது தொடர்புகள் போதிய நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு வழிகோலும்.

துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாலேயே செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சுறுசுறுப்பாக இயங்கிவிட முடியாது. அதன் தலைவராக இருப்பவர் தமிழக முதல்வர். குறைந்தது மாதம் ஒரு தடவையாவது அவர் சில மணி நேரங்களை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்காக ஒதுக்கினால் மட்டுமே, அவரது தந்தையார் கருணாநிதி கனவுகண்ட பாதையில் அதன் செயல்பாடுகள் அமையும்.

மருத்துவர் சுதா சேஷய்யனின் நியமனத்தை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வது தமிழக முதல்வரின் கையில்தான் இருக்கிறது.

Updated On : 29 செப்டம்பர், 2024 at 12:54 PM

----------------

பாரதிசுகுமாரனிடம் இருந்து, சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் திருக்குறள் மாநாட்டின் அழைப்பு வந்திருந்தது. அந்த மாநாட்டில் 133 ஆளுமைகள் திருக்குறளின் 133 அதிகாரங்கள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது. அதில் கலந்துகொள்ள இயலவில்லை. பாரதிசுகுமாரன் மன்னிக்க வேண்டும்.

அந்தத் தொகுப்புகளை விமர்சனத்துக்கு அனுப்பித் தந்திருக்கிறார் அவர். அணிந்துரை வழங்கி இருக்கும் காவல் துறை துணைத் தலைவர் முனைவர் இரா.திருநாவுக்கரசு இ.கா.ப. கூறியிருப்பதுபோல, 133 ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமிருந்து 133 கட்டுரைகளைப் பெற்று, தொகுத்து ஒரு மாபெரும் அறிவுப் பெட்டகத்தை உருவாக்கி இருக்கும் பாரதிசுகுமாரனின் தமிழ்ச் சாதனையையும், திருக்குறளின் மீதுள்ள விடாப் பற்றினையும் எண்ணி நானும் வியந்தேன்.

ஒவ்வொரு அதிகாரம் குறித்தும், வெவ்வேறு ஆளுமைகளின் பார்வையில் பதிவு செய்தல் என்பது வித்தியாசமான சிந்தனை. இந்தத் தொகுப்பை வெளிக்கொணரப் புரவலராக இருந்து உதவிய டாக்டர் வி.ஜி.சந்தோசத்தையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

- SWAMINATHAN
Updated On : 29 செப்டம்பர், 2024 at 12:54 PM

----------------

மீலாது நபி திருநாளை ஒட்டி எழுத வேண்டும் என்று நான் எடுத்து வைத்திருந்த புத்தகம் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் எழுதிய 'நபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும்'. காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் சாயபு மரைக்காயர்.

இந்தப் புத்தகத்தின் முதற் பகுதி நபிகள் நாயகத்தின் வாழ்க்கைச் சுருக்கம்; இரண்டாவது பகுதி, அவரது வாழ்வில் நடந்த நாற்பது சுவையான நிகழ்ச்சிகளின் தொகுப்பு; மூன்றாவது பகுதி, அவருடைய தேர்ந்தெடுத்த நல்லுரைகளின் திரட்டு; நான்காவது பகுதி, நபிகள் நாயகம் குறித்த நல்லறிஞர்களின் கருத்துக்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்திருக்கும் பேராசிரியரின் ஆன்மிக அருட்கொடை இந்தச் சிறிய புத்தகம்!

----------------

Updated On : 29 செப்டம்பர், 2024 at 12:54 PM

கவிஞர் செந்திருவின் நான்காவது கவிதைத் தொகுப்பு 'காடு தொலைத்த பறவை'. கோவை மாவட்டம் சூலூரை அடுத்த சோமனூரைச் சேர்ந்த கவிஞர் செந்திருவின் இயற்பெயர் அ.செந்தில்குமார். பொள்ளாச்சி ரெட்டியாரூர் நல்லமுத்துக்கவுண்டர் நாச்சிமுத்துக்கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றும் கவிஞர் செந்திரு இதற்கு முன்னால் மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

சுருக்கென்று குத்துகிறது அவரது இந்தக் கவிதை -

கல்லறையில்

காத்திருப்போர்

கூடம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.